மாணவர்களைத் தன் குழந்தையாகக் கருதி கற்றுக்கொடுக்கும் மன நிலையை ஆசிரியர்களுக்கு உருவாக்கி வருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.
குழந்தைகளை நேசித்தல், அவர்களைப் புரிந்து கொள்ளுதல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்தல், அன்பாக நடந்து கொள்ளுதல், அவர்களின் குறும்புகளை ரசித்தல் போன்ற தன்மைகளை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். இதற்காக, குழந்தைகள் கல்வி முறை தொடர்பான புத்தகங்களை ஆசிரியர்கள் வாசிக்க வைக்கும் முயற்சியையும் தொடங்கியுள்ளது.
இதற்காக அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை ஒருங்கிணைத்து குழந்தைகளுக்கான கல்விமுறை குறித்து சர்வதேச அளவில் வெளிவந்துள்ள புத்தகங்களைப் படிக்கவைக்கும் முயற்சியை கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. இதுவரை மூன்று முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட கிளை சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான இந்த முகாம் மூன்றாவது முறையாக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கர்நாடக எல்லை பகுதியில் உள்ள கெத்தேசால் மலை கிராமத்தில் அண்மையில் நடத்தப்பட்டது.
குழந்தைகளுக்கான மாற்றுக் கல்வியைத் தரவேண்டும் என்பதற்காக ஆசிரியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அங்கே வாசிப்பு முகாம் என்ற பெயரில் உண்டு உறைவிட முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாநிலம் முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து பங்கேற்பாளர்கள் வந்தனர்.
புத்தகத்தைத் தனியாகத்தானே படிப்பார்கள். இதில் இயக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று எண்ணலாம்.
குழந்தைகளை மையப்படுத்திய புத்தகங்களான, "குழந்தைகளைக் கொண்டாடுவோம்', "டோட்டோ சான் (ஜன்னலில் ஒரு சிறுமி)', "ஏன் டீச்சர் என்னைப் பெயில்லாக்கிட்டீங்க?', "முதல் ஆசிரியர்', "எல்லா குழந்தைகளும் பள்ளிக்கூடம் போகணும்', "எனக்குரிய இடம் எங்கே?', போன்ற பல புத்தகங்கள் கூட்டாக வாசிக்கப்படுகின்றன. முகாமில் கூட்டு வாசிப்பின் பலன் தெரிகிறது. மேலும் என்ன புத்தகம் வாசிக்கப்பட வேண்டும் என்ற தகவல் பங்கேற்பாளர்களுக்கு முன்னமே தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் அந்தப் புத்தகங்களைப் படித்து உள்வாங்கிய பின், அதற்கான விமர்சனத்துடன்தான் வருவார்கள். அத்துடன் வாசிப்பு முகாமில் புத்தகங்களை வாசித்தபின், புத்தகங்கள் பற்றி குழுவில் ஆழமாக, விரிவாக விவாதம் செய்யப்படும். ஆசிரியர்களின் கருத்தும் முகாமின் அமர்வுகளின் சொல்லப்படும்.
இங்கு வாசிக்கப்படும் அனைத்துப் புத்தகங்களும் குழந்தைகளுக்கான மாற்று முறை கல்வியைக் கொண்டு வருவதன் அவசியத்தை மையப்படுத்தியே அமைந்துள்ளன. "குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று அரசு சட்டம் போட்டபோது, அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லை. ஆனால் இந்த முகாம்களில் பங்கேற்று புத்தகங்களைப் படித்த பிறகு குழந்தைகளை இனி அடிக்கப்போவதில்லை. வகுப்பறையில் என்னுடைய செயல்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் மன்னிப்பு கேட்பேன்' என்று ஓர் அரசு பள்ளி ஆசிரியர் தன் கருத்தைப் பதிவு செய்தார். இது அறிவியல் இயக்கத்தின் இந்த முயற்சி பயனுள்ளது என்பதை உணர்த்தியது.
குழந்தைகளின் திறன் என்ன என்பதை அறிந்து, அவர்களது திறனுக்கேற்ப பாடங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும் போன்ற நல்லெண்ணங்களையும் இந்த முகாம் ஆசிரியர்களுக்கு உருவாக்கியுள்ளது. நல்லாசிரியர் விருது பெறுவதற்கான அளவுகோல் என்ன என்பது, இப்போதுள்ள ஆசிரியர்களுக்குத் தெரியும். இந்த விருது சமுதாய அங்கீகாரமாக இருக்கலாம். ஆனால் குழந்தைகள் மனதில் நல்ல ஆசிரியராக இருப்பது முக்கியம். அரசு விருதை விட அரும்புகள் மனதில் இடம் பிடிப்பதுதான் மன நிறைவு தரும் விருதாக இருக்க முடியும் என்பதை உணர்ந்துள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்ததும் மாற்று முறை கல்விக்கு அடித்தளம் இட்டுள்ளதை உணர்த்தியது.
இந்த முகாம் குறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க ஈரோடு மாவட்ட தலைவர் மணியிடம் கேட்டபோது, ""மாற்று முறை கல்வி என்ன என்பதையும், அரசு பள்ளிகளில் குறிப்பாக தொடக்கப்பள்ளிகளில் உள்ள குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் புத்தகங்கள் வாயிலாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தக வாசிப்பு முகாம் தொடங்கப்பட்டது.
ஈரோடு மாவட்ட கிளை மூலம் நடத்தப்பட்டுவரும் இந்த முகாமை. இனி மண்டல அளவிலும் மாநில அளவிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மனித வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை புத்தகங்களுக்கு உள்ளது. ஆசிரியர்களின் கற்பித்தல் முறையில் மாற்றம் கொண்டுவர, உதவிய இந்தப் புத்தக வாசிப்பு முகாம் தற்போது கல்வியாளர்கள் மற்றும் புத்தகங்கள் மீது ஆர்வம் கொண்டவர்களை ஈர்த்து வருகிறது.
மூன்றாவது முகாமிலேயே 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். குழந்தைகள் அந்தப் பருவத்தில் அவர்களாகவே இருக்கவேண்டும். ஆனால் தற்போதையக் கல்வி முறையும், ஆசிரியர்களும் இந்த உரிமையை குழந்தைகளிடம் பறிந்துக்கொண்டுள்ளன. குழந்தைகளின் இந்த உரிமையை மீட்டுக்கொடுக்க, ஆசிரியர்களோடு கைகோர்த்துள்ளது அறிவியல் இயக்கம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.