உலகத் திரைப்பட விழா: நெஞ்சை வருடிய கதைகள்
மூச்சைப் பிடித்துக் கொண்டு ஹடயோகம் செய்தால் - ஒரு நாளைக்கு ஒருவர் ஐந்து படங்களைப் பார்த்துவிட முடியும். கண் எரிச்சலுக்கு- வீட்டுக்கு வந்து- ட்ராப்ஸ் போட்டுக் கொள்ளலாம். உலகத் திரைப்பட விழாவில் மனதை ஆக
மூச்சைப் பிடித்துக் கொண்டு ஹடயோகம் செய்தால் - ஒரு நாளைக்கு ஒருவர் ஐந்து படங்களைப் பார்த்துவிட முடியும். கண் எரிச்சலுக்கு- வீட்டுக்கு வந்து- ட்ராப்ஸ் போட்டுக் கொள்ளலாம்.
உலகத் திரைப்பட விழாவில் மனதை ஆக்ரமித்த சில கதைகளைச் சொல்கிறேன்.
AM N E S TY (ஆம்னஸ்டி), படத்தின் இயக்குநர்: புஜார் அலிமானி.நாடு : அல்பேனியா.
Advertisement
எல்சாவின் கணவன்- தவறு செய்துவிட்டு- சிறைக் கைதியாக இருக்கிறான். ஸ்பெடிம்- என்பவனின் மனைவியும் ஏதோ தப்புத்தண்டாவில் ஈடுபட்டுவிட்டு சிறைவாழ்க்கை வாழ்கிறாள்...
அல்பேனியாவில் - ஒரு புதிய சட்டம் அமலுக்கு வருகிறது. சிறைக் கைதிகள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் மாதம் ஒருமுறை தங்கியிருக்கலாம்.
மாதம் ஒருதரம் கணவனுடன் தங்கியிருக்க எல்சா- டிரானா சிறைச்சாலைக்கு வருகிறாள். அதுபோல தன் மனைவியுடன் தங்கியிருக்க ஸ்பெடிம் - மாதம் ஒருமுறை அதே சிறைக்கு வருகிறான்.
தம்பதியரை- சிறை அதிகாரிகள், சிறை அறைக்குள் வைத்துப் பூட்டிவிடுவார்கள். சிறிது நேரம் கழிந்ததும் அறைக் கதவு திறக்கப்படும். பார்ட்னர்கள் விடை பெற்றுக் கொள்வார்கள்.
டிரானா சிறைக்குத் தங்கள் ஜோடிகளை நாடிவரும்- எல்சாவுக்கும் ஸ்பெடிமுக்கும் இடையே காதல் மலர்கிறது. பல இடங்களுக்குச் சென்று சுற்றித் திரிகிறார்கள்.
எல்சா வீட்டைச் சேர்ந்த முதியவர்- எல்சாவைக் கண்டிக்கிறார். கணவன் சிறையில் இருக்கும் போது- இப்படி இன்னொரு ஆணுடன் சுற்றுகிறாயே- என்று எல்சாவைக் கண்டிக்கிறார்.
குறித்த காலத்தில்-எல்சாவின் கணவன், விடுதலை ஆகி வீடு திரும்புகிறான். கணவன் வீட்டுக்கு வந்த பிறகும் கூட எல்சாவால்- ஸ்பெடிமை மறக்கமுடியவில்லை.
ரகசிய சந்திப்புகள் நடக்கின்றன. வீட்டுப் பெரியவர்- மோப்பம் பிடித்துவிடுகிறார். கெடுபிடிகள் அதிகமாகின்றன. எல்சா, சிறைக் கைதிபோல் ஆகிவிடுகிறாள்.
ஆவலைக் கட்டுப்படுத்த முடியாமல்- ஸ்பெடிம், எல்சாவைத் தேடிக் கொண்டு அவள் வீட்டுக்கே வந்துவிடுகிறான். ஸ்பெடிமின் அழைப்புக் குரலைக் கேட்டு- மாடியில் இருந்து இறங்கித் தெருவுக்கு வருகிறாள் எல்சா. வீட்டுப் பெரியவர்- ரெட்டைக் குழல் துப்பாக்கியுடன் கீழிறங்கி வருகிறார்.
