முகப்பு
தினமணி கதிர்

கோடை வாசஸ்தலங்கள்: வால்பாறை களங்கப்படாத இயற்கையின் இருப்பிடம்

தொடர் விடுமுறை என்றாலே வெளியூர்களுக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்க வேண்டும் என்ற ஆவல் இல்லாதவர்கள் மிகக் குறைவு. ஏழை, பணக்காரர்கள் அனைவருக்கும் பொதுவான ஆசை இது. கோடை காலத்தில் அனைவருக்கும்

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:57 PM
பகிர்:

தொடர் விடுமுறை என்றாலே வெளியூர்களுக்குச் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைப் போக்க வேண்டும் என்ற ஆவல் இல்லாதவர்கள் மிகக் குறைவு. ஏழை, பணக்காரர்கள் அனைவருக்கும் பொதுவான ஆசை இது.

கோடை காலத்தில் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது உதகைதான். அதன்பின் ஏற்காடு. அதிலும் உதகையில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவினால் அங்கு செல்வதற்கு இப்போது அனைவருக்கும் தயக்கம் ஏற்படுகிறது. ஆனாலும் மக்களின் பார்வைக்குப் படாத பல்வேறு சுற்றுலாத் தலங்கள் இன்னமும் தமிழகத்தில் இருக்கின்றன.

அந்த வகையில் உதகையின் சகோதரி, வால்பாறை மக்களின் பார்வைக்கு அவ்வளவாகப் படவில்லை.

 மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3500 அடி உயரத்தில் உள்ள மூன்றாம் நிலை நகராட்சிப் பகுதிதான் வால்பாறை. 

1846-ல் ராமசாமி முதலியார் வால்பாறையில் காபியைப் பயிரிட்டார். 1864-ல் கர்நாடிக் காபி கம்பெனி அப்போதைய சென்னை அரசிடம் விவசாயத்துக்கு நிலம் தருமாறு கேட்டது. அரசும் ஏக்கர் ரூ.5 வீதம் விற்பனை செய்தது. கம்பெனி இதில் காபி பயிரிட்டது. ஆனால் அதில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காததால் நிலத்தை விற்பனை செய்தது கர்நாடிக் காபி கம்பெனி.

1875-ல் இங்கிலாந்து இளவரசர் 7-ம் எட்வர்ட் வால்பாறையில் உள்ள புல்மலைக்கு வேட்டையாட வந்தார். பொள்ளாச்சி அருகே அங்கலக் குறிச்சியில் தங்கியிருந்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.

இப்போது வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலைச் செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. வால்பாறைக்குச் செல்லும் வழியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேலெனக் காட்சி தரும் தேயிலைத் தோட்டங்கள்தான்.

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 63 கி.மீ. தொலைவில் உள்ள வால்பாறைக்கு வனப்பகுதிக்குள்தான் சென்றாக வேண்டும்.

வால்பாறை துவங்கும் இடத்தில் ரம்மியமாகக் காட்சி தரும் ஆழியாறு அணை. அதற்கு அடுத்து குரங்கு அருவி. மொத்தம் 40 கொண்டை ஊசி வளைவுகள். செல்லும் வழியில்  ஆழியாறு அணையின் காட்சி. பல்வேறு காட்சி முனைகள், தமிழக அரசு விலங்கான வரையாடு, சிங்கவால் குரங்கு, யானை, மலை அணில், எப்போதாகிலும் சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளைப் பார்க்க முடியும்.  வால்பாறையில் மிக அதிக அளவில் சுற்றுலாத் தலங்கள் இருந்தாலும் அதிகமாக இவை வெளியில் தெரியவில்லை.

அதனால் இங்கு சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் உள்ளது.

வால்பாறைக்கு, ஏழாவது சொர்க்கம் (மிக அதிக மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இடத்தை இப்படித்தான் அழைப்பார்கள்) என்ற பெயரும் உண்டு. தமிழக அரசின் சார்பில் வால்பாறையைப் பிரபலப்படுத்துவதற்காக கோடை விழா நடத்தப்பட்டது. இதன் மூலம் வால்பாறையின் புகழ் வெளியுலகுக்கு பரவ வேண்டும் என்பதற்காக விழா நடந்தாலும், பயணிகளுக்குத் தேவையான வசதிகள் முழுமையாகக் கிடைக்கவில்லை. அதனால் இங்கு பெரும்பாலானவர்கள் இங்கே தங்கி வசிக்க முடிவதில்லை.

மேலும் அடிக்கடி தேயிலைத் தோட்டங்களுக்குள் யானைகள் கூட்டம் கூட்டமாகப் புகுவதும், சிறுத்தைகள் வால்பாறை நகருக்குள் சுற்றுலா வந்து செல்வதும் வாடிக்கையாக நடக்கும் சம்பவங்கள்.

