முகப்பு
தினமணி கதிர்

முயற்சி: தில்லியில் காராசேவு...

திருநெல்வேலி அல்வா, கடம்பூர் போளி, ஆத்தூர் வெற்றிலை, தஞ்சாவூர் சீவல், ஊத்துக்குளி வெண்ணை எனப் பல பொருள்கள் சில ஊர்களில் தனிச்சிறப்பு பெற்றவை. அதுபோல விருதுநகர் மாவட்டம், சாத்தூர் என்றால் காராசேவு நினை

Updated On : 20 செப்டம்பர், 2012 at 6:27 AM
பகிர்:
Updated On : 28 டிசம்பர், 2023 at 10:42 PM

திருநெல்வேலி அல்வா, கடம்பூர் போளி, ஆத்தூர் வெற்றிலை, தஞ்சாவூர் சீவல், ஊத்துக்குளி வெண்ணை எனப் பல பொருள்கள் சில ஊர்களில் தனிச்சிறப்பு பெற்றவை.

அதுபோல விருதுநகர் மாவட்டம், சாத்தூர் என்றால் காராசேவு நினைவில் வரும்.

இங்கு தயாரிக்கப்படும் காராசேவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் ரசிகர்கள் உள்ளார்கள்.

சாத்தூரில் காராசேவு தயாரித்து வெற்றிகரமாக ஒரு மகளிர் சுய உதவிக் குழு விற்பனை செய்து வருகிறது என்றால் நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் அதுவே உண்மையாகும். சாத்தூர் வீணை மகளிர் மன்றத்தினர் காராசேவு, சீவல், மசால் கடலை, சீனிசேவு, கருப்பட்டி மிட்டாய் என தமிழ்மணம்மாறா தின்பண்டங்களைத் தயாரித்து, விற்பனைசெய்து வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறார்கள்.

எப்படி வெற்றிகரமாக வியாபாரம் செய்கிறீர்கள்? என ஊக்குநர் எஸ்.சண்முகத்தாய், பிரதிநிதிகள் எஸ்.தங்கமீனா, ஏ.மகேஷ்வரி ஆகியோரிடம் கேட்டோம்:



இந்தக் குழுவை எப்போது தொடங்கினீர்கள்?

2001-ம் ஆண்டு 20 பேர் கொண்டு தொடங்கினோம். தொடக்கத்தில் மாதம் ரூ.30 வீதம் சேமிக்கத் தொடங்கினோம். தொடக்கத்திலேயே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது.

ஊக்குநர் சண்முகத்தாய் பிறந்த வீட்டில் அவரது தந்தை சேவு வியாபாரம் பார்த்து வந்ததால் அவர் அந்தத் தொழில் குறித்து ஏழு வயது முதலே அறிந்து கொண்டாராம். இதனால் சேவு வியாபாரம் தொடங்குவது என முடிவு செய்து, 2002-ம் ஆண்டு சேவு வியாபாரம் தொடங்கினோம்.



தயாரிப்பு மற்றும் விற்பனையை எப்படி

செய்தீர்கள்?


சேவு தயாரிக்க மாவைத் தேய்க்க வேண்டியதிருப்பதால் ஆண்களால்தான் முடியும் என ஒரு ஆணைத் தேர்வு செய்தோம். அவர் அவரது இடத்தில் அடுப்பு வைத்திருப்பார். நாங்கள் மாவு உள்ளிட்டவைகளை வாங்கிக் கொடுத்துவிடுவோம். அவருக்கு உரிய சம்பளத்தைக் கொடுத்துவிட்டால் தேவையான சேவு உள்ளிட்டவைகளை எங்களுக்குத் தயாரித்துக் கொடுத்துவிடுவார்.

நாங்கள் அதை கால், அரை கிலோ என பாக்கெட் போட்டு, அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று விற்பனை செய்யத் தொடங்கினோம். தரமானதாகவும், நியாயமான விலையிலும் விற்பனை செய்ததால் அரசு அலுவலர்கள் வாடிக்கையாளர்களாகிவிட்டனர்.

பின்னர் விருதுநகரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று விற்பனை செய்யத் தொடங்கினோம்.

எங்கள் செயல்பாட்டைப் பார்த்து வந்த மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் எங்களுக்கு வழிகாட்ட முன்வந்தார். பின்னர் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை செய்யப்படும் ஊர்களில் ஸ்டால் அமைக்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.



மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரித்த பொருள்கள் கண்காட்சி யில் பங்கேற்றிருக்கிறீர்களா?

தொடக்கத்தில் அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்டோம். பின்னர் தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு மையம் சார்பில் சென்னையில் 2005-ம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்டு எங்களது தயாரிப்புகளான சேவு உள்ளிட்ட திண்பண்டங்களை 1 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தோம்.

பின்னர் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் தில்லியில் 24 நாள் நடைபெற்ற கண்காட்சியில் எங்களது தயாரிப்புகளை ரூ.2.50 லட்சத்திற்கு விற்பனை செய்தோம். 2006-ம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கண்காட்சியில் எங்கள் தயாரிப்புக்களை விற்பனை செய்து சான்று பெற்றுள்ளோம்.

Advertisement



குழுவில் உள்ள அனைவருமே இந்த வியாபாரத்தில் ஈடுபடுகிறீர்களா?

அரசு அலுவலகங்களுக்கு விற்பனை செய்ய ஊக்குநர் செல்வார். சேவு தயாரிப்பில் ஊக்குநர் உள்பட 6 பேர் ஈடுபட்டுள்ளோம். இதில் ஊக்குநருக்கு மாதம் ரூ.3000 வருமானமும், மற்ற 5 பேருக்கு மாதம் 1500 ரூபாய் வருமானமும் கிடைக்கிறது.

இதுதவிர, வங்கியில் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளோம். இப்பணத்தில் ஒருவர் இட்லி மாவு வியாபாரமும், ஒருவர் இட்லி வியாபாரமும், ஒருவர் ஜவுளி வியாபாரமும், ஒருவர் வடை வியாபாரமும், ஒருவர் ஆப்பம் வியாபாரமும், ஒருவர் பணியார வியாபாரமும் எனப் பல சிறு தொழில்களை 16 பேர் செய்து வருகிறோம்.

தனித்தனியே வியாபாரம் பார்த்தாலும் லாபத்தை சமமாகப் பிரித்துக்கொண்டு வங்கிக்குச் செலுத்த வேண்டிய தொகையை மாதாமாதம் செலுத்தி வருகிறோம். 



உங்கள் தயாரிப்பின் தனிச்சிறப்பு என்ன?

நாங்கள் ஒருமுறை உபயோகித்த எண்ணெயை மறுமுறை உபயோகிப்பதில்லை.

தில்லி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல வேண்டும் என்றால், மூன்று நாளைக்கு ஒருமுறை தயாரித்து, லாரி மூலம் அனுப்பி வைப்போம். ருசியே எங்களது தனிச்சிறப்பு. 



உங்கள் குழுவின் தனிச்சிறப்பு என்ன?

இந்த வியாபாரத்தில் கிடைத்த லாபத்தில் அரை ஏக்கர் நிலம் 1.30 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளோம். 2008-ம் ஆண்டு கிடைத்த லாபத்தில் 20 பேருக்கும் ஒரு கிராம் தங்கக் காசு வழங்கினோம்.

2009-ம் ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு தலா ரூபாய் 1000 ரொக்கமாக வழங்கினோம். 2010-ம் ஆண்டு தீபாவளிக்கு தலா ரூபாய் 1000 பெறுமான மளிகைப் பொருள்கள் வழங்கினோம். ஒவ்வொருவரும் சிறு வியாபாரம் செய்து வருவதால் பொருளாதார நிலையில் வலுவாக உள்ளோம்.



மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

தன்னம்பிக்கைதான் முக்கியம். ஒருங்கிணைப்பு மிகவும் அவசியமாகும்.

வீட்டில் வைத்து உங்களால் முடிந்த வியாபாரத்தை செய்தால், பொருளாதார வளர்ச்சி பெறலாம்.



உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

வங்கியில் ரூ.10 லட்சம் கடன் கேட்டுள்ளோம். அது கிடைத்துவிட்டால் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர் வைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.