முகங்கள்: இசையும் சமூக சேவையும் இரு கண்கள்!
'அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும்'' மிக மிக இனிமையான பெண் குரலில் காற்றில் மிதந்து வந்த பாடல் நமது கால்களை இழுத்துச் செல்கிறது. கண்களை மூடிய
'அப்பா நான் வேண்டுதல்
கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான்
அன்பு செய்ய வேண்டும்''
மிக மிக இனிமையான பெண் குரலில் காற்றில் மிதந்து வந்த பாடல் நமது கால்களை இழுத்துச் செல்கிறது.
கண்களை மூடியவாறு மனம் ஒன்றிப் பாடிக் கொண்டிருப்பவரைப் பார்த்ததும் திகைப்பால் அப்படியே நின்றுவிடுகிறோம். பாடிக் கொண்டிருப்பவர் சகோதரி ரீத்தா. அவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞரும் கூட.
கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரான அவர் திருவருட்பாவை மட்டுமல்ல, தேவாரம், திருவாசகம் எல்லாவற்றையும் இப்படி மனம் ஒன்றிப் பாடுகிறார். 'எப்படி இது?'' என்ற கேள்வியோடு அவரை அணுகினோம்.
'இதில் என்ன இருக்கிறது?'' என்கிறார் சிரித்தபடி சகோதரி ரீத்தா.
'எனது குடும்பம் இசைக் குடும்பம். என்னுடைய தாத்தா என்னுடைய மாமாவுக்கு அந்தக் காலத்திலேயே முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூர்தான் சொந்த ஊர். மிகச் சிறிய வயதிலேயே ஆண்டாளின் பாடல்களை கேட்கும் வாய்ப்பு ஸ்ரீ வில்லிப்புத்தூரில் மிக அதிகம். பூங்காக்களில் உள்ள ஒலி பெருக்கிகளில் கூட ஆண்டாளின் பாசுரங்கள் ஒலிக்கும். தேர்த்திருவிழாக்களில் எல்லாம் ஆண்டாளின் பாசுரங்கள் இனிமையான இசையாகக் காதுகளை நிறைக்கும். அதனால் என் சிறிய வயதிலேயே இசையில் ஆர்வம் வந்துவிட்டது.
நான் 20 வயதில் கன்னியாஸ்திரீஆகிவிட்டேன். ஊட்டியில் கர்நாடக இசையின் அடிப்படைகளை அப்போது கற்றுக் கொண்டேன். அதன் பிறகு திருவையாறில் உள்ள ராஜா இசைக் கல்லூரியில் சேர்ந்து அடிப்படை இசையைக் கற்க ஆரம்பித்தேன். பல்வேறு காரணங்களால் அங்கே தொடர்ந்து படிக்க முடியாமற் போனது. ஆனாலும் எனது இசை ஆர்வம் அடங்கவே இல்லை. 1973-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் சேர்ந்து நான்கு வருடங்கள் படித்தேன். சங்கீத வித்வான் படிப்பில் தேறினேன். சங்கீத ஆசிரியருக்கான படிப்பிலும் தேறினேன். வீணை, வாய்ப்பாட்டு இரண்டிலும் தேர்ச்சி பெற்றேன். அதன் பிறகு சென்னை பரங்கிமலையில் உள்ள தூய ஹெலன் பள்ளியில் இசை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். ஏழாண்டுகளுக்கும் மேலாக அங்கே இசை ஆசிரியையாகப் பணி செய்தேன்.''
கிறிஸ்தவரான நீங்கள் வேறு இசையைக் கற்றுக் கொண்டிருக்கலாமே? கர்நாடக இசையை ஏன் கற்றுக் கொண்டீர்கள்? என்ற கேள்வியைச் சொடுக்கினோம்.
கொஞ்சமும் பதற்றப்படாமல், 'நான் சேர்ந்திருந்த கிறிஸ்தவ சபை என்னை இந்திய இசையைக் கற்றுக் கொள்ளும்படி ஊக்குவித்தது. கிறிஸ்தவ மதத்தில் வழிபாட்டின்போது மேற்கத்திய இசையைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். வருகிறார்கள். வழிபாட்டில் இந்திய இசையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
சாந்தோம் பகுதியில் உள்ள ஐக்கிய ஆலயத்திற்கு எல்லா மதத்தினரும் வருவார்கள். அங்கே நான், "அம்மையே அப்பா ஓப்பில்லா மணியே', "பெற்ற தாய்தனை மக மறந்தாலும்' போன்ற பாடல்களை மனம் உருகிப் பாடுவேன். எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்'' என்கிறார் மகிழ்ச்சியுடன்.
அடையாறு பகுதியில் "ஈசாலயா' என்ற பெயரில் ஆஸ்ரமம் ஒன்றை ஏற்படுத்தி அங்கே வேறு சில சிஸ்டர்களுடன் சேர்ந்து தங்கியிருந்த போது, தினம்தோறும் இசைப் பயிற்சி செய்தேன். அதைக் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு இசை கற்றுக் கொடுக்கும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கு வீணையும், வாய்ப்பாட்டும் கற்றுக் கொடுத்தேன். ஆனால் என்னிடம் கற்றுக் கொண்ட பிள்ளைகள் எல்லாரும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள். ஏழைப் பிள்ளைகளுக்கு இசையைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது ஏற்பட்டது.
அந்த எண்ணம் நான் சாந்தோம் பகுதியில் இருந்தபோதுதான் நிறைவேறியது. சாந்தோம் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு வீணையும், வாய்ப்பாட்டும் கற்றுக் கொடுத்தேன்'' என்கிறார் இசை ஆசிரியை ரீத்தா.
'என்னைப் பொறுத்த அளவில் இசையின் மூலமாக இறைவனை எப்படி அடைவது? என்பதே முக்கியமான விஷயம். இசை என்றால் அது கர்நாடக சங்கீதமாகவும் இருக்கலாமே? இசை மூலம் இறை அனுபவத்தைப் பெறுவது எப்படி? என்று வகுப்புகள் எடுத்தேன். வழிபாட்டு கூட்டங்குகள் நடத்தினேன். அதில் கர்னாடக இசை அடிப்படையில் நானே இயற்றிய பாடல்களைப் பாடினேன். அந்தக் கூட்டங்களில் கலந்து கொண்ட பலர், இறை அனுபவத்தைப் பெற்றதாக என்னிடம் மனம் மகிழ்ந்து சொன்னார்கள்.''
என்ற ரீத்தா, 1985 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை சார்பாக நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் பைபிளிலும் பக்தி இலக்கியங்களிலும் எப்படி ஒரே மாதிரியான கருத்துகள் அடங்கியிருக்கின்றன? என்பதை ஒப்பிட்டுக் காட்டிப் பேசியிருக்கிறார். 'அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே என்ற திருவருட்பாவும் பைபிளில் கொரிந்தியரின் நிருபத்தில் வருகிற பகுதிகளுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதை எல்லாம் அந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினேன்'' என்றார்.
தமிழில் எம். ஏ. படித்திருப்பதால்தான் பக்தி இலக்கியங்களைப் பற்றியெல்லாம் அவரால் பேச முடிகிறது.
இசை, இறைத் தொண்டு என்றிருந்தவருக்கு எதுவோ குறையாகத் தோன்றியிருக்கிறது. மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இசை ஆசிரியை வேலையிலிருந்து விலகிவிட்டார் அவர். ஆவுடையார்கோவில், அறந்தாங்கிப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கேயே தங்கியிருந்து அந்த மக்களோடு பழகி அவர்களுக்குத் தொண்டு செய்யப் போய்விட்டார்.
'கிராமத்தில் உள்ள மக்களோடு மக்களாக நானும் சில சிஸ்டர்களும் தங்கியிருந்தோம். அவர்களைப் போலவே உடை உடுத்தி, நாற்று நட்டு, களை எடுத்து அவர்களில் ஒருவராகவே இருந்தோம். இதனால் அவர்கள் படுகிற கஷ்டங்களை என்னால் உணர முடிந்தது. விவசாய வேலை செய்யும் பெண்களுக்கு அப்போது மிகவும் குறைவான கூலி கொடுத்து வந்தார்கள். அப்போது அங்குள்ள பெண்களைத் திரட்டி கூலி உயர்வுப் போராட்டமெல்லாம் நடத்தியிருக்கிறோம். கிராம மக்கள் எந்த அளவுக்கு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை அப்போது தெரிந்து கொள்ள முடிந்தது. பெண்களின் சுய உதவிக் குழுக்களை ஆரம்பித்தோம். பெண்களை எப்படி இயக்கமாகக் கட்டி அவர்களைச் செயற்பட வைப்பது? என்பதை அப்போது தெரிந்து கொள்ள முடிந்தது'' என்கிறார் சற்று சீரியஸôக.
'அங்கே செய்த சமூக சேவையின் தொடர்ச்சியாகத்தான் நான் சட்டப் படிப்பு படித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக ஆனது. இப்போது பெண்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்து வருகிறேன். என்னை நாடி வரும் ஏழைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு வழிகாட்டுகிறேன். விபத்தினால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு பலர் இழப்பீடு தராமல் ஏமாற்றிவிடுகின்றனர். அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத் தருகிறேன். ஆனால் இப்போதும் நான் இசையை விட்டுவிடவில்லை. பெண்களின் உரிமைக்கான பாடல்களை நானே இயற்றி பெண்களின் முன்பு பாடுகிறேன்.''
என்கிறார் சிரித்துக் கொண்டே சகோதரி ரீத்தா.