சுற்றுலாத் துறையின் சார்பில் தங்கும் விடுதிகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் சார்பில் உயர் அதிகாரிகள் வால்பாறைக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளனர்.

வால்பாறை அருகே உள்ள சில முக்கிய இடங்கள்:

சோலையாறு அணை: ஆசியாவில் மிக ஆழமான இரண்டாவது அணை. வால்பாறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணை மிகவும் அழகானது. இங்கு தங்கிச் செல்ல பொதுப்பணித்துறையின் விருந்தினர் விடுதி உள்ளது.

 சின்னக்கல்லார் அணை: இந்தியாவில் சிரபுஞ்சிக்கு அடுத்து அதிக மழை பெய்யும் இடம் இதுதான்.

வால்பாறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அணைப்பகுதியில் அருவியொன்றும் உள்ளது. இந்த அருவியின் சத்தம் சிங்கம் உறுமுவதைப் போல இருக்கும். இங்கு தங்கிச் செல்ல பொதுப்பணித்துறையினர் அனுமதி தேவை.

 நீராறு அணை: அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள இந்த அணை, பாசனம் மற்றும் மின்னுற்பத்திக்காகக் கட்டப்பட்டது. வால்பாறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி: புன்னகை மன்னன் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் நயாகரா என்று அழைக்கப்படும் இந்நீர்வீழ்ச்சி கேரளப் பகுதியில் உள்ளது. வால்பாறையில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள இந்நீர்வீழ்ச்சிக்கு அடர்ந்த வனப்பகுதியின் நடுவில் சென்றாக வேண்டும். பல்வேறு வனவிலங்குகளையும் பார்க்க முடியும்.

புல்மலை: ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிக்குள் அமைந்துள்ளது. இயற்கை விரும்பிகளுக்கு சொர்க்கமாகக் காட்சி தருகிறது புல்மலை. உலகின் வேறு இடங்களில் காணக்கிடைக்காத, புல்மலையைப் பார்ப்பதற்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

பச்சைப் புல்லை விரித்தாற்போன்ற புல்மலை - உலகின்  இயற்கை அதிசயத்துக்கு எடுத்துக் காட்டு. இந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடுகள் இங்கு அதிக அளவில் உள்ளன. ஏழாவது சொர்க்கமான வால்பாறையைச் சுற்றிலும் 8 அணைகள் உள்ளன.

வால்பாறையில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படாததால் ஏற்பட்ட ஒரு நன்மை, இங்கே சுற்றுச் சூழல் இன்னும் கெடவில்லை. அதனால் இயற்கைத் தாய் தொடர்ந்து பசுமை உடையை அணிந்து ஜொலித்துக் கொண்டிருக்கிறாள் என்பது நிதர்சன உண்மை. சுற்றுலாவை மேம்படுத்தினால் வேலை வாய்ப்பும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. வாய்ப்பிருந்தால் வால்பாறைக்குச் சென்று வரலாம்.

ஆனைமலையின் தந்தை கார்வர் மார்ஷ்:

பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் கவரக்கல் எஸ்டேட் என்ற இடத்தில் காட்சி முனை உள்ளது. இங்குள்ள பள்ளத்தாக்கை நோக்கிக் கைகாட்டியபடி ஓர் ஆங்கிலேயர் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறார். அந்த ஆங்கிலேயர் கார்வர் மார்ஷ்.

அவர் கடந்த 1890ல் வால்பாறை மலைப்பகுதியில் பெய்யும் மழை அரபிக் கடலில் சென்று கலப்பதைக் கண்டறிந்தார். இதைக் காரணம் காட்டி வின்டில் மற்றும் நார்டன் ஆகிய ஆங்கிலேயர்கள் தங்களுக்கு வேண்டிய நிலத்தைப் பெற்று காபித் தோட்டங்களை அமைத்தனர்.

தோட்டப் பணியில் 17 ஆண்டுகள் அனுபவம் மிக்க கார்வர் மார்ஷை ரூ.250 மாதச் சம்பளத்துக்கு நியமித்தனர். தொழிலாளர்களிடம் மிகுந்த அன்புடன் பழகிய கார்வர் மார்ஷ், மருத்துவ ஆலோசனைகளையும் வழங்குவாரென்று கூறப்படுகிறது. இதனால் அவர் ஆனைமலையின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.

அவர் இறந்தபின் அவருடைய மனைவி அனுப்பிய சிலைதான் இப்போதும் ஆனைமலை பள்ளத்தாக்கை கம்பீரமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →