முகப்பு
தினமணி கதிர்

சாதனை: திருக்குறள்...நாலாயிர திவ்யப்பிரபந்தம்...ஓவியம்!

சென்னை போன்ற பெருநகரங்களில் ஓவியக் கண்காட்சி என்பது புதிய விஷயமல்ல. நகரத்தின் மூலை முடுக்குகளில் எங்காவது ஓர் இடத்தில் ஓவியக் கண்காட்சிகள் ஆண்டு முழுக்க நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சென்னை அரும்பாக

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:08 PM
பகிர்:

சென்னை போன்ற பெருநகரங்களில் ஓவியக் கண்காட்சி என்பது புதிய விஷயமல்ல. நகரத்தின் மூலை முடுக்குகளில் எங்காவது ஓர் இடத்தில் ஓவியக் கண்காட்சிகள் ஆண்டு முழுக்க நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. சென்னை அரும்பாக்கம் கோலப் பெருமாள் செட்டி வைஷ்ணவ சீனியர் செகண்டரி பள்ளியில் ஒரு வித்தியாசமான ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஓவியங்களை வரைந்தவர் அந்தப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவி. பெயர் கீர்த்தி. வரைந்த ஓவியங்களோ வித்தியாசமானவை. நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலும், ஆண்டாள் திருப்பாவையிலும் 87 பாடல்களை எடுத்துக் கொண்டு அதற்கு ஓவியம் வரைந்திருந்தார் கீர்த்தி.

ஆங்கில வழிக் கல்வி பயிலும் இன்றைய மாணவர்கள் தமிழ் இலக்கியங்களில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கீர்த்தி இதற்கு முன்பு 1333 திருக்குறளுக்கும் ஓவியம் வரைந்து கடந்த ஆண்டு கண்காட்சி நடத்தினார். இப்போது நாலாயிர திவ்யப் பிரபந்தம்...

கீர்த்தியிடம் இப்படிப்பட்ட ஓவியங்களை வரைய வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது? என்று கேட்டோம்.

'யாரும் செய்யாத ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். பழைய தமிழ் இலக்கியப் பாடல்களுக்கு இதுவரை யாரும் ஓவியம் வரைந்ததில்லை. என் அம்மா கல்பனாவிடம் இதைப் பற்றிக் கேட்டேன். அவர் எம்.ஏ., எம்.ஃபில், பி.எட் படித்தவர். என்னையும், என் தங்கையையும் நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் வேலைக்குப் போகவில்லை. நான் இப்படிக் கேட்டதும், திருக்குறளை ஓவியமாக வரையலாம் என்று சொன்னார். ஒவ்வொரு திருக்குறளுக்கும் அவர் பொருள் சொல்லச் சொல்ல அதை நான் மிகவும் கவனமாகக் கேட்பேன். பின்பு அந்தக் குறளுக்கு எப்படிப் படம் வரையலாம் என்று கற்பனை செய்து பார்ப்பேன். இறுதியில் வரைந்து விட்டேன். திருக்குறள் முழுவதற்கும் படம் வரைந்து முடிப்பதற்கு 3 மாதங்கள் தேவைப்பட்டன. அந்தக் கண்காட்சியை இறையன்பு ஐ.ஏ.எஸ். துவக்கி வைத்தார். என் ஓவியங்களைப் பார்த்துவிட்டு அவர் மிகவும் பாராட்டினார். அதற்குப் பின்பு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கும், ஆண்டாள் திருப்பாவையின் சில பாடல்களுக்கும் ஓவியம் வரைய விரும்பினேன்.'' என்கிறார் கீர்த்தி மகிழ்ச்சியுடன்.

'பள்ளியில் சக மாணவர்கள் பொறாமையாகப் பார்ப்பதில்லையா?'' என்று கேட்டோம்.

'அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என்னை எல்லாரும் பாராட்டுகிறார்கள். ஊக்குவிக்கிறார்கள். பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் உற்சாகமூட்டுகிறார்கள். ஓவிய ஆசிரியர் ரேணுபாரதி எனக்குத் தனிப்பட்டமுறையில் ஓவியப் பயிற்சி தருகிறார். தமிழாசிரியைகள் ராஜலெக்ஷ்மி, விஜயலக்ஷ்மி இருவரும் எனக்குப் பலவிதங்களில் உதவினார்கள்'' என்கிறார் நன்றியுடன்.

உங்கள் ஓவியக் கண்காட்சியைப் பள்ளியில் எப்படி நடத்தினீர்கள்? என்று கேட்டோம்.

'எங்கள் பள்ளியின் பிரின்சிபால் நீலகண்டபிள்ளை, தாளாளர் கோவிந்ததாஸ் இருவரும் எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அவர்கள் ஏற்பாட்டின்படிதான் நான் படிக்கும் இந்தப் பள்ளியிலேயே எனது ஓவியக் கண்காட்சிகள் நடைபெற்றன. எங்கள் பள்ளியில் மாணவர்களின் பல்வேறு திறமைகளை வளர்ப்பதற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். நான் திருக்குறளுக்கான ஓவியக் கண்காட்சியை நடத்தி முடித்ததுமே இனிமேல் நான் பள்ளிக்கு எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.''

