சேவை: மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு
ஒரு வீட்டில் உடற்குறைபாடுகளுடனோ, மன வளர்ச்சியில்லாமலோ ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்தக் குழந்தையின் பெற்றோர் படும் துயரைச் சொல்ல சொற்கள் இல்லை. குறைபாடுகள் உள்ள குழந்தையை வளர்த்து அதைச் சுயமாக வாழும்
ஒரு வீட்டில் உடற்குறைபாடுகளுடனோ, மன வளர்ச்சியில்லாமலோ ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அந்தக் குழந்தையின் பெற்றோர் படும் துயரைச் சொல்ல சொற்கள் இல்லை. குறைபாடுகள் உள்ள குழந்தையை வளர்த்து அதைச் சுயமாக வாழும் நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய மாபெரும் கடமை பெற்றோரை எப்போதும் அச்சுறுத்திக் கொண்டேயிருக்கும்.
இப்படிப் பிறந்துவிட்ட குழந்தைகளின் நல்வாழ்வுக்கு அரசு என்னென்ன திட்டங்களை வைத்திருக்கிறது? என்பது நிறையப் பெற்றோருக்குத் தெரிவதில்லை. தங்களுக்கு குறைபாடு உள்ள குழந்தை பிறந்துவிட்டதே என்று தலைவிதியை நொந்து கொண்டு வாழ்பவர்களே அதிகம்.
மாற்றுத் திறனுடைய குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவே அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது. அது அளிக்கும் நலத்திட்டங்களைப் பற்றி எத்தனை பெற்றோருக்குத் தெரியும்?
""மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் தேசிய அடையாள அட்டை 2005-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்களின் கீழ் உதவி பெற இந்த அடையாள அட்டை அவசியம். இதுவே நிறையப் பெற்றோருக்குத் தெரிவதில்லை'' என்கிறார் சியாமளா.
சியாமளா திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலராக இருக்கிறார். தமிழ்நாட்டிலேயே இந்தப் பொறுப்புக்கு வந்த முதல் பெண் சியாமளாதான். கணவர் விஜயரங்கன் பள்ளி ஆசிரியர். ஸ்ரீராமுலு, ராமசேஷன் என்ற இரு மகன்களுக்குத் தாயான சியாமளா படித்தது, எம்.ஏ. சோசியல் வொர்க், எம்.ஏ. சமூகவியல்.
மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டோம்.
""மாற்றுத் திறனாளிகளுக்கு எதில் குறை? எந்த அளவுக்குக் குறை? என்பதை அந்தந்தத் துறையின் வல்லுநராக உள்ள மருத்துவர் மதிப்பிட்டு சான்றிதழ் தருவார். உதாரணமாக உடல் உறுப்புகளில் குறைபாடு உள்ளவர்களுக்குச் சான்றிதழ் தரும்போது, ஒருவருக்கு ஒரு விரல் இல்லையென்றால் குறைபாடு 5 சதவீதம் என்று மருத்துவர் மதிப்பிடுவார். உடலின் ஒருபக்கம் கை, கால் செயல்படவில்லையென்றால் உடற்குறைபாடு 60 சதவீதமாக மதிப்பிடுவார். இரண்டு கைகளும், கால்களும் செயல்படவில்லையென்றால் 100 சதவீதம் குறைபாடு இருப்பதாக மதிப்பிடுவார். திருச்சியில் உள்ள எங்கள் அலுவலகத்துக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகின்றனர். மாற்றுத் திறனாளிகள் அவரிடமே சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம். இதுபோல கண்பார்வைக் குறைவு, காது கேளாமை, மன வளர்ச்சிக் குறைவு போன்றவற்றிற்கு அந்தந்தத் துறை மருத்துவர்களின் மதிப்பீடு அவசியம். இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் சுகாதாரத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குகிறோம். மாற்றுத் திறனாளிகள் செய்ய வேண்டியதெல்லாம் மூன்று புகைப்படங்களுடன் வர வேண்டியதுதான். இது திருச்சியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க உள்ள நடைமுறை'' என்கிறார்.
அடையாள அட்டையை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்றோம்.
""என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற இந்த அடையாள அட்டை அவசியமானது. உதாரணமாக காது கேளாத இளம் சிறாருக்கான பயிற்சி மையம் உள்ளது. இந்த அடையாள அட்டையை வாங்கிக் கொண்டு காது கேளாத 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த மையத்திற்கு அழைத்து வந்தால், அங்கே பயிற்சிகள் தரப்படுகின்றன. காது கேட்பதற்காக காது கேட்கும் கருவியும் தரப்படுகிறது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு 3 வயதிலேயே பேச்சு வந்துவிடுகிறது. அதுபோல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் மாவட்ட அளவில் பயிற்சி மையங்கள் உள்ளன. 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மையங்களில் பயிற்சி தருகிறார்கள். பிஸியோதெரபி, பேச்சுப் பயிற்சி உட்பட 6 வகையான பயிற்சிகள் இந்த மையங்களில் தரப்படுகின்றன. 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு தமிழ்நாட்டில் திருச்சி உட்பட 10 மாவட்டங்களில் காப்பகங்கள் உள்ளன. அங்கே தொழிற்பயிற்சிகள் தரப்படுகின்றன. பேக்கரித் தொழில், ஃபைல் தயாரித்தல், கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரித்தல் போன்றவை கற்றுக் கொடுக்கப்படுகின்றன. கணினிப் பயிற்சியும் தரப்படுகிறது'' என்றார்.
மனவளர்ச்சி குன்றியோருக்குப் பயிற்சி மையங்கள் உள்ளன என்கிறீர்கள். சாலையில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட பலரை நாம் பார்க்க நேர்கிறது. இவர்களைப் போன்றோருக்கான நலத்திட்டங்கள் எதுவும் இல்லையா? என்று கேட்டோம்.
""ஏன் இல்லை? அவர்களுக்கும் மனநல காப்பகங்கள் உள்ளன. அவர்கள் அங்கே பாதுகாக்கப்படுகிறார்கள். இன்னொரு விஷயத்தை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள். தசைச் சிதைவு நோய் என்ற கொடிய நோய் உள்ளது. இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இந்த நோய் வந்தால், தசையில் உள்ள திசுக்கள் அழிந்துகொண்டே வரும். தசையின் ஆற்றல் குறைந்து கொண்டே வரும். ஒரு குறிப்பிட்ட நிலையில் எந்த வேலையையும் செய்ய முடியாது. தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பகல் நேரக் காப்பகம் உள்ளது. இங்கே வருபவர்களுக்குத் தசைப் பயிற்சி தருகிறோம். பிஸியோதெரபி பயிற்சி தருகிறோம். தினமும் அவர்கள் இங்கே வந்துவிட்டுப் போக வேண்டும். அப்படி வருபவர்கள் தினமும் வந்துவிட்டுப் போவது சிரமமாக இருக்கிறது என்கிறார்கள். நிரந்தரமாகத் தங்கினால் நன்றாக இருக்கும் என்கிறார்கள். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.'' என்கிறார் சியாமளா.
மாற்றுத் திறனாளிகளில் பலர் வசதியானவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்களால் பயன் இருக்கிறதா? என்று கேட்டதற்கு,"" மாற்றுத் திறனாளிகள் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு எந்த வருமான வரம்பும் கிடையாது. இதனால் இப்போதெல்லாம் நல்ல வசதியான வீட்டுப் பிள்ளைகளெல்லாம் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு வருகிறார்கள்'' என்றார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேறு என்னவெல்லாம செய்கிறது? என்று கேட்டோம் ஆவலுடன்.
""ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிக் கல்வி வரை மாற்றுத் திறனாளிகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசுக் கல்லூரிகளில் அவர்களுக்கு கல்விக் கட்டணம் இல்லை. அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குக் கட்டணம் இல்லை. உடற்குறைபாடு உள்ளவர்களுக்கு மூன்று சக்கர வாகனம், பூட்ஸ், ஊன்றுகோல், செயற்கைக் கால், மோட்டார் பொருத்தப்பட்ட வாகனம் போன்றவற்றைத் தருகிறோம். காது கேளாதோருக்குக் காது கேட்கும் கருவியை சூரிய ஒளி பேட்டரியுடன் தருகிறோம். கண் தெரியாதவர்களுக்குக் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல், நேரம் பார்க்க ப்ரெய்லி கைக்கடிகாரம் எல்லாம் தருகிறோம். மாற்றுத் திறனாளிகள் பெட்டிக் கடை, தையல் கடை, இட்லிக் கடை போன்றவற்றை வைத்து பிழைக்க எண்ணினால் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் அதிகபட்சமாகக் கடன் தருகிறோம். அதில் 3 ஆயிரம் ரூபாய் மானியம். இந்தக் கடன் 18 வயதுக்கு மேற்பட்டு 45 வயதுக்குட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர, 75 சதவீதத்துக்கும் மேல் ஊனமுற்றவர்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறோம். தசை வலுவிழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த உதவித் தொகை உண்டு. இந்தத் தொகையைப் பெற மாற்றுத் திறனாளிகள் நேரடியாக வந்து சிரமப்பட வேண்டியதில்லை. அவர்களுடைய முகவரிக்கு மணியார்டர் செய்துவிடுகிறோம். தேசிய ஊனமுற்றோருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தில் 25 ஆயிரம் ரூபாய் கடன் தருகிறோம். ''
எல்லாப் பள்ளி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் உள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் இல்லை. ஆனால் மாற்றுத் திறனாளியான கல்லூரி மாணவருக்குப் பஸ் கட்டணம் நான்கில் ஒரு பங்குதான். அவருடன் உதவியாளர் ஒருவரும் செல்லலாம். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்குத் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதில் 12,500 ரூபாய் ரொக்கமாகவும், 12,500 ரூபாய் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்குகிறோம்'' என்றார்.
மாவட்ட அளவில் இவ்வளவு வேலைகளையும் செய்வதில் பெண் என்ற முறையில் உங்களுக்குச் சிரமமாக இல்லையா? என்று கேட்டோம்.
"ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் பெண்களும் செய்ய முடியும். எனவே வேலையில் எனக்கு எந்தவிதச் சிரமமுமில்லை. எனது சேவைக்காக 2008 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடமிருந்து பாராட்டுச் சான்றிதழ் பெற்றேன். எனது மகன்களும், கணவர் விஜயரங்கனும் எனது பணிகளுக்கு ஊக்கம் அளிப்பவர்களாகவே எப்போதும் இருக்கிறார்கள்'' என்கிறார் சிரித்துக் கொண்டே.