இந்தியரின் மேற்பார்வையில் உருவான "கேட்வே ஆஃப் இந்தியா'
மும்பை காம்தேவி பகுதியில் பழைய கட்டடங்கள் நிறைந்த இடத்தில் ஒரு கட்டடத்தை ஒட்டினாற்போல் "கேட்வே ஆஃப் இந்தியா'வின் ஒரிஜினல் மினியேச்சர் ஒன்று இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம். அதை அங்கு அமைத்தவர் ராவ்ப
மும்பை காம்தேவி பகுதியில் பழைய கட்டடங்கள் நிறைந்த இடத்தில் ஒரு கட்டடத்தை ஒட்டினாற்போல் "கேட்வே ஆஃப் இந்தியா'வின் ஒரிஜினல் மினியேச்சர் ஒன்று இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம்.
அதை அங்கு அமைத்தவர் ராவ்பகதூர் யஷ்வந்த்ராவ் தேசாய். இவர் பொதுப்பணித்துறையில் கிரேடு ஒன் ஓவர்சியராக கன்சல்டிங் ஆர்கிடெக்காக பணியாற்றிய போது இவரது மேற்பார்வையில்தான் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மியூசியம், ஜெனரல் போஸ் ஆபீஸ், ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் டெக்னிகல் பிளாக், ஓல்டு கஸ்டம்ஸ் ஹவுஸ், ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், தி கேட்வே ஆஃப் இந்தியா ஆகியவை உருவாயின.
இவை அனைத்திலும் "கேட்வே ஆஃப் இந்தியா' இவருக்கு தனி கவுரவத்தையும் பெருமையையும் தேடித் தந்தது. 1923-ஆம் ஆண்டு "கேட்வே ஆஃப் இந்தியா' கட்டி முடிக்கப்பட்டவுடன் அதேபோன்று மினியேச்சர் ஒன்றைத் தயாரித்து பொதுப் பணித்துறை அலுவலக வளாகத்திற்குள் வைத்தார். இவரது பணித்திறமையைப் பாராட்டி அதிகாரப்பூர்வமான கெஜட்டில், ""கடந்த ஆண்டு கான்கிரீட் மேற்கூரைகள் அமைக்கும் பணி ஓவர்சியர் பொறுப்பில் விடப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட யஷ்வந்த் ராவ் தேசாய் மிகவும் சிரமமான அந்தப் பணியை ஆர்வத்துடன் திறமையாக செய்துமுடித்தார்'' என்று குறிப்பிட்டிருந்தது.
1876-ஆம் ஆண்டு பிறந்த தேசாயின் குடும்பமே பொதுப்பணித் துறையுடன் சம்பந்தப்பட்டிருந்தது. இவரது தந்தையும் பொதுப்பணித் துறையில் கவுரவ உதவி என்ஜினீயராக பணியாற்றியுள்ளார். ஆரம்ப கல்வி முடிந்தவுடன் தேசாய், எல்பின்ஸ்டன் மிடில் ஸ்கூலில் ஆங்கில கல்வி கற்று வில்சன் ஹைஸ்கூலில் சேர்த்தார். அவரது கல்வியறிவையும் திறமையையும் கண்ட ஆசிரியர்களும் பிரின்ஸ்பாலும் அவர் 13 வயதாக இருக்கும்போதே இங்கிலாந்துக்கு அனுப்பி படிக்க வைக்க நிதியுதவி அளிப்பதாகக் கூறினர்.
அன்றைய காலத்தில் வெளிநாடு செல்வதை மராட்டிய சமூகத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் வெளிநாடு செல்லும் வாய்ப்பை இழந்தார். உறவினர் உதவியால் பொதுப்பணித் துறையில் மாதம் பத்து ரூபாய் சம்பளத்தில் வேலையில் சேர்ந்தார். கூடவே 1902-ஆம் ஆண்டு ஜே ஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் சேர்ந்து ஆர்கிடெக்சர் கோர்ஸ் படித்து முடித்தார்.
1911-ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது அவரது உருவச் சிலையை பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மியூசியத்தில் அமைக்கும் பொறுப்பு தேசாயிடம் ஒப்படைக்கப்பட்டது. முதலாம் உலகப் போரின் போது காயமடைந்த ராணுவ வீரர்களைப் பராமரிக்க போதுமான மருத்துவமனைகள் இல்லாததால் பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் மியூசியம் மருத்துவமனையாக மாற்றப்பட்டபோது லேடி ஹார்டிங் போர் மருத்துவமனையாக மாற்றும் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவரது திறமையை பாராட்டி "ராவ் சாகேப்' பட்டம் வழங்கப்பட்டது.
மன்னன் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னமொன்றை அமைக்க அன்றைய ஆங்கிலேய அரசு தீர்மானித்தது. மும்பையில் "கேட்வே ஆஃப் இந்தியா' அமைக்க லார்டுசிட்ஹாம் கிளார்க் அடிக்கல் நாட்டினார். ஜான் விட்டெட் வடிவமைப்பின்படி கட்டி முடிக்க ரூ. 26,54,665 ஆகுமென மதிப்பீடு செய்யப்பட்டது. தேசாய் மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்ட "கேட்வே ஆஃப் இந்தியா' 12 ஆண்டுகளுக்குப் பின்னர் 1924-ஆம் ஆண்டு வைஸ்ராய் லார்டு ரீடிங் திறந்துவைத்தார். தேசாயின்
திறமையைப் பாராட்டி ராவ் பகதூர் பட்டமும் வழங்கப்பட்டது.
1927-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி யஷ்வந்த் ராவ் தேசாய் மும்பைக்கருகில் பஞ்சகனியில் காலமானார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மும்பையில் "கேட்வே ஆஃப் இந்தியா' உள்பட பல முக்கிய கட்டடங்கள் இவரது மேற்பார்வையில் உருவானது, பெருமைக்குரிய விஷயமாகும்.