""கொள்கைக்காக ஹாவுட்டைத் துறந்தார்''
கற்பனை, பிடிவாதம், இயக்கியதை கொடுத்தல் இவை மூன்றும்தான் ஸ்டான்லி கூப்ரிக் தரமான படங்களை உருவாக்க அடித்தளமாக அமைந்தன. பிரச்னைக்குரிய திரைப்படங்களை சுதந்திரமாகவும் சுய சிந்தனையுடனும் இயக்கியதற்கு தான் ப
கற்பனை, பிடிவாதம், இயக்கியதை கொடுத்தல் இவை மூன்றும்தான் ஸ்டான்லி கூப்ரிக் தரமான படங்களை உருவாக்க அடித்தளமாக அமைந்தன. பிரச்னைக்குரிய திரைப்படங்களை சுதந்திரமாகவும் சுய சிந்தனையுடனும் இயக்கியதற்கு தான் பார்த்த மோசமான படங்கள்தாம் காரணமென்று கூறிய இவர் 47 ஆண்டு கால திரையுலக வாழ்க்கையில் 16 படங்களை மட்டுமே இயக்கி உலகப் புகழ் பெற்றது சாதனையாகக் கருதப்படுகிறது.
1928-ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் பிறந்த கூப்ரிக், உயர் கல்வி படிக்கவில்லை என்றாலும் இலக்கியத்தில் அதிக ஆர்வமுள்ளவராக இருந்தார். 17-வது வயதில் "லுக்' பத்திரிகையில் புகைப்படக்காரராக பணியாற்றும்போது, நியூயார்க் மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் காலரியில் செர்கி ஐன்ஸ்டீன், எரிக் வான் ஸ்ட்ரானிம், டி.டபிள்யூ, கிரிபித் ஆகியோரின் படைப்புகளை பார்த்து ரசித்தார்.
தானே திரைப்படம் தயாரிக்க வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக் கொண்டார். 1950-ஆம் ஆண்டு கையிலிருந்த சொற்ப பணத்தை வைத்து "டே ஆஃப் தி பைட்' என்ற குறும்படமொன்றை 16 நிமிடங்கள் ஓடும் வகையில் தயாரித்தார். ஆர்கேஒ நிறுவனத்திற்காக மேலும் இரு குறும்படங்களை எடுத்தவர், முழு நீள திரைப்படமெடுக்க வேண்டுமென்ற ஆசையில் உறவினர்களிடம் 13 ஆயிரம் டாலர் கடன் வாங்கி 1953-ஆம் ஆண்டு "ஃபியர் அண்ட் டிசையர்' என்ற படத்தைத் தயாரித்தார். தொடர்ந்து தன் சொந்த பணத்தில் "கில்லர் கிஸ்' என்ற படத்தைத் தயாரித்தார். 1950-ஆம் ஆண்டு தயாரித்த "தி கில்லிங்' திரைப்படம் முழுக்க முழுக்க ஸ்டூடியோவிலேயே எடுக்கப்பட்டதாகும். இதன் மூலம் திரைப்பட நுணுக்கங்களையும் அனுபவத்தையும் தன்னிச்சையாக உருவாக்கும் திறமையும் பெற்றார்.
அடுத்து கிர்க் டக்ளஸþடன் இணைந்து "பாத்ஸ் ஆஃப் குளோரி' (1957), "ஸ்பார்ட்டகஸ்' (1959) ஆகிய இருபடங்களைத் தயாரித்து இயக்கினார். இதில் "ஸ்பார்ட்டகஸ்' படத்தை முதலில் இயக்கிய அந்தோனி மான் நீக்கப்
பட்டு பின்னர் கூப்ரிக்கிடம் இயக்கும் பொறுப்பை கிர்க் டக்ளஸ் ஒப்படைத்தார். இருபடங்களுமே வர்த்தகம் மற்றும் விமர்சனரீதியாக மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன.
"பாத்ஸ் ஆஃப் குளோரி' வெற்றிப் படமாக அமைந்தாலும் முதலாம் உலக யுத்தத்தின்போது பிரான்ஸ் ராணுவ நடவடிக்கையை தவறாக சித்திரித்திருப்பதாகக் கருதி பிரான்ஸ் இப்படத்தை பல ஆண்டுகள் தடை செய்தது. படத்தயாரிப்பின்போது நட்சத்திரங்கள் குறுக்கிடுவதை இவர் விரும்பியதில்லை. படத்தைத் துவங்கி முடிக்கும் வரை அனைத்துமே தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமென்று விரும்பினார். இருப்பினும் 1958-ஆம் ஆண்டு மார்லன் பிராண்டோவுடன் "ஒன் ஐட் ஜாக்ஸ்' என்ற படத்தில் இணைந்தாலும் இருவருக்கும் ஒத்துவராததால் இவர் விலக, மார்லன் பிராண்டோவே அப்படத்தை இயக்கி வெளியிட வேண்டியதாயிற்று.
