சேவை: கந்து வட்டிக் கொடுமையை ஒழித்தோம்!
"கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பது கம்பராமாயண வரிகள். அன்று முதல் இன்றுவரை கடன்பட்ட நெஞ்சங்கள் கலங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. கடனை வாங்கிவிட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போ
"கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்பது கம்பராமாயண வரிகள். அன்று முதல் இன்றுவரை கடன்பட்ட நெஞ்சங்கள் கலங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. கடனை வாங்கிவிட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு போகிறவர்கள் ஒரு சிலரே. வாழ்க்கையைக் கந்து வட்டிக்காரர்களிடம் அடகு வைத்துவிட்டு அதை மீட்க முடியாமல் தவிப்பவர்கள் நிறையப் பேர்.
திருநெல்வேலி டவுன், மேலப்பாளையம், பழையபேட்டை ஆகிய பகுதிகளில் இப்படி கந்துவட்டிக்காரர்களிடம் வாழ்க்கையை அடகு வைத்தவர்களை மீட்டிருக்கிறார் ஒரு பெண்மணி. அதற்காக அவர் பெரிய பெரிய போராட்டங்களை எல்லாம் நடத்தவில்லை.
திருநெல்வேலியில் சமுதாய மேம்பாட்டுச் சங்கம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான மகளிர் சுய உதவிக் குழுக்களை நடத்திவரும் மும்தாஜ் முகமது அலிதான் அந்தப் பெண்.
""ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் நூறு ரூபாய்க்கு மாதத்திற்கு 20 ரூபாய் வட்டி வரை வசூலித்து வந்தார்கள். இதனால் ஒருமுறை கடன் வாங்கியவர்கள் அந்தக் கடனை அடைக்க இன்னொருவரிடம் கடன் வாங்கி வாழ்க்கை பூராவும் கடன்பட்டு வந்தார்கள். இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து, அதன் மூலமாக மிகக் குறைந்த வட்டியாக நூறு ரூபாய்க்கு மாதத்திற்கு 1 ரூபாய் வட்டிக்குக் கடன் தந்தோம். இதனால் பல குடும்பங்கள் இப்போது கடனிலிருந்து மீண்டு விட்டன'' என்கிறார் மும்தாஜ். அவரிடம் தொடர்ந்து பேசினோம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களில் எப்போதிருந்து ஈடுபடுகிறீர்கள்?
நான் 1998 ஆம் ஆண்டு முதன்முதலாக பொதுப் பணியில் இறங்கினேன். அதற்கு முன்பு என்னுடைய அக்காதான் சமூக சேவை செய்து வந்தார். அவர் தந்த ஊக்கத்தாலும், உற்சாகத்தாலும் நான் அப்போது சமூக சேவையில் இறங்கினேன். அப்போது பானுமதி என்பவர் நகராட்சி ஆணையராக இருந்தார். அவர் திருநெல்வேலி நகராட்சி சார்பாக, 20 பேர் கொண்ட மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைக்கச் சொன்னார். மகளிர் சுய உதவிக் குழுக்களை அமைத்து நடத்திச் செல்ல அவர்கள் படித்த பெண்களைத் தேடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நான் அப்போது அவர்களிடம் அகப்பட்டேன். நான் பி.ஏ., படித்திருந்தேன். சமுதாய மேம்பாட்டுச் சங்கம் என்ற பெயரில் அமைப்பை ஏற்படுத்தினோம். அப்போது 250 மகளிர் சுய உதவிக் குழுக்கள் வரை கட்டிச் சிறப்பாகச் செயல்பட்டோம். இப்போது 150 குழுக்கள் வரை செயல்படுகின்றன. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குப் "பாண்டியன் கிராம பேங்க்' கடன் தந்து உதவுகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் 3 இலிருந்து 4 லட்சம் ரூபாய் வரை கடன் தருகிறது. இந்தக் கடன்களை வாங்கிக் கந்துவட்டிக் கடன்களில் மாட்டிக் கொண்டிருந்த எங்கள் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவர்கள் அதிலிருந்து மீண்டார்கள்.
