விழிப்புணர்வு: பெண்கள் நினைத்தால் மதுக்கடைகளை மூட முடியும்!
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு மது அருந்துவது மாபெரும் குற்றம். மது அருந்துபவர்களை எல்லாரும் கேவலமாகப் பார்த்தார்கள். ""தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு ஊரின் ஒதுக்குப்புறத்தி
சு மார் 40 வருடங்களுக்கு முன்பு மது அருந்துவது மாபெரும் குற்றம். மது அருந்துபவர்களை எல்லாரும் கேவலமாகப் பார்த்தார்கள். ""தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு ஊரின் ஒதுக்குப்புறத்தில் திருட்டுத்தனமாக மது அருந்தச் சென்றவர்கள் அப்போது இருந்தார்கள். ஆனால் இப்போது 14-15 வயது பையன்களே பகிரங்கமாக எல்லாருக்கும் தெரியும்படி மது அருந்துகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டாமா?'' என்று ஆவேசத்துடன் கேட்கிறார் செங்கோட்டையைச் சேர்ந்த விவேகானந்தன்.
"மகாத்மா காந்தி சேவா மையம்' என்ற பெயரில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக காந்திய சிந்தனைகளை பரப்பி வரும் அவர், கடந்த 28 ஆம் தேதி பாளையங்கோட்டை ஜவகர் திடலில் 500-க்கும் மேற்பட்ட பெண்களைத் திரட்டி மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி முடித்த அன்று மாலை அவரிடம் பேசினோம்.
மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பெண்களைத் திரட்டி ஏன் போராட்டம் நடத்தினீர்கள்?
இன்று தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்துவிட்டிருக்கிறார்கள். இதனால் அரசாங்கத்துக்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் மதுக்கடைகளை நடத்துவதால் அரசாங்கத்துக்குப் பெரிய லாபம் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மது அருந்துபவர்கள் சில ஆண்டுகளிலேயே நோய் வாய்ப்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் அரசு மருத்துவமனைகளில்தான் பெரும்பாலும் சிகிச்சை பெறுகிறார்கள். இதனால் அரசுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று யாராவது கணக்குப் பார்த்தார்களா? குடித்துவிட்டுத் தகராறு செய்வது, அதனால் ஏற்படும் உயிரிழப்புகள், பொருள் இழப்புகள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதனால் ஏற்படும் விபத்துகள், பாதிப்புகள், குடித்துவிட்டு வேலைக்குப் போகாமல் சுற்றித் திரிவது, அதனால் ஏற்படும் உற்பத்தி பாதிப்பு இப்படி எல்லாவற்றையும் கணக்குப் பார்த்தால் அரசுக்கும் சரி, நாட்டுக்கும் சரி, மக்களுக்கும் சரி மதுக்கடைகளினால் ஒரு நன்மையும் இல்லை, லாபமும் இல்லை.
சாதாரண கூலி வேலை செய்பவர்களைப் பாருங்கள். வாங்குகிற கூலியில் முக்கால்வாசிக்கும் மேல் குடித்தே காலி செய்துவிடுகிறார்கள். வீட்டிற்குச் சாப்பாட்டுக்குக் கூடத் தருவதில்லை. இதனால் குடிகாரர்களின் மனைவி, மக்கள் பட்டினியாய்க் கிடக்கிறார்கள்.
குடித்துவிட்டு வந்து வீட்டில் மனைவியை அடித்துத் துன்புறுத்துவது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது சாதாரணமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் மனம், உடல் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும்? அவர்கள் எப்படி படிப்பில் முழுக் கவனம் செலுத்த முடியும்? இந்தக் குடியினால் எத்தனை குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. சமூகத்தில் எவ்வளவு குற்றங்கள் நடக்கின்றன? இதனால் ஒட்டுமொத்தமாகச் சமூகத்துக்கு எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது? எனவே மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. மதுக்கடைகளினால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களும், குழந்தைகளும் என்பதால் பெண்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தினோம்.
மதுக்கடைகளை மூடச் சொல்லிப் பெண்களைத் திரட்டும் போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
எங்களுடைய கோரிக்கைகளைப் பற்றி திருநெல்வேலி, திருச்செந்தூரைச் சுற்றியுள்ள பகுதியில் உள்ள ஊர்களில் பெண்களிடம் 15 நாட்களுக்கும் மேலாக எங்களுடைய காந்தி சேவா மையம் மற்றும் இதர காந்திய அமைப்புகள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டோம்.
இந்தப் பகுதிகளில் பீடி சுற்றும் வேலை செய்யும் பெண்கள் அதிகம். இந்தப் பெண்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தை அவர்களின் கணவர்கள் குடிப்பதற்காகப் பறித்துச் செல்கின்றனர். அடிக்கவும் செய்கின்றனர். நாங்கள் பெண்களிடம் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று சொன்னபோது எங்களுக்கு மிகவும் ஆதரவு தந்தார்கள்.
திருநெல்வேலி மீனாட்சிபுரத்தில் ஒரு சலவைத் தொழிலாளி குடும்பம் இருக்கிறது. கணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒருநாளைக்கு 650 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். இதில் 600 ரூபாயைக் கணவன் குடித்தே தீர்த்துவிடுகிறார். அந்தப் பெண்ணின் கழுத்திலோ, காதிலோ பொட்டுத் தங்கமும் இல்லை. கழுத்தில் சரடுதான் இருக்கிறது. அன்றாட உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள். இது ஒரு பெண்ணின் கதை மட்டுமல்ல, அந்தப் பகுதியில் உள்ள சாதாரண மக்கள் பெரும்பாலோரின் கதை இதுதான்.
350 ரூபாய் சம்பாதிப்பவர் 300 ரூபாயை மதுக்கடையில் கொடுத்துவிட்டு வருவது ரொம்ப சாதாரணமாக இருக்கிறது.
உங்களிடம் ஓட்டுக் கேட்டு வருபவர்களிடம் மதுக்கடைகளை மூடச் சொல்லிக் கேட்டீர்களா? என்று பெண்களிடம் விசாரித்தோம். எங்களுக்கு அப்படிக் கேட்கச் சொல்லி யாரும் சொல்லித் தரவில்லை என்று அப்பாவியாகச் சொல்கிறார்கள்.
இனிமேல் யார் வந்து ஓட்டுக் கேட்டாலும் மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும். யார் மூடுகிறார்களோ அவர்களுக்குத்தான் எங்களுடைய ஓட்டு என்று உறுதியாகச் சொல்லுங்கள் என்று சொன்னோம்.
மதுக்கடைகளை மூடினால் வேறு போதைப் பொருட்களைப் பயன்படுத்தப் போகிறார்கள். எனவே போதைக்கெதிரான மனமாற்றம்தானே அவசியம். அதற்கான பிரசாரத்தையும் சேர்த்துச் செய்ய வேண்டாமா?
முதலில் மதுவுக்கு எதிரான சமூக மனோபாவம் இருந்தது. இன்று இல்லாமற் போய்விட்டது. மது தீமையானது என்ற மனோபாவத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். ஆனால் குடிப்பழக்கம் உள்ளவர்களிடம் மது குடிக்காதே என்று அறிவுரை சொன்னால் கேட்கமாட்டார்கள். அடுப்பு கொதிக்கிறது என்றால் ஸ்டவ்வை அணைக்க வேண்டும். அதுபோல குடிப் பழக்கத்தை நிறுத்த மதுக்கடைகளை மூட வேண்டும். இதனால் பழைய குடிகாரர்கள் குடிப்பழக்கத்தை விட வாய்ப்பு ஏற்படும். அதே சமயம் இளைஞர்கள், சிறுவர்கள் இப்போதுள்ளதைப் போல குடிப்பழக்கத்துக்கு ஆளாகமாட்டார்கள். மேலும் மதுக்கடைகளை மூடுவதற்கு முன்பாக மதுப் பழக்கத்திலிருந்து அதற்கு அடிமையானவர்களை மீட்க, மாவட்டங்களில் பல இடங்களில் மறுவாழ்வு மையங்களை ஆரம்பிக்க வேண்டும்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் எவ்வளவு பெண்கள் பங்கேற்றனர்?
உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் பெரும்பாலோர் பீடி சுற்றும் தொழில் செய்யும் பெண்கள். அவர்களுக்குச் சனிக்கிழமை சம்பளநாள். எனவே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஓரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேர் கலந்து கொள்ளவில்லை என்றாலும் சராசரியாக 300 பேர் எப்போதும் கலந்து கொண்டனர். சில பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்கள். தமிழ்நாட்டில் இரண்டரைக் கோடிக்கும் மேல் பெண் வாக்காளர்கள் உள்ள நிலையில், பெண்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாகத் திரண்டு "மதுக்கடைகளை மூடும் வேட்பாளருக்கே எங்கள் ஓட்டு' என்று உறுதியாக இருந்தால், மதுக்கடைகளை உறுதியாக மூட முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டது.
மதுக்கடைகளை மூடுவதற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தத் துணை நின்றவர்கள் யார்? யார்?
நான் பத்தாண்டுகளுக்கு முன்பு காந்தி சேவா மையத்தை ஆரம்பித்தேன். காந்திய சிந்தனைகளைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் "காந்திய அமுதம்' என்ற மாத இதழை ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு காந்திய அமைப்புகளை, மன்றங்களை நடத்திக் கொண்டிருக்கும் சுமார் 1500 பேருக்கு அந்த இதழை இலவசமாக மாதந்தோறும் அனுப்பி வந்தேன். இதனால் தமிழ்நாடு முழுக்க உள்ள பல்வேறு காந்திய அமைப்புகளுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. பல்வேறு காந்திய அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்பட முடிந்தது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காந்திய சிந்தனைகளை அறிமுகப்படுத்துவதற்காக ரத யாத்திரை ஒன்றை ஆரம்பித்தோம். காந்தி உருவச் சிலையுடன் ஒவ்வொரு பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று காந்திய சிந்தனைகளைப் பிரசாரம் செய்தோம். அதற்குப் பின்பு செங்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 10 பள்ளிகளில் எங்களுடைய செலவில் "சத்திய அங்காடி' என்ற பெயரில் நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவை உள்ள கடைகளை ஆரம்பித்தோம்.
பள்ளியின் ஓர் இடத்தில் நோட்டுப் புத்தகங்கள், பேனா,பென்சில் போன்றவை வைக்கப்படும். மாணவர்கள் தமக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு உரிய பணத்தை அங்கு வைக்கப்பட்டிருக்கும் உண்டியலில் போட்டுவிட வேண்டும். இது நல்ல வெற்றியை எங்களுக்குத் தந்தது. இப்படி காந்திய சிந்தனைகளைப் பரப்பும்விதமாக பல அமைப்புகளும் சேர்ந்து பணியாற்றி வருகிறோம். அதன் தொடர்ச்சியாகவே இப்போது உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருக்கிறோம். அடுத்தகட்டமாக தமிழக முதல்வரைச் சந்தித்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.