முதல் துப்பாக்கிக் குண்டு எல்சாவைக் கொன்றுவிடுகிறது. இரண்டாம் குண்டடி பட்டு ஸ்பெடிம் மரிக்கிறான். மாடியில் இருந்து இறங்கித் தெருவுக்கு வரும் எல்சாவின் கணவன்-இரண்டு பிணங்களையும் பார்த்துவிட்டுக் கல்லாகி நிற்கிறான்.
WA I T I NG (வெயிட்டிங்), படத்தின் இயக்குநர்: அபு சையத், நாடு : பங்களாதேஷ்.
ரபியுல் இசைப் பிரியன். பெரிய பாடகனாகி- மேடைக் கச்சேரிகள் செய்து புகழ்பெற வேண்டும் என்று ஆசை. பங்களாதேஷில்- டாக்காவில் தங்கி இசை வகுப்புகளுக்குச் செல்கிறான். தன் சொந்த கிராமத்தில்- தன் பாட்டியால் வளர்க்கப்பட்ட ரபியுல்- தன் பாட்டியை மிகவும் நேசிப்பவன். அந்த மூதாட்டி, தன் பேரனுக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதி ஊக்கப்படுத்துவாள்.
ரஞ்சு- பங்களாதேஷில் இன்னொரு மாவட்டத்தைச் சேர்ந்தவன்.
கல்லூரி மாணவனான அவன்- வன்முறையில் நம்பிக்கை வைக்கும் ஒரு தீவிரவாதிகள் கும்பல் விரித்த வலையில் சிக்குகிறான். அவர்கள், பங்களாதேஷில்- பல இடங்களில் குண்டு வெடிப்பு- சதித் திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.
மேடைக் கச்சேரி செய்துகொண்டிருந்த ரபியுல்- ஒரு குண்டு வெடிப்பில்- தன் இசைக் குழுவினரோடு கொல்லப்படுகிறான். சிறந்த இசைக் கலைஞனும்- நேர்மையாளனுமான ரபியுலின் மரணம்- பங்களாதேஷ் முழுக்க- அனுதாப அலைகளை எழுப்புகிறது.
போலீஸ் தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபடுகிறது. ரஞ்சுவின் வீட்டுக் கதவைத் தட்டும்போது- அவன் அப்பா, கதவைத் திறக்கிறார். தன் மகன் யோக்கியமானவன்- என்று நம்பிக்கையுடனும்- உறுதியுடனும் பேசுகிறார். தன் மகன் அறையைப் போலீசுக்குத் திறந்துகாட்டுகிறார்.
தீவிரவாதம் பேசும் புத்தகங்களையும்- துண்டுப் பிரசுரங்களையும்- ரஞ்சுவின் அறையில் போலீஸ் கண்டெடுக்கிறது. ரஞ்சுவின் அப்பா அதிர்ச்சி அடைகிறார். உளவுத் துறைப் போலீஸில் இருக்கும் தன் நண்பர்கள் சிலரை சந்தித்துப் பேசுகிறார். தன் மகன் ஒரு தீவிரவாதிதான்- என்ற கசப்பான உண்மை- அவரைச் சுடுகிறது.
ரஞ்சுவின் பாட்டியும், அவன் அப்பாவும்- தீவிரவாதிகள் வலையில் சிக்கிவிட்ட ரஞ்சுவை மீட்டெடுக்கப் போராடுகிறார்கள். ரஞ்சு திருந்தினானா? வீடு திரும்பினானா? - என்று சொல்லாமலேயே படம் முடிகிறது. ஆனால் - மதத்தின் பெயரால் நடக்கும் பயங்கரவாதங்களையும் - உயிர்க் கொலைகளையும் படம் ஆழமாகச் சித்திரிக்கிறது. இதில் வரும் குண்டு வெடிப்புச் சம்பவங்கள்- நம்மை உலுக்கி எடுத்துவிடுகின்றன.
THE PA I N T I NG LE S S ON (த பெயிண்டிங் லெசன்)
படத்தின் இயக்குநர்: பாப்லோ பெரில்மான்.நாடு : சிலி.
சிலியில் ஒரு சிறிய பட்டினம். அங்கு, ரயில் பாதை அருகில் ஒரு மருந்துக் கடை. மருந்துக் கடைக்காரருக்கு உலக ஓவிய சரித்திரம் தெரியும். ஓவியம் மற்றும் ஓவியர்கள் பற்றிய புத்தகங்களை அதிகம் படிப்பார்.
ஏற்கெனவே மருந்துக் கடை நடத்திய ஒரு பெரியவர் தன் கடையை இவரிடம் விட்டுச் செல்லும்போது- ஒரு தைல வண்ண ஓவியத்தை அளிக்கிறார். வயதான ஒரு முதியவரின் போர்ட்ரெயிட் அது!
அந்த உருவ ஓவியத்தை மாடலாக வைத்துக் கொண்டு- அதேபோல் ஓர் ஓவியத்தை எழுத முயன்று பார்க்கிறார் புதுக் கடைக்காரர். அதில் ஓரளவுக்குத்தான் அவருக்கு வெற்றி கிடைக்கிறது. மூல ஓவியத்தை அவரால் முழுமையாகப் பிரதி எடுக்கமுடியவில்லை.
ஓர் ஏழைப் பெண், மருந்துக் கடையில்- ஊழியம் செய்ய வருகிறாள். அவள், தன் கைக்குழந்தை மகனையும் சுமந்து கொண்டு வருகிறாள். இரக்க சுபாவம் மிகுந்த கடைக்காரர், அந்தப் பெண்ணை நன்றாக கவனித்துக் கொள்கிறார். அவள் குழந்தையையும் தன் குழந்தை போலவே அன்பு செலுத்தி வளர்க்கிறார். கல்வி புகட்டுகிறார்.
அவனுக்கு ஏழெட்டு வயதாகும்போது ஓவியம் வரையக் கற்றுத் தருகிறார். இவர் சரியாக வரையத் தெரியாமல் தோல்வி அடைந்த முதியவரின் போர்ட்ரெயிட்டை- மூல ஓவியத்தின் அழகு குறையாமல்- சிறுவன் அப்படியே தீட்டிக் காட்டுகிறான். மருந்துக் கடைக்காரர் அசந்து போகிறார்.
தன் தோல்வியை ஒப்புக்கொண்டு தான் தீட்டிய தைல வண்ண ஓவியத்தை சிதைத்துவிடுகிறார்.
நீர் வண்ண ஓவியம், பேஸ்டல் ஓவியம், தைல வண்ண ஓவியம்- அனைத்தையும் சிறுவனுக்குக் கற்றுக் கொடுக்கிறார். அவன் ஒரு குழந்தை மேதை என்பது அந்த ஊருக்குத் தெரிந்து போகிறது.
ஊர் கொண்டாடும் அவனை- உலகம் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மருந்துக் கடைக்காரர். ஓவியப் புத்தகங்களை வாங்கித் தருகிறார். பல ஓவியக் கண்காட்சிக் கூடங்களுக்கு அழைத்துச் சென்று- உலகப் பெரும் ஓவியர்களின் ஓவியங்களை அவனுக்கு அறிமுகப்படுத்துகிறார். அக்கம்பக்கத்தில் உள்ள ஓவிய விமர்சகர்களை அழைத்து வந்து குழந்தை மேதையின் ஓவியங்களைக் காட்டுகிறார்.
அவனுக்குப் பதிமூன்று வயதாகும்போது- அந்தச் சிறுவனின் படைப்புகளை அள்ளிக் கொண்டு- மருந்துக் கடைக்காரர், சிறுவனின் தாயார், அந்தச் சிறுவன் அனைவரும்- ஒரு ரயிலில் பயணம் செய்கிறார்கள்.
ஓர் உலக ஓவியக் கண்காட்சியில் கலந்து கொள்ள....
"அரசியல் சூறாவளி' ஒன்று வீச ஆரம்பிக்கிறது. ராணுவத்தாரின் அராஜகங்கள் எல்லை மீறுகின்றன... ரயிலில் இருந்து முதலில்- மருந்துக் கடைக்காரர் கைதாகிறார். அப்புறம் சிறுவனின் தாயும் ரயிலில் இருந்து இறக்கப்படுகிறாள்...