சில மகளிர் சுய உதவிக் குழுக்கள் சொந்தமாகவே நிதி திரட்டி வைத்திருக்கிறார்களே?
எங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலமும் வாரத்திற்கு குறைந்தபட்சம் இருபத்தைந்து ரூபாய் முதல் 125 ரூபாய் வரை பெண்கள் சேமிக்கிறார்கள். அந்தப் பணமே இப்போது ஒவ்வொரு குழுவிலும் 3-4 லட்சம் வரை உள்ளது. எனவே பேங்க்கில் கடன் வாங்காமல் இப்போது சமாளிக்க முடிகிறது.
எதற்கெல்லாம் கடன் தருகிறீர்கள்?
எங்கள் மகளிர் சுயஉதவிக் குழுவில் உள்ளவர்களில் யாருக்கு எதற்கு எப்போது பணம் தேவைப்படும் என்று யாருக்கும் தெரியாது. எனவே தேவைப்படுகிறவர்களுக்குக் கடன் தந்து உதவுவது எங்களுடைய கடமை என்று நினைக்கிறோம். எனவே எதற்குக் கடன் கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் தருகிறோம்.
உதாரணமாக, திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் கல்யாணி என்கிற பெண்ணுக்கு 3 பிள்ளைகள். அவருடைய கணவர் இறந்துவிட்டார். எங்களிடம் கடன் வாங்கி தையல் மிஷின்கள் வாங்கி தையல் தொழில் செய்து வந்தார். இப்போது அவருடைய 2 பெண்களுக்கும் 15 பவுன் நகை போட்டுக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறார். தச்சநல்லூரில் ஓர் அம்மா. பேச்சியம்மாள் என்று பெயர். அவருக்குச் சொந்தமாக இருந்த வீட்டையும் அவருடைய மகனுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார். மகன் அவரைக் கைவிட்டுவிட்டார். அவர் எங்கள் மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கிறார். அவருக்கு மகளிர் சுய உதவிக் குழு 20 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்தது. அதை வைத்து அவர் ஒரு மாவரைக்கும் இயந்திரம் ஒன்றை வாங்கி, மாவு அரைத்துக் கொடுத்து இன்று யாரையும் நம்பாமல் தன் கையே தனக்குதவி என்று வாழ்கிறார். அமுதா என்கிற மகளிர் சுய உதவிக் குழு பெண்ணுக்கு டிரைவிங் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது அவர் பெண்களுக்கு டிரைவிங் கற்றுக் கொடுத்து வருகிறார்.
இப்போது கல்வி, மருத்துவம் எல்லாம் சாதாரண மக்களால் எட்ட முடியாத உயரத்துக்குப் போய்விட்டன. அதற்குக் கடன் தந்திருக்கிறீர்களா?
ஆமாம். இப்போது படிப்பு, மருத்துவம் எல்லாம் அதிக விலையாகிவிட்டது. மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண், தன் பையன் என்ஜினீயரிங் படிக்க எங்களிடம் 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிப் படிக்க வைக்கிறார். நிறையப் பேர் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க எங்களிடம் கடன் வாங்குகிறார்கள். ஏனென்றால் கடையில் மாதத் தவணைக்குப் பொருள் வாங்குவதைவிட மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் வாங்குவது லாபமாக இருக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் குழுவில் கடன் வாங்கி, மாவரைத்து விற்கும் தொழில் செய்து வருகிறார்கள்.
மாவரைத்து விற்று எவ்வளவு பேர் பிழைக்க முடியும்? அதற்கு அந்த அளவுக்கு வாய்ப்புகள் இருக்கின்றனவா?
எங்கள் பகுதியில் பீடி சுற்றிப் பிழைக்கும் பெண்கள் அதிகம். அவர்களுக்கு வீட்டில் மாவு அரைத்து இட்லி, தோசை எல்லாம் சுட நேரம் இருக்காது. எனவே மாவரைத்து விற்றால் சீக்கிரமாக விற்றுப் போகும். குறிப்பாக மேலப்பாளையம் பகுதியில் நிறைய விற்பனையாகும். காலையில் 6.00 மணிக்கு ஆட்டோவில் மூன்று நான்கு மாவு விற்கும் பெண்கள் ஏறிச் சென்று மேலப்பாளையம் பகுதியில் ஓர் இடத்தில் இறங்கிக் கொள்வார்கள். அங்குள்ள மக்கள் வந்து மாவை வாங்கிச் செல்வார்கள். மாவு விற்பனையில் 20 பெண்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு பெண்ணையும் சொந்தக் காலில் நிற்க வைக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
ஆனால் பெண்களைப் பொறுத்தவரை மிகவும் பாதிக்கும் விஷயம் மதுக்கடைகள்தான். ஒரு குழுவில் 20 பெண்கள் இருக்கிறார்கள். அதில் 5 பெண்களின் கணவர்கள் குடிக்கு அடிமையானவர்களாக இருக்கிறார்கள். பெண்களின் மகன்கள் கூட குடிப் பழக்கத்துக்கு அடிமையாகிவிடுகிறார்கள். ஓர் அம்மாவின் இளம் வயதுப் பையன் குடிப்பதற்காகத் தன் தாயின் கம்மல், மூக்குத்தியை எல்லாம் அவருக்குத் தெரியாமல் எடுத்துச் சென்று அவற்றை விற்றுக் குடித்துவிட்டான். எனவே மதுவிலக்கைக் கொண்டு வரச் சொல்லி திருநெல்வேலியில் உண்ணாவிரதப் போராட்டம் சமீபத்தில் நடந்தபோது எங்கள் குழுவைச் சேர்ந்த பெண்கள் 500 பேர் அதில் கலந்து கொண்டோம்.
பேங்க் கடனையோ, மகளிர் சுய உதவிக் குழுக் கடனையோ வாங்கியவர் கடனை அடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்?
அப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாங்கள் எப்படியும் வாங்கிவிடுவோம். சிலர் கடனை வாங்கிக் கொண்டு ஓடிவிட்டால் எதுவும் செய்ய முடியாது. குழுவில் உள்ள எல்லாரும் சேர்ந்து கடனை அடைத்துவிடுவோம்.
கடன் தருவதைத் தவிர வேறு பணிகள் எதுவும் செய்வதில்லை போலிருக்கிறதே?
அப்படியில்லை. எங்களுடைய மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் ரத்த தானம் செய்கிறோம். கணவன் - மனைவி பிரச்னை வந்தால், பெண்களை மாமியார்கள் கொடுமைப்படுத்தினால் வேறு வழியில்லாத நிலையில் காவல்துறையில் புகார் கொடுக்கிறோம். இலவச கோர்ட் மூலமாக அப்படிப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஏற்பாடு செய்கிறோம். ஆனால் பெரும்பான்மையான பிரச்னைகள் காவல்துறை விசாரிக்க ஆரம்பித்த உடனேயே தீர்ந்து விடுகின்றன. பெண்களுக்குக் கம்ப்யூட்டர் கல்வி, அழகுப் பயிற்சி போன்றவையும் தந்திருக்கிறோம். முதியோர் பென்ஷன் பெற, விதவைப் பெண்களின் மகள் திருமண உதவிப் பணம் பெற எல்லாம் நாங்கள் வழிகாட்டுகிறோம்.
பெண்ணாகிய நீங்கள் இந்தப் பணிகளில் எப்படி தீவிரமாக ஈடுபட முடிகிறது?
குடும்பத்தினரின் ஆதரவு இல்லையென்றால் உண்மையில் ஒரு பெண்ணால் எதுவும் செய்ய முடியாது. கணவர் முகம்மது அலி எனது சமூக சேவைக்கு ஆதரவு தருகிறார். மகன்கள் மூவரும் ஊக்கம் தருகிறார்கள்.