மாலை வாரார் ஆயினும் மாணிழை
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்
கோவலன் யாழ் எடுத்து காவிரியின் சிறப்பையும் கடற்கரை வனப்பையும் மாதவியின் மனம் மகிழும் வண்ணம் கானல் வரி பாடத் தொடங்குகின்றான். அவன் பாடியதன் பொருள் இதுதான்.
""காவிரிப் பெண்ணே! சோழ மன்னன் வளையாத செங்கோலை உடையவன். தன்னுடைய வலிமையால் கங்கைக் கரையையும் வென்றான். அப்படி அவன் கங்கையாகிய மங்கையை மணந்தாலும் நீ அவனை வெறுத்து ஒதுக்கவில்லை! தெற்கே குமரியை வென்று அவளையும் மணந்தான் உன் கணவன். அப்போதும் நீ அவனை வெறுத்து விடவில்லை!
கற்பு நிறைந்த மாதருடைய ஒப்பற்ற குணம் அதுதான். அது உன்னிடம் நிறைந்திருப்பது அறிந்தேன் வாழி காவேரி''.
கோவலன் அவ்வாறு பாடியதைக் கேட்ட மாதவி, அவன் வேறு எண்ணத்தோடுதான் அவ்வாறு பாடுகின்றான் என்று எண்ணி, அவளும் அவனுக்கு விடையளிப்பது போலப் பாடுகிறாள்.
""காவிரிப் பெண்ணே! உன் கணவன் சோழ மன்னன் நீதி தவறாமல் செங்கோல் செலுத்துவதனால்தான் நீ மனம் கோணாமல் இருக்கின்றாய் என்று அறிந்து கொண்டேன்''.
ஊழ்வினை விளையாடத் தொடங்குகிறது. இருவர் உள்ளங்களிலும் ஐய அலைகள் எழத் தொடங்கின. விளைவு விபரீதமாயிற்று. ""கானல்வரி யான் பாட தான் ஒன்றின்மேல் மனம் வைத்து மாயப் பொய் பலகூட்டும் மாயத்தால் பாடினாள்'' என்று எண்ணி, கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்து செல்கின்றான்.
மாதவி மனம் நொந்தாள். ஆடலும் பாடலும் அடங்கிப் போயின. மனம் வருந்தித் தனியே தன் இல்லம் சேர்ந்தாள்.தனிமை வாட்டியது! கோவலனுக்கு மடல் எழுதி, தோழி வசந்தமாலையிடம் கொடுத்து அனுப்புகிறாள். மடலை வாங்க மறுத்து அவளைத் திருப்பி அனுப்புகிறான் கோவலன்.
""வசந்தமாலையே, உன் தலைவி ஒரு நாட்டியக்காரிதானே! இந்த நடிப்பெல்லாம் அவளுக்குக் கைவந்த கலை'' என்று மடலைப் பெறாமல் திருப்பி அனுப்பி விடுகின்றான்.
ஆனாலும், கோவலன் மீது அவள் கொண்ட காதலும் நம்பிக்கையும் அவளை விட்டு விலகவில்லை. ""மாலை வாரார் ஆயினும், மாணிழை காலை காண்குவம்'' என்கிறாள் மாதவி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.