அந்தச் சிறுவனையும் அவன் படைப்புகளையும்- சுமந்துகொண்டு ரயில் பறக்கிறது!
இந்தச் சம்பவம் நடப்பது- செப்டம்பர் 11, 1973-இல்.
ராணுவ அசட்டையால்- அந்தச் சிறுவனது கலைப் படைப்புகள் காணாமல் போய்விடுகின்றன. சிறுவனும் காணாமற் போய் விடுகிறான்.
அந்தச் சிறுவன் என்ன ஆனான்? அவன் படைப்புகள் எங்கே? இன்றுவரை யாருக்கும் தெரியாது!
காலதேவனின் கொடூரம்!
SH A D O WS IN PA R A D I SE (ஷேடோஸ் இன் பாரடைஸ்)
படத்தின் இயக்குநர்: அகி காரிஸ்மாக்கி.
நாடு : பின்லாந்து.
""எனக்கு நம்பிக்கை வறட்சி ஏற்படும்போது- நான் பார்வையாளர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் படங்களை எடுக்கவே விரும்புகிறேன். வாழ்க்கை மிகவும் கசப்பாக இருக்கிறது! மனிதர்கள் சீக்கிரம் சோர்ந்து போகிறார்கள். எனவே இன்பகரமான முடிவு கொண்ட சினிமாப் படங்களையே நான் எடுப்பேன்..!''- இப்படிச் சொன்னவர் அகி காரிஸ்மாக்கி. இவரது ஆறு திரைப்படங்கள் "ரெட்ராஸ்பெக்டிவ்' என்ற ரீதியில் திரையிடப்பட்டன...
"ஷேடோஸ் இன் பாரடைஸ்' ஓர் எளிய நகரத் துப்பரவுத் தொழிலாளியின் காதல் கதை. கார்பேஜ்மேன் நிக்காண்டர். சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் இலோனாவைக் காதலிக்கிறான்.
ஏற்கெனவே ஓர் இடத்தில் வேலை பார்க்கும்போது- பணப் பெட்டியைத் திருடி- திருட்டுக் குற்றத்துக்கு ஆளானவள் இலோனா.
சூப்பர் மார்க்கெட் மானேஜர் இலோனாவை வசியம் செய்து கவர்ந்து கொள்ளப் பார்க்கிறான். ஆனால் அவனை உருட்டி மிரட்டி நிக்காண்டர்- இலோனாவை வெற்றி கொள்கிறான். யதார்த்த பாணி கதை ஓட்டம்!
புத்ரன் (தமிழ்ப் படம்) படத்தின் இயக்குநர்: ஜெயபாரதி:
இயக்குநர் ஜெயபாரதி- முப்பது ஆண்டுகளில்- ஏழு படங்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே உருவாக்கப்பட்ட அவரது படங்கள் வித்தியாசமானவை! வியாபார ரீதியானவை அல்ல...
வாசுதேவன்- தேவகி தம்பதிகளுக்குத் திருமணம் ஆன ஆறு ஆண்டுகளுக்குப் பின் பிறந்த தவப் புதல்வன்- தர்ஷன்.
அவனுக்குப் பத்து வயது நடக்கும்போது- திடீரென்று காணாமல் போகிறான்... புத்திர சோகம் தேவகியைப் பிழிந்து எடுக்கிறது! மனநோயாளியாகவே மாறிவிடுகிறாள்.
ஒரு மாறுதலுக்காக- மனைவியை சென்னைக்கு அழைத்துச் செல்கிறான் வாசுதேவன். குழந்தைத் தொழிலாளர்களை வைத்துக் கொடுமைப்படுத்தி வேலை வாங்கும் ஒரு கயவர் கூட்டம் கண்ணில் படுகிறது!
குழந்தைகளை மீட்டெடுக்கப் போராடும்போது கணவன், மனைவி இருவருமே கொடூரமாகத் தாக்கப்படுகிறார்கள்... அந்தக் கூட்டத்தினரிடமிருந்து மகனை மீட்டெடுக்கிறார்கள்! உணர்ச்சிமயமாக நகரும் கதை!