நான் ஒரு காபி பிரியன். காபியை நிறுத்தச் சொன்னால் என்னால் முடியாது. குறைந்தது 4 -5 முறையாவது குடிப்பேன். அதுவும் சூடாகத்தான். காபியை எப்படிக் குடித்தால் ஆரோக்கியம் கெடாமல் பார்த்துக் கொள்ள முடியும்?
ரவீந்திரன், சென்னை.
காபி பிரியர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கும் இந்தக் காலகட்டத்தில் "அதை நிறுத்திவிடுங்கள்' என்று கூறுவது காலத்திற்குப் பொருந்தாத பதிலாகத்தான் இருக்கும். அதனால் உடல் நலம் கெடாமல் அதேசமயத்தில் காபி குடித்த இன்பத்தையும் பெற நீங்கள் சில விஷயங்களைக் காபி குடிக்கும்போது கவனத்தில் கொள்ளவும்.
காலையில் எழுந்ததும், பல் தேய்த்து, நாக்கு வழித்து வாய் கொப்பளித்த பிறகு, வெறும் வயிற்றில் சூடான காபியை உடனே அருந்த வேண்டாம். இரைப்பையினுள்ளே அமைந்துள்ள சவ்வுப் பகுதியில் சூடான காபி வந்து இறங்கினால் புண் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே வயிற்றில் புண் இருந்தால் அது மேலும் வளர்ந்துவிடும். இதைத் தவிர்க்க வெந்நீர் ஒரு டம்ளர் காலையில் இதமாக அருந்திவிட்டு சுமார் 15 - 20 நிமிடங்களுக்குப் பிறகு காபி குடிக்கலாம். இதனால் வயிற்றில் உறுத்தல் ஏதும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். சூடான
காபியைக் குடிக்கப் போகிறோமே என்று எண்ணி, வயிற்றைக் குளிர்ச்சி செய்து கொள்வோம் என்று கருதி, காபிக்கு முன்பாக மிகக் குளிர்ச்சியான தண்ணீரைக் குடிக்கக் கூடாது. இரத்தத்தில் உள்ள சேமிப்புச் சத்தான கலோரி அளவானது காபியை வெறும் வயிற்றில் அருந்துவதால் குறைந்து விடுகிறது. காபி கலோரி சத்தை எரித்துவிடுவதால் களைப்பு, ஆயாசம் போன்றவை பின்விளைவாக ஏற்படக்கூடும்.
2- 3 வேளை காபி சாப்பிடுவதால் ஏற்படும் கெடுதல்களை உடல் தானே சரி செய் து விடும். அதனால் நீங்கள் மூன்று காபிக்கும் மேல் போகாமல் பார்த்துக் கொள்ளவும். மாலை வேளைக்குப் பிறகு இரவில் காபி குடிப்பதைத் தவிர்க்கவும். நரம்புகளின் நலம் கெட்டுவிடும் என்பதால் இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். தூக்கம் குறைவாக உள்ளவர்கள் கண்டிப்பாக இரவில் காபி குடிக்கக் கூடாது.
காய்ச்சல் உள்ள போது காபி குடித்தால் உடலின் சூடு மேலும் கூட வாய்ப்பிருப்பதால், காய்ச்சலைக் குறைக்கும் மாத்திரைகளின் வீரியம் குறைந்துவிடும். அதனால் காய்ச்சல் இருக்கும்போது காபியைத் தவிர்க்க வேண்டும்.
சிலருக்கு சிக்கிரி கலந்த காபித் தூள் ஒருவித மயக்கத்தைத் தருவதால் அதைத் தவிர்ப்பது நலமே. அஸ்கா சர்க்கரை உடலில் இருக்கும் பி விட்டமினை அப்புறப்படுத்தும் சக்தி இருப்பதால் காலையில் வெறும் வயிற்றில் காபி அருந்தும்போது சர்க்கரை குறைவாக இருப்பது நல்லது. இப்படி சர்க்கரையைக் குறைப்பதால் உடலின் சேமிப்புச் சக்தி சீராக நாள் முழுவதும் இருக்கும்.
நீங்கள் சூடாக அருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இருந்தாலும் காபியை மிகச் சூடாகக் குடிப்பதையும்,
ஃப்ரிட்ஜில் இருந்து காபி டிக்காஷனை எடுத்து மீண்டும் சூடு செய்து அருந்துவதையும் தவிர்க்க வேண்டும். இதனால் வயிற்றில் செரிமானம் கெடக் கூடும்.
சிறுநீரகத்தைத் தூண்டிவிடும் இயல்பு காபிக்கு இருப்பதால் அதன் பயன்பாடு அளவுடன் இருப்பதே நலம். கோடை நாட்களில் மதியம் காப்பி குடிப்பதைத் தவிர்த்து காலை, மாலை குடிக்கலாம்.
அதிக காபியால் நேரும் கெடுதல்களைப் பழச்சாறு, நெல்லிக்காய், மோர், நன்னாரி சர்பத் விலக்கிவிடும் இயல்புள்ளவை. அதனால் அதிகம் காபி குடிக்கும் பழக்கம் உள்ள நீங்கள் இவற்றை இயன்றவரை தினசரி உணவில் சேர்த்து வரவும்.
நல்ல அம்சங்கள் நிறைந்த நம்நாட்டு பழக்க வழக்கங்களின் உள்ளே புகுந்துவிட்ட, வெளிநாட்டுப் பழக்கமான காபியை விடமுடியாத நிலையிலுள்ள தாங்கள் மேற்படி முறைகளைக் கையாண்டு ஆரோக்கியத்திற்கான அடித்தளம் பாழாகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.