தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிரச முறுக்குக் காய்ச்சல்!

திருமணம் முடிந்தவுடன் தரப்பட்ட அதிரசம் முறுக்கு ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து மறந்துவிட்டேன். ஒருவாரம் கழித்து அவற்றைச் சாப்பிட்டதும் நெஞ்சில் "திம்' என்று அடைப்பு, பசியின்மை, குமட்டல், காய்ச்சல், எரிச

எஸ். சுவாமிநாதன்

திருமணம் முடிந்தவுடன் தரப்பட்ட அதிரசம் முறுக்கு ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து மறந்துவிட்டேன். ஒருவாரம் கழித்து அவற்றைச் சாப்பிட்டதும் நெஞ்சில் "திம்' என்று அடைப்பு, பசியின்மை, குமட்டல், காய்ச்சல், எரிச்சலுடன் கூடிய ஏப்பம் ஆகியவை ஏற்பட்டு பெரும் பிரச்னையாக உள்ளது. இது என்ன வகைக் காய்ச்சல்? எப்படி மாற்றுவது?

ராமசாமி, சென்னை-33

பன்றிக் காய்ச்சல் பரவிவரும் இந்நாட்களில் உங்களுக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சலுக்குப் பழைய அதிரச முறுக்குக் காய்ச்சல் என்று பெயரிடலாம். கெட்டுப் போன இவற்றைச் சாப்பிட்டதும் அவை வயிற்றுக்கு வந்து சேர்ந்தவுடன், பித்தத்தின் கலப்பு காரணமாக எரிச்சலுடன் கூடிய ஏப்பமும், காய்ச்சலும் ஏற்படுகிறது. குமட்டல், பசியின்மை, நெஞ்சு அடைப்பு போன்றவை கபம் கலந்ததைத் தெரிவிக்கின்றன. அதாவது கல்யாண பட்சணத்திலுள்ள எண்ணெய், அரிசி போன்றவை பித்த கபங்களைத் தூண்டிவிட்டு, இந்த உபாதைகளை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றன. இதற்கு "ஆமம்' என்று ஆயுர்வேதம் பெயரிட்டுள்ளது. தமிழில் இதற்கு மப்புநிலை என்று கூறலாம்.

இதுபோன்ற மப்பு நிலையில் மருந்து சாப்பிட்டால் அதுவும் பட்சணத்துடன் கலந்து சீரணமாகாமல் கிடக்கும். எப்படிச் சாம்பலின் உள்ளே உள்ள நெருப்பினால், அண்டாவில் உள்ள தண்ணீர் சூடாகாதோ, அதுபோல கெட்டுப் போன பட்சணத்தால் பதனழிந்து போன கப பித்தங்களால் மறைக்கப்பட்டுள்ள பசித் தீயால், அவற்றையே செரிக்க முடியாமல் கிடக்கும்போது, அதன் மேலே மருந்தைப் போட்டால் எப்படிச் செரிக்கும்? சாம்பலை ஊதி, அதன் மேல் சிராத்துள், வரட்டி, மண்ணெண்ணெய் விட்டுத் தீயை வளர்த்த பிறகு, விறகு போட்டு நெருப்பைப் பெரிதாக்கி, அதன் மேல் அண்டாவை வைத்து தண்ணீர் ஊற்றி வெந்நீர் போடுவதை நீங்கள் கிராமங்களில் பார்த்திருக்கலாம். அதுபோல, பசித்தீயின் மீது படர்ந்திருக்கும் சாம்பல் போன்ற படிவங்களாகிய தோஷங்களையும், கெட்டுப் போன பட்சணங்களையும் நீக்கினால்தான், அடியிலுள்ள பசித்தீ வெளிப்படும்.

அதற்கு இந்தப் படிவங்களை நீக்க 5-10 கிராம் இந்துப்பு கலந்த 1-2 கிளாஸ் சூடான தண்ணீரைக் குடித்து, வாயினுள் விரலை விட்டு வாந்தி செய்ய வேண்டும். இதனால் வயிற்றினுள்ளே சவ்வுப் பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்டுப் போன உணவின் திரவப் பகுதிகள், உப்புத் தண்ணீரால் உறிஞ்சப்பட்டு வெளியே வந்துவிடும். மிகவும் சுலபமான இந்த வாந்திமுறையால், வயிற்றுப் பகுதி சுத்தமடைவதுடன், வயிற்றில் வேறு ஏதேனும் தேவையற்ற பழைய தேக்கம் இருந்தால் அதுவும் வெளியே வந்துவிடும்.

வாந்தி செய்த பிறகு, வியர்வை உண்டாக்கும் முறையைக் கையாள வேண்டும். காற்றில்லாத அறையில், உடலைக் கம்பளிப் போர்வையால் போர்த்தி 10-15 நிமிடங்கள் அமர்ந்திருக்க, வியர்வை பெருகும். இதனால் இரைப்பையினுள்ளே அமைந்துள்ள குழாய்ப் பகுதிகளில், பட்சணத்தின் விஷத்தன்மை ஏதேனும் பரவியிருந்தால் அவை உருகி, வழிந்து வயிற்றினுள் ஓடிவரும். அந்தக் கெட்டுப்போன திரவத்தை வெளியேற்ற, மறுபடியும் ஒருமுறை முன் குறிப்பிட்ட உப்புக் கரைசலைக் குடித்து வாயினுள் விரலை விட்டு வாந்தியை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற திரவத்தை வெளியேற்ற நம் முன்னோர் தேவதாரு, வசம்பு, கோஷ்டம், சதகுப்பை, பெருங்காயம் இந்துப்பு ஆகியவற்றைத் தூளாக்கி ஒரு துணியில் வைத்துத் திரிபோல மலம் வரும் பாதையில் சொருகிவிடுவார்கள். இதனாலும் வயிற்றிலுள்ள கெட்டுப் போன நீர் மலம் வழியாக வெளியே வந்துவிடும்.

இதை நீங்கள் செய்து கொண்டால், வயிற்றிலுள்ள அழுக்கு வெளிப்பட்டு, குடல் பகுதி முழுவதும் துடைத்துவிட்ட கண்ணாடி போல பளிச்சென்று ஆகிவிடும். பசி மறுபடியும் எடுக்கும். காய்ச்சலும் விட்டுவிடும். நீங்கள் மறுபடியும் கல்யாணத்திற்குச் செல்லலாம். ஆனால் பட்சணம் ஏதும் வாங்கி வர வேண்டாம்.

(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,

ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)

செல் : 9444441771

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT