ஆரம்பத்தில் தெலுங்கில் டாக்டர் ராஜசேகரின் படத்தில் நடித்தவர் நேகா துபியா. பின் ஹிந்தியில் கவர்ச்சி நடிகையாக மாறினார். சமீப காலமாக அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குறைந்து விட்டன. துணை நடிகை கேரக்டர்களுக்கு ஒப்புக் கொண்டு வருகிறார். இதனால் சிறிது காலம் சினிமாவில் நடிப்பதையே தவிர்த்தார். இப்போது மீண்டும் அவருக்கு நாயகி வாய்ப்பு வந்துள்ளது. ஹிந்தியில் அல்ல, தெலுங்கில். பாலகிருஷ்ணா இயக்கும் "பரம் வீர் சக்ரா' படத்தில் அவர் நடிக்கிறார். இந்தப் படத்தில் மூன்று ஹீரோக்கள் நடிக்கிறார்களாம். அமீஷா பட்டேல், ஷீலா ஆகியோர் ஒப்பந்தமாகி விட்டனர். இப்போது மூன்றாவது நாயகியாக நேகாவைத் தேர்வு செய்துள்ளனர். தெலுங்கு சினிமாவின் மூலம் தென்னகத்து சினிமாக்களில் ஒரு ரவுண்ட் வரலாம் என்பது நேகாவின் எதிர்பார்ப்பு.
படத்தில்தான் 19!
நீண்ட நாளைக்குப் பின் "வ' படத்தில் நடிக்கிறார் லேகா வாஷிங்டன். ""ஜெயம்கொண்டான்' படத்தில் தங்கை கேரக்டரில் நடித்ததால் தொடர்ந்து அதே போல் வேடங்கள்தான் வந்தன. அப்படி தொடர்ந்து வந்த வாய்ப்புகளை நான் ஏற்கவில்லை. முக்கியத்துவம் இல்லாத வேடங்களில் நடிப்பதைவிட பாலிவுட்டுக்குச் செல்லலாம் என முடிவு செய்தேன். அங்கு நல்ல கேரக்டர்களுடன் தொடர் வாய்ப்புகள் வந்தன. விரைவில் அமிதாப்பச்சன் படத்திலும் நடிக்க உள்ளேன். தமிழில் புஷ்கர் - காயத்ரியின் இயக்கத்தில் "வ' படத்தில் மட்டுமே நடிக்கிறேன். தற்கொலை எண்ணத்துடன் இருக்கும் 19 வயது பெண் கேரக்டர். படத்தில்தான் எனக்கு 19 வயது. நிஜத்தில் இல்லை. நடிப்பதற்கு வாய்ப்புள்ள கதாபாத்திரம் என்பதால் அந்தப் படத்தை ஏற்றுள்ளேன்'' என்கிறார் லேகா வாஷிங்டன்.
அமீஷா வீட்டில் அமீனா?
பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மும்பை வங்கியில் எலக்ட்ரானிக் தொழில் நிறுவனத்துக்காக ரூ. 18 கோடி கடன் வாங்கினர். திருப்பி செலுத்தவில்லை என்று கூறி அமீஷா குடும்பத்தினரின் சொத்துக்களை ஏலத்துக்கு கொண்டுவர வங்கி முடிவு செய்தது. இதை எதிர்த்து அமீஷா தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதற்கிடையே அமீஷா குடும்பத்தினரின் சொத்துக்களை கைப்பற்ற வங்கி அதிகாரிகள் மும்முரமாக தயார் ஆகி வருகிறார்கள். கோர்ட்டில் விதிக்கப்பட்ட தடை நீக்க வேண்டும் என்றும் மனு செய்துள்ளனர். கடந்த 1987-ம் ஆண்டு அமீஷா குடும்பத்தினர் வங்கியில் தங்களது நிறுவனத்துக்காக கடன் பெற்றனர். 2004-ம் ஆண்டு கடனை திருப்பி செலுத்தும்படி வங்கி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஊர்வசியின் கோபம்!
பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான "கட்டா மிட்டா' ஹிந்தி படத்தில் நடித்தார் ஊர்வசி சர்மா. இந்தப் படத்தின் விளம்பரங்களில் திரிஷாவுக்கே முன்னுரிமை தரப்படுவதாகவும், தன்னை ஓரம் கட்டுவதாகவும் ஊர்வசி சர்மா புகார் கூறினார். அடுத்து "ஆக்ரோஷ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படமும் பிரியதர்ஷன் படம்தான். இதில் பிபாஷா பாசு, சமீரா ரெட்டி என இரு ஹீரோயின்களுடன் ஊர்வசி நடிக்கிறார். சமீபத்தில் ஊர்வசியின் டான்ஸில் பாடல் ஒன்றை பிரியதர்ஷன் படமாக்கியுள்ளார். இந்தப் படம் குறித்து பாலிவுட் பத்திரிகையாளர்களை சந்தித்துச் பேசினார் ஊர்வசி சர்மா. ""இதற்கு முன் பிரியதர்ஷன் இயக்கத்தில் "கட்டா மிட்டா'வில் நடித்தேன். அதில் எனது கேரக்டர் சிறியதுதான். இப்போது படமான பாடல் காட்சி கதைக்கு முக்கியமானது. இதற்கு முன் சமீரா ரெட்டியின் நடனத்தில் ஒரு பாடல் படமாகியுள்ளது. படத்தில் சமீராவின் டான்ûஸ விட என் டான்ஸ்தான் சிறப்பாக வந்துள்ளது. படம் வெளியானால் இது பற்றி ரசிகர்களுக்கு தெரியவரும்'' என்றார். இப்போது சந்தோஷம்தானே?
குமரேசன் என்கிற கஜினி!
இயக்குநர் சாமியின் "சிந்து சமவெளி' சர்ச்சைக்குரிய களமாக பல விவாதங்களை முன் எடுத்து வைத்தாலும் அதில் நடித்துள்ள கஜினியின் நடிப்பு பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. சினிமா பிரவேசம் குறித்து கஜினி கூறுகையில், ""சின்ன வயதில் இருந்து சினிமாதான் கனவு. செஞ்சி மாவட்டத்தில் குறிப்பிடும்படியான வசதியை என் குடும்பம் பெற்றிருந்த போதிலும், சினிமாவில் நடிகனாக வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து நடிப்பு பயின்றேன். நிறைய தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என வாய்ப்பு தேடும் படலம் தொடங்கி, 18 ஆண்டு கால விடா முயற்சிகளுக்குப் பின் இப்போது இந்த "சிந்து சமவெளி' வாய்ப்பு கிடைத்திருக்கிறது. "சரித்திரம்' படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தேன். அதன் பின்தான் "சிந்து சமவெளி'. குமரேசன்தான் என் பெயர் என்றாலும், சினிமாவில் நிறைய தோல்விகளை பார்த்ததால் கஜினி என்ற பெயர் உனக்கு பொருத்தமாக இருக்கும் என சாமிதான் இந்தப் பெயரை வைத்தார். இப்போது நிறைய கதைகள் வருகிறது. யதார்த்த கதைகளுக்கு நாயகனாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்'' என்றார் கஜினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.