படம் வரைவதில் ஆர்வமாக எந்நேரமும் படம் வரைந்து கொண்டேயிருந்தால் படிக்க முடியுமா? என்றோம் ஆச்சரியத்துடன்.

'நான் எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கிக் கொள்கிறேன். முக்கியமாக நேரத்தை வீணாக்குவதில்லை. டிவி பார்ப்பதில்லை. பாட்டுக் கேட்பேன். ஏனென்றால் பாட்டுக் கேட்டுக் கொண்டே பிற வேலைகளைப் பார்க்கலாம். டிவி பார்த்துக் கொண்டு பிற வேலைகளைச் செய்ய முடியாது. அதுபோல பள்ளியில் மற்ற பிள்ளைகள் விளையாடப் போனால் நான் போகமாட்டேன். படம் வரைய ஆரம்பித்துவிடுவேன்.''

பழைய தமிழ் இலக்கியங்களில் உள்ள பாடல்களுக்குத்தான் படம் வரைவீர்களா? வேறு எதுவும் வரைய மாட்டீர்களா? என்று கேட்டதற்கு,' எல்லாப் படங்களும் வரைவேன். ஒருமுறை பள்ளியின் பிரின்சிபாலைப் படமாக வரைந்து அவரிடம் காட்டிப் பாராட்டுப் பெற்றேன். ஓவியத்தில் எவ்வளவு வகைகள் உள்ளனவோ அவ்வளவையும் கற்க வேண்டும் என்பதே என் ஆசை. இப்போது ஃபேப்ரிக், கிளாஸ் பெயிண்டிங், பென்சில், கிலே ஆர்ட் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.''

படம் வரைந்து கண்காட்சி நடத்தினீர்கள். அவார்டு எதுவும் கிடைக்கவில்லையா?

என்றோம்.

'திருக்குறளைப் படங்களாக வரைந்தது, கடந்த ஆண்டு லிம்கா ரிக்கார்டில் தேசிய அளவில் செய்த சாதனையாக இடம் பெற்றுள்ளது. பள்ளி மாணவர்களுக்கிடையிலான ஓவியப் போட்டிகளில் பலமுறை பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன்'' என்கிறார் கண்களில் மகிழ்ச்சியுடன்.

பள்ளியின் பிரின்சிபால் நீலகண்டபிள்ளை கீர்த்தியைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்.

'ஓவியம் வரைவதில் மட்டும் கீர்த்தி திறமையானவர் இல்லை. படிப்பிலும் படுசுட்டி. கீர்த்தியின் பெற்றோர் அவருக்கு அளிக்கும் ஊக்கம், அவர் வளர்ச்சியில் அவர்கள் காட்டும் அக்கறை மிக அதிகம்.

பொதுவாக எங்களுடைய பள்ளியில் படிப்பிலும், படிப்பைத் தவிர பிறதுறைகளில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக்கிறோம். எங்கள் பள்ளியில் படித்த சத்யன் என்ற மாணவர் டேபிள் டென்னிஸ்ஸில் சர்வதேச அளவில் விளையாடுபவர். இப்போது ஸ்வீடனில் இருக்கிறார். அவருடைய திறமையைப் பாராட்டி நான்காம் வகுப்பிலிருந்து அவர் பள்ளியிறுதித் தேர்வு எழுதும் வரை நாங்கள் அவரிடம் எந்தக் கட்டணத்தையும் வாங்கவில்லை. அதுபோலத்தான் கீர்த்தியிடமும் நாங்கள் கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. மிக மிக நன்றாகப் படித்து நிறைய மதிப்பெண்கள் எடுக்கிற மாணவர்களைவிட இப்படி பல துறைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர்களே எதிர்காலத்தில் முத்திரை பதிக்கிறார்கள் என்பது என் கருத்து. பள்ளியின் தாளாளர் கோவிந்ததாஸ் என்னுடைய முயற்சிகளுக்கு என்றும் ஆதரவாக இருந்து வருகிறார் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்'' என்கிறார் பெருமையுடன்.

ஓவிய ஆசிரியர் ரேணுபாரதி, 'கீர்த்தி ரொம்பவும் திறமையான மாணவி. ஓவியத்தில் ஆர்வம் அதிகம். அதைத் தெரிந்து கொண்ட நாங்கள் அவருக்கு உரிய வழிகாட்டுதல்கள் அளித்து வருகிறோம். குறிப்பாக அவருடைய அப்பா ஜெயசங்கர், அம்மா கல்பனா இருவரும் பள்ளிக்கு அடிக்கடி வந்து கீர்த்தியின் படிப்பு, ஓவிய முயற்சிகள் போன்றவற்றைப் பற்றி ஆசிரியர்களிடம் பேசுவார்கள். பெற்றோர் இப்படிக் குழந்தைகளிடம் அக்கறையாக இருந்தால் நிறைய சாதனை மாணவர்களை எளிதாக உருவாக்கிவிடலாம்'' என்கிறார் சிரித்துக் கொண்டே.

முழு கட்டுரையைப் படிக்க →