சிறுவயதில் ஏற்பட்ட இலக்கிய ஆர்வத்தால் தான் படித்த நாவல்களையே திரைப்படங்களாக உருவாக்கினார். 1962-ஆம் ஆண்டு விளாடிமின் நாபோ கோலியின் நாவலான "லோலிடா'வை படமாக்கும்போது, ஒரு நடுத்தர வயது மனிதன் தன் வளர்ப்பு மகளையே காதலிப்பதாக கூறப்பட்டக் கதையை அமெரிக்க அரசியல் சட்டம் ஒப்புக் கொள்ளாததால், தன் கொள்கையை விட மறுத்த கூப்ரிக், ஹாலிவுட்டை விட்டு வெளியேறி பிரிட்டனில் தங்குவதென தீர்மானித்தார். பின்னர் அந்தப் படத்தை பிரிட்டனிலேயே தயாரித்து முடித்தார். தன்னுடைய படங்களை பிற நாடுகளுக்குச் சென்று படமாக்குவதையும் இவர் விரும்பியதில்லை.
லோலிடாவுக்கு பின்னர் வெளிவந்த இவரது "டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் லவ்' சிறந்த துணை கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் பிரிவுகளில் மூன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நகைச்சுவை படங்களையும் இயக்க முடியுமென்று நிரூபிக்க இவர் விஞ்ஞான வளர்ச்சி மனிதனையே அழிக்கவல்லது என்பதை நிரூபிக்க "2001-எ ஸ்பேஸ் ஒடிஸி' (1968) என்ற படத்தை இயக்கியபோது ஆர்தர் சி.கிளார்க்கை திரைக்கதை அமைக்க அமர்த்திக் கொண்டார். இதன் வெற்றி சிறந்த திரைப்பட வரிசையில் இந்த படத்தையும் இடம் பெற வைத்தது. இப்படத்தை ஸ்பெஷல் எஃபக்ட்டுடன் வடிவமைத்து இயக்கியதற்காக முதலாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார். நெப்போலியன் பற்றிய திரைப்படமொன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டார். பட்ஜெட் செலவு அதிகமாகுமென்று தோன்றியதால் அத்திட்டத்தை கைவிட்டார்.
அந்தோனி பர்கெஸ் நாவலான "எ கிளாக் ஒர்க் ஆரஞ்ச்' (1971) வெளியாகி பிரிட்டனில் 61 வாரங்கள் ஓடிய நிலையில், படத்தில் இடம் பெற்ற காட்சிகளால் எழுந்த பிரச்னையில் அவரே அந்த படத்தைத் திரும்பப் பெற்றார். இருப்பினும் இத்திரைப்படத்திற்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன. 18-ஆம் நூற்றாண்டு குழப்பங்களை விளக்கும் தாக்கரேயின் நாவலை அடிப்படையாக வைத்து கூப்ரிக் இயக்கிய "பேர்ரி லிண்டன்' (1975) ஏழு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. திகில் படமொன்றை தயாரிக்க விரும்பிய கூப்ரிக், ஸ்டீபன் கிங் நாவலான "தி ஷைனிங்'-ஐ ஜாக் நிக்கல்சனை வைத்து இயக்கி, வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் ஏழாண்டுகள் கழித்து போரினால் ஏற்படும் பயங்கர விளைவுகளையும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதையும் அடிப்படையாக வைத்து "ஃபுல் மெட்டல் ஜாக்கெட்' (1987) படத்தை இயக்கினார். வியட்நாம் போரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமென்றாலும் இது முழுக்க முழுக்க பிரிட்டனிலேயே எடுக்கப்பட்டது. சரியான விமர்சனங்கள் இல்லாததால் படம் பாதிக்கப்பட்டாலும் ஓர் ஆஸ்கர் விருதைப் பெற்றது. அதே ஆண்டில் வெளியான "ப்ளாட்டூன்' திரைப்படம் பல விருதுகளை பெற்றதும் ஒரு காரணமாகும்.
கூப்ரிக் படங்களில் உலகுக்குக் தேவையான ஒரு தகவல் நிச்சயம் இருக்கும். இவர் தேர்ந்தெடுக்கும் சப்ஜெக்ட் வலுவில்லாத தேவையற்ற கருத்துக்கள் என்று விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால் அவர் யாருடனும் "காம்ப்ரமைஸ்' செய்து கொள்ளமாட்டார். அவரது படங்கள் உலகத்தரம் வாய்ந்த பட வரிசையில் இடம் பெற்றதற்கு இந்தப் பிடிவாதமும் ஒரு காரணமாகும்.
1948-ஆம் ஆண்டு தோபா மெட்ûஸ திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். பