முகப்பு
தினமணி கதிர்

விளையாட்டு: இதயம் முழுக்க இறகுப் பந்து!

விளையாட்டுகள் பல இருந்தாலும் இறகுப்பந்து விளையாட்டிற்கு தனி மவுசு உள்ளது. உலக அளவில் விளையாடப்படும் இந்த விளையாட்டிற்குக் ..

Updated On : 20 செப்டம்பர், 2012 at 9:04 PM
பகிர்:
Updated On : 27 டிசம்பர், 2023 at 11:46 PM

""விளையாட்டுகள் பல இருந்தாலும் இறகுப்பந்து விளையாட்டிற்கு தனி மவுசு உள்ளது.

உலக அளவில் விளையாடப்படும் இந்த விளையாட்டிற்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்'' என உறுதியாகக் கூற இயலும் என்கிறார் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஏ.கே.சுதர்சன்.

  இறகுப்பந்து விளையாட்டில் தேசிய அளவிலான பல போட்டிகளில் தமிழக அணிக்காக விளையாடி உள்ளார். இவர் வாங்கிய பரிசு, கோப்பைகளை வீட்டில் வைப்பதற்கு இடமில்லாமல், அட்டைப் பெட்டிகளில் வைத்துக் கட்டிவைத்துள்ளார்.

Advertisement

  பரிசு வாங்க வேண்டும் என லட்சியத்தோடு விளையாடி வரும் இவரை சந்தித்துப் பேசினோம்.

  எந்த வயதில் விளையாடத் துவங்கினீர்கள்?

 நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது பொழுதுபோக்கிற்காக விளையாடத் துவங்கினேன்.

  எனது தந்தை ஏ.கலையரசன் தினசரி காலை நேரம் நண்பர்களுடன் இறகுப்பந்து விளையாடச் செல்வார். எனக்கு ஏழு வயது இருந்தபோது நான் எனது தந்தையுடன் விளையாட்டை வேடிக்கை பார்க்கச் செல்வேன். வேடிக்கை பார்க்க வந்த எனக்கு இந்த விளையாட்டு மீது ஆர்வம் ஏற்பட்டது.

  முதலில் எந்தப் போட்டியில் கலந்து கொண்டீர்கள்?

9 வயதில் சிவகாசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டேன். இதில் நான் வெற்றி பெறவில்லை. எனினும் இந்த விளையாட்டில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என எனக்குள் ஒரு வேகம் உண்டானது.

  இதையடுத்து மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, பத்து வயதில் அம்பத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டேன். இதில் இரண்டாமிடம் பெற்றது எனக்குள் ஒரு ஆர்வத்தை தூண்டியது.

  தேசிய அளவிலான போட்டியில் எப்போது கலந்து கொண்டீர்கள்?

  2003-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஸ்ரீமனிகிருஷ்ணகெய்தான் நினைவு அகில இந்திய ஜூனியர் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றேன்.

  உங்களால் மறக்க முடியாத போட்டி எது?

  2010 ஜனவரி மாதம் போபாலில் நடைபெற்ற 19 வயதுக்குள்பட்டோர் பிரிவில் தமிழ்நாட்டுக்காக என்னோடு சேர்ந்து 5 பேர் விளையாடினார்கள். அப்போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. தமிழ்நாட்டிற்காக விளையாடி வெற்றி பெற்றது என்னால் மறக்க முடியாது.   மேலும் கடந்த செப்டம்பர் மாதம் சிவகாசியில் நடைபெற்ற தென்மண்டல அளவிலான மாநிலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் தமிழக அணிக்கு விளையாடி மூன்றாமிடம் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.

  இதுவரை எத்தனை போட்டிகளில் கலந்துள்ளீர்கள்?

  மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் சுமார் 140 போட்டிகளில் கலந்துள்ளேன்.

  தினசரி பயிற்சி செய்வீர்களா?

  ஞாயிற்றுக்கிழமை தவிர சிவகாசிக்குச் சென்று தினசரி காலை, மாலை பயிற்சி பெற்று வருகிறேன். ராஜீவ்காந்தி என்பவர் பயிற்சி அளிக்கிறார்.

  உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

  படிப்பைப் பொறுத்தவரை பொறியியல் கல்லூரியில் சேர உள்ளேன். விளையாட்டினைப் பொறுத்தவரை சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே எனது லட்சியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.