முகங்கள்: எனக்குத் தெரிந்த மொழி அன்பு!
உங்களுக்கு என்ன வயது? உடலுக்கு - 49 மனதுக்கு - 5 நடத்தைக்கு - 10 இப்படிச் சொல்கிறார் செஃப் வில்லி. நியூசிலாந்துக்காரரான அவர், தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறார். வித்தியாசமான அ
உங்களுக்கு என்ன வயது?
உடலுக்கு - 49
மனதுக்கு - 5
நடத்தைக்கு - 10
இப்படிச் சொல்கிறார் செஃப் வில்லி.
நியூசிலாந்துக்காரரான அவர், தன்னை இந்தியன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறார். வித்தியாசமான அந்த வெளிநாட்டுக்காரரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள "கிரிப்டாஸ் பை வில்லி ரெஸ்ட்டாரண்டில்' சந்தித்தோம். ரெஸ்ட்டாரண்டின் பெயரில் உள்ள வில்லி என்பது இவருடைய பெயர்.
''நான் இந்தியாவுக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. முதலில் ஐந்து ஆண்டுகள் கல்கத்தாவிலும், கோவாவிலும் இருந்தேன். சென்னைக்கு வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்னையை விட்டு வேறெங்கும் போகமாட்டேன். ஏனென்றால் எனக்கு நிறைய நண்பர்கள் சென்னையில் இருக்கிறார்கள்'' என்கிறார் சிரிப்புடன்.
செஃப் வில்லி சென்னைக்கு வந்து பெரிய ஃபைவ் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் செஃப்பாக வேலை செய்திருக்கிறார். ஓட்டல் வேலையென்றால் ஒருநாளில் ஷிப்ட் டைம் தொடர்ச்சியாக இருக்காது. இடையில் இரண்டு மணி நேரம் இடைவெளி இருக்கும். அந்தச் சமயத்தில் வீட்டுக்குப் போய்விட்டு திரும்பவும் வேலைக்கு வருவார்.
''சென்னைக்கு வந்த புதிதில் நான் ஆட்டோவிலோ, பஸ்ஸிலோ ஏறமாட்டேன். வீட்டிற்கும் வேலை செய்யும் இடத்திற்குமாக தினமும் 15-20 கிலோ மீட்டர் நடப்பேன். அதன் பிறகு ஓட்டல் வாசலில் இருக்கும் ஆட்டோவில் ஏறிச் சென்றேன். அப்படியே ஆட்டோ டிரைவர்கள் நண்பர்களானார்கள். இப்போதும் சாதாரண மனிதர்கள் நிறையப் பேர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். சாலையோர டீக்கடையில் எனக்கு அவர்கள் டீ வாங்கிக் கொடுப்பார்கள். அவர்களுக்கு நான் டீ வாங்கிக் கொடுப்பேன். என் மனைவி மார்க்கெரட் மறைந்தபோது ஆட்டோ டிரைவர் நண்பர் காளி உட்பட பலர் என் வீட்டிற்கு வந்து துயரமான அந்த நேரத்தில் எனக்கு மிகுந்த ஆறுதலாக இருந்தார்கள்.'' நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் வில்லி.
சென்னையில் இவருக்குக் கிடைத்த இன்னொரு நண்பர் விபின் சச்தேவ். "சப்-வே' என்கிற பெயரில் ரெஸ்ட்டாரண்ட்கள் நடத்தி வருபவர். அந்த நேரத்தில் ஒரு பொது இடத்தில் இருவரும் தற்செயலாகச் சந்தித்திருக்கின்றனர். பார்த்தவுடனேயே இருவருக்கும் பிடித்துப் போய்விட்டது.
''விபின் சச்தேவ் வெளிப்படையாகப் பேசுவதைக் கேட்டதுமே எனக்குப் பிடித்துப் போய்விட்டது. மனதில் உள்ளது அவருடைய பேச்சில் வெளிப்பட்டது. உடனே அவர் என் நண்பராகிவிட்டார். அவர் டஸ்கானா என்ற பெயரில் ரெஸ்ட்டாரண்ட்கள் ஆரம்பித்தபோது, நான் என் பழைய வேலையில் இருந்து விலகி அவருடன் இணைந்து கொண்டேன்''
அருகில் இருந்த விபின் சச்தேவும் அதே கருத்தையே சொன்னார்.
'' வில்லியைப் பார்த்ததும் எனக்கும் பிடித்துப் போய்விட்டது. டஸ்கானாவில் என்னோடு இணைந்த பிறகு அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஒரு செஃப்க்கு எது உயர்ந்த லட்சியமாக இருக்கும்? தன் பெயரில் ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க வேண்டும் என்பதுதானே? நான் சமீபத்தில் ஆரம்பித்திருக்கும் ரெஸ்ட்டாரண்டை கிரிப்டாஸ் பை வில்லி என்று அவர் பெயரில் ஆரம்பித்தேன்'' என்கிறார் உணர்வு பொங்க விபின் சச்தேவ்.
''இந்த ரெஸ்ட்டாரண்டை உடனே நாங்கள் ஆரம்பித்துவிடவில்லை. நானும் விபினும் கிரீஸýக்கும், சைப்ரஸýக்கும் 3 தடவைகள் போனோம். நான் ஓர் ஓட்டலில் செஃப்பாக வேலைக்குச் சேர்ந்தேன். சச்தேவ் அந்த ஓட்டலில் எப்படி நிர்வாகம் பண்ணுகிறார்கள் என்று கவனித்து வந்தார். இருவரும் சேர்ந்து கற்றுக் கொண்டோம். அதன் பின்புதான் இந்த ரெஸ்ட்டாரண்ட் ஆரம்பித்தோம்'' என்றார்.
'' அங்கே போய் அப்படி என்ன புதிதாகக் கற்றுக் கொண்டீர்கள்?'' என்று கேட்டதற்கு,'' எதையும் சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள்'' என்று சீரியஸôனார் சட்டென்று.
''கிரீஸ்- சைப்ரஸ் உணவு வகைகளைத்தான் இந்த ரெஸ்ட்டாரண்டில் நாங்கள் சமைத்து அளிக்கிறோம். உலகிலேயே மனிதர்களின் ஆயுட்காலம் அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்று சைப்ரஸ். அதற்குக் காரணம் அவர்கள் சாப்பிடும் உணவு. எல்லாவற்றையும் ஆலிவ் ஆயிலில்தான் சமைக்கிறார்கள். மனித உடலுக்குத் தீங்கு செய்யாத, எடையை அதிகப்படுத்தாத உணவு வகைகள். அவர்களுடைய உணவில் சர்க்கரை குறைவு. உப்புச் சத்துக் குறைவு. புத்தம்புதிதான காய்கறிகள், பழங்கள், மீன், இறைச்சி வகைகள் என மிக ஆரோக்கியமாகச் சமைக்கிறார்கள். அதேபோன்ற ரெஸ்ட்டாரண்டை இங்கே ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்தோம். இப்போது ஆரம்பித்துவிட்டோம்'' என்கிறார் பெருமிதத்துடன்.
இப்போது ரெஸ்ட்டாரண்டில் தவழ்ந்து வருகிற இசையைக் கவனித்துக் கேட்டோம். மேற்கத்திய இசை போலவும் இல்லை. இந்திய இசையாகவும் இல்லை. நாம் கவனிக்க ஆரம்பித்ததைப் பார்த்து நமது மனதில் என்ன ஒடுகிறது என்பதைத் தெரிந்து கொண்ட வில்லி, ''இது கிரீஸ் இசை. கிரீஸ் உணவுவகைகளை மக்களுக்கு அளிக்கும் ரெஸ்ட்டாரண்டில் கிரீஸ் இசை இல்லாவிட்டால் எப்படி?'' என்றார்.
இந்தியாவில் உங்களுக்குப் பிடித்த நகரம் எது? என்று கேட்டதற்கு, யோசிக்காமல் டக்கென்று சென்னை என்கிறார்.
''சென்னை என்றாலே சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு, வாகன நெரிசல், சுத்தமில்லாத சாலையோர உணவகங்கள், நாற்றமடிக்கும் கூவம் நதி என்றிருக்கும்போது சென்னையைப் பிடிக்கும் என்கிறீர்களே?'' என்று கேட்டோம்.
''நீங்கள் சென்னையின் நெகட்டிவ் சைடைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். சென்னையில் ட்ராஃபிக் நெரிசல் உண்டு. ஆனால் வேறு நாடுகளைப் போல வாகனங்கள் அப்படியே நின்றுவிடுவதில்லை. சிறிது நேரத்தில் மூவ் ஆக ஆரம்பித்துவிடுகின்றன. வாரத்தில் ஆறு நாட்கள் நீங்கள் உழைத்துவிட்டு ஏழாவது நாளில் ஒரு மணி நேரம் பயணம் செய்து மகாபலிபுரம் சென்றுவிடலாம். 45 நிமிட பயணத்திலேயே நகரத்தை விட்டு நீங்கள் வெளியேறிவிடலாம். உலகத்தில் வேறு எந்த நகரத்தில் இப்படி இருக்கிறது? எல்லாவற்றையும்விட இங்கே மனிதர்கள் மிக நல்லவர்கள். பெரும்பாலான மனிதர்கள் பிறரை ஏமாற்ற நினைக்காதவர்கள். ஆட்டோ டிரைவர்கள் என்றால் கெட்டவர்கள் என்பதாகப் பலர் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை'' என்றார்.
''நாங்கள் டஸ்கானா ரெஸ்ட்டாரண்ட்டை ஆரம்பித்த நேரம், வில்லி தனது ஆட்டோ டிரைவர் நண்பர்கள் அனைவரையும் அழைத்து வந்துவிட்டார். தனது செலவில் விருந்து வைத்தார்'' என்கிறார் விபின் சச்தேவ்.
''சாதாரண மனிதர்களை எல்லாம் எப்படி நண்பர்களாக்கிக் கொள்கிறீர்கள்?'' என்று வில்லியிடம் கேட்டோம்.
''இதிலென்ன தப்பு? நான் பெரிய இடத்தில் வேலை செய்கிறேன். எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. கார் உள்ளது. இவையெல்லாம் இல்லாவிட்டால் நானும் சாதாரண மனிதன்தானே? எனவே என்ன தொழில் செய்கிறார்? என்ன வருமானம் வருகிறது? எங்கே வசிக்கிறார்? என்பதை வைத்து நண்பர்களை நான் தேர்வு செய்வதில்லை. பிறருக்குத் தீங்கு செய்யாத நல்ல மனிதர்களாக ஒருவர் இருக்கிறாரா என்பதே எனக்கு முக்கியம். நான் ஜெர்மனி, பிரான்ஸ், சீனா, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் வேலை செய்திருக்கிறேன். எல்லா நாட்டிலும் மனிதர்களை அணுகக் கூடிய என் முறை இதுதான்'' என்கிறார் வில்லி தெளிவாக.
''அப்படியானால் உங்களுக்குப் பல மொழிகள் தெரியுமே?'' என்று கேட்டோம்.
''பல மொழிகள் தெரியும் என்பது உண்மைதான். ஆனால் எனக்கு நன்றாகத் தெரிந்த மொழி - உணவு. இன்னொரு மொழி அன்பு'' என்கிறார் வித்தியாசமாக செஃப் வில்லி.