தினமணி கதிர்

திரைக்கதிர்: தன்னம்பிக்கை... விடாமுயற்சி... சாதனை!

மக்கள் கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில், ஞானராஜசேகரனின் உதவியாளர் பாலுமணிவண்ணன் இயக்கும் படம் "ஆசைப்படுகிறேன்'. தடகள வீரர்கள் காயத்ரி மற்றும் சேகர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் கூறியது, "

ஜி. அசோக்

க்கள் கலைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில், ஞானராஜசேகரனின் உதவியாளர் பாலுமணிவண்ணன் இயக்கும் படம் "ஆசைப்படுகிறேன்'. தடகள வீரர்கள் காயத்ரி மற்றும் சேகர் நடிக்கின்றனர். படம் குறித்து இயக்குநர் கூறியது, ""எல்லோருக்கும் சிறிய வயதில் ஏதாவது ஒரு விளையாட்டில் ஆர்வம் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பின் அந்த விளையாட்டின் மீது ஆர்வம் குறைந்து, வெவ்வேறு துறைகளுக்குச் சென்று விடுவார்கள். விளையாட்டின் மீது தீராத பற்றுக் கொண்டவர்களே அத்துறையில் ஜொலிக்க முடிகிறது. இப்போது இருக்கிற சச்சினுக்கும், விஸ்வநாதன் ஆனந்துக்கும் யாராவது ஒருவர் நிச்சயம் முன் மாதிரியாக இருந்திருப்பார்கள். அவர்கள்தான் அவர்களை இன்னும் வழி நடத்துகிறார்கள். அது மாதிரிதான் இதுவும். சின்ன வயதில் ஆசைப்படும் தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்டு போராடும் பெண்ணுக்கு அது எப்படி சாத்தியமாகிறது என்பதுதான் கதை. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதுதான் கதை. தருமபுரி அருகில் உள்ள அரூர் என்ற மலைக்கிராமத்தின் பின்னணியில் இக்கதையைச் சொல்லியிருக்கிறேன். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் கவனம் ஈர்த்த காயத்ரி இதில் நடிக்கிறார். அதேபோல் சேகர் என்பவரும் தடகள வீரர்தான். சமூக நோக்கத்துக்கான இந்தப் படம் அனைவரின் கவனத்தையும் நிச்சயம் ஈர்க்கும்'' என்றார் இயக்குநர் பாலுமணிவண்ணன்.

 சில நிபந்தனைகள்...?

 கதை சொல்லும் போதே படத்தில் இப்படித்தான் நடிக்க வேண்டும், அந்த மாதிரியான ஹேர் ஸ்டைலில் இருக்க கூடாது என நிபந்தனைகளை ஹீரோக்களுக்கு விதிப்பது இயக்குநர்களின் வாடிக்கை. இப்போது நடிகர் சிம்புவுக்குக் கதை சொல்லுபவர்கள், சில நிபந்தனைகளை விதித்து விட்டுத்தான், கதை சொல்ல ஆரம்பிப்பதாக தகவல். சமீபத்தில் இயக்குநர் அமீர், கதை சொல்ல சிம்புவை சந்தித்தார். கதையைப் பொறுமையாகக் கேட்ட சிம்பு, இடையிடையே சில திருத்தங்களைச் சொன்னாராம். இயக்குநரும் செய்து விடலாம் என்று கதையின் அடுத்த நகர்வுக்குச் சென்றிருக்கிறார். கதையைச் சொல்லி முடித்ததும் அடுக்கடுக்கான நிபந்தனைகளை சிம்புவுக்கு விதித்தாராம் அமீர். சிம்புவும் கதை பிடித்திருப்பதால் இதை ஒப்புக் கொள்கிறேன் எனச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே இயக்குநர் ஷங்கரிடம் "நண்பன்' பட கதையை கேட்டு விட்டு, கடைசியில் அதை டிராப் செய்ததால், அமீர் சில நிபந்தனைகளை முன் கூட்டியே விதித்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.

 பாடல் காட்சிகளில் வெளிநாட்டு நடன அழகிகள்!

புதுமுகம் அஜ்மத் நாயகனாக நடித்து இயக்கும் படம் "கத்திரி வெயில்', மீனு கார்த்திகா, தான்யாமேரி நாயகிகளாக நடிக்கிறார்கள். "தலைவாசல்' விஜய், வின்சென்ட் அசோகன், போஸ் வெங்கட், அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ""உலகத்தின் எல்லா நாடுகளிலும் நாளுக்கு நாள் தீவிரவாதம் தலைத்தூக்கி வருகிறது. நாளுக்கு நாள் தீவிரவாத இயக்கங்கள் புதிதாக உருவாகின்றன. இதை மையப்படுத்திதான் திரைக்கதை உருவாகி இருக்கிறது. மக்கள் நெருக்கடிமிக்க மாநகர் ஒன்றில் நடைபெற்ற குண்டு வெடிப்பின் பின்னணிதான் கதை. அதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி குற்றவாளிகளைப் எப்படி பிடிக்கிறார் என்பதே சுவாரஸ்யம். ஹாலிவுட் தரத்துக்குப் படத்தை உருவாக்க முயற்சி செய்திருக்கிறோம். அதில் வெற்றி பெற்று விட்டதாகவும் நினைக்கிறோம். படத்தின் ஏராளமான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றன. பாடல் காட்சிகளில் வெளிநாட்டு நடன பெண்களைப் பெரும் அளவில் பயன்படுத்தியிருக்கிறோம். துபையில் மட்டும் 40 நாள்கள் படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. தமிழகத்தில் பாண்டிச்சேரி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களைச் சில காட்சிகளுக்குப் பயன்படுத்திருக்கிறோம்'' என்றார் அஜ்மத்.

பில்டப் இல்லாத நடிகர்!

கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.பி.சரண் தயாரிக்கும் படம் "ஆரண்ய காண்டம்'. பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இப்படத்தில் முக்கிய பாத்திரம் ஏற்கிறார். சம்பத், பெங்களூர் மாடல் யாஸ்மின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை புதுமுகம் குமாரராஜா இயக்குகிறார். படம் குறித்து அவரிடம் பேசிய போது,

 ""ஆரண்ய காண்டம் என்பது காட்டில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு. அதனால் இதற்கு குறியீடாகத்தான் அந்தப் பெயரை வைத்துள்ளோம். காட்டைப் போல் நாட்டில் உலவும் மிருகங்களின் வாழ்வும், அது தரும் துன்பமும்தான் கதை. சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற வாசகத்தை வலியுறுத்தும் விதமாக கதை அமைந்திருக்கிறது. ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு விதமான உணர்வு இருக்கிறது காலையில் ஒரு விதமாக இருக்கும், மனிதன் மாலையில் வேறொரு மனநிலையில் இருப்பான். இந்த மனநிலை மாற்றங்கள் எந்த அளவுக்கு ஆபத்தைத் தருகின்றன என்பதை சுவாரஸ்யமாக கொஞ்சம் கமர்ஷியல் கலந்து சொல்லியிருக்கிறோம். பாலிவுட் நடிகர் ஜாக்கியைத் தேர்வு செய்வதற்கு முன், இங்குள்ள சிலரிடம் இந்தக் கதையைச் சொல்லி நடிக்க

 அழைத்தேன். இமேஜ் பார்த்து சிலர் இது வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். கதை சொல்லி, கேரக்டரை பற்றி எடுத்து சொன்னதும் உடனே நடிக்க சம்மதித்தார் ஜாக்கி. இந்தியாவின் ஒரு முக்கியமான நடிகருக்கான எந்த பில்டப்பும் இல்லாமல் நடித்து கொடுத்தார். இந்த கதையில் யாரும் ஹீரோ இல்லை. கதையின் நகர்வில் எல்லோருக்கும் பங்கு இருக்கிறது'' என்றார் குமாரராஜா.

 4 மணி நேரம் செல்போன் பிஸி!

  ""தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்கான தேசிய விருதில் பாராட்டுகளும் இருக்கிறது. பொறாமைகளும் இருக்கிறது. ஒருவர் முன்னேறினால், மற்றவர்களுக்குப் பிடிக்காது. இது எல்லா துறைகளிலும் இருக்கும் என நினைக்கிறேன். ஒருவர் மீது ஒருவர் பாசம் காட்டுவதை விட, பொறாமைப்படுவதுதான் அதிகம். இதை நினைத்து நான் வேதனைப்பட்டிருக்கிறேன். அதனாலேயே நான் அதிகமாக யாரிடமும் பேசுவதில்லை. சில இடங்களில் கூட்டங்களைக் கண்டாலே எனக்கு பிடிக்காது. அதில் ஆளுக்கு ஒன்று என எதாவது சொல்லுவார்கள். அது எனக்கு எரிச்சலை ஏற்படுத்தி விடும். "தென்மேற்கு பருவக்காற்று' படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு வந்ததும், நிறைய பேர் வாழ்த்து சொன்னார்கள். தொடர்ந்து நான்கு மணி நேரம் என் செல்போன் பிஸியாக இருந்தது. இது போன்ற ஒரு தருணத்தை நான் இதுவரை சந்தித்தது இல்லை. அப்போதுதான் என்னை எவ்வளவு பேர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்தேன். பொறாமை மிக்க இந்த உலகத்தில் இவ்வளவு பேர் என் மீது அன்பு வைத்திருக்கிறார்களா? என்று எண்ணி நெகிழ்ந்து போனேன். அப்பாவி அம்மா, அழுகுணி அம்மா வேடங்களில்தான் நடிக்கத் தெரியும் என்று எனக்குள் ஓர் எண்ணம் இருந்தது. அந்த எண்ணத்தை மாற்றியவர்கள் இயக்குநர்கள்தான். அவர்கள்தான் என்னைத் துணிச்சலான கேரக்டர்களில் நடிக்க வைத்தார்கள்.''

 சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற மகிழ்ச்சியில், பத்திரிகையாளர்களிடம் இப்படி மனம் திறந்து பேசினார் சரண்யா.

 மனம் நிறையணும்!

  "கோ' படம் போன்றே மனநிறைவான படத்தை மீண்டும் எதிர்பார்த்தாக தெரிவித்தார் கார்த்திகா. இது குறித்து அவரிடம் பேசிய போது, "" என் தந்தையைப் போல் தொழில் அதிபராகத்தான் ஆசை. அது போலவே செய்தேன். அதற்காக படித்து பட்டமும் பெற்றேன். அப்போதுதான் "ஜோஸ்' தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு ஆர்வமில்லை. அந்தப் பட நிறுவனத்தின் படங்களில் ஏற்கெனவே என் அம்மா ராதா நடித்திருந்ததால், என்னை நடிக்க வைக்க அவர் ஆசைப்பட்டார். நடிப்பு பற்றி எதுவுமே தெரியாத எனக்கு அம்மா துணையாக இருக்கிறார். மேக்கப், காஸ்ட்யூம் என எல்லாவற்றிலும் அக்கறை எடுத்து கொள்கிறார். படப்பிடிப்பு தளத்துக்குள் சென்று விட்டால், இயக்குநர் சொல்லுவதைத்தான் கேட்க வேண்டும் என அறிவுரை வழங்கியிருக்கிறார். அதன்படி நடந்து கொள்கிறேன். மலையாளத்தில் "மகரமஞ்சு' என்ற படத்தில் இரு வேடங்களில் நடித்தேன். அப்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் சரியான ஊக்கம் தந்து பயத்தை போக்கினார். இப்போது தமிழில் "கோ' படம் சூப்பர் ஹிட். இந்த வருடத்தில் இதுதான் பெரிய ஹிட் படம் என பேசிக் கொள்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆசை இல்லை. "கோ' மாதிரியான மனநிறைவை தரும் படங்கள் மட்டுமே என் தேர்வாக இருக்கும். திறன் வாய்ந்த கதைகளும், அதை இயக்கும் இயக்குநர்களுமே எனக்கு போதும்'' என்றார் கார்த்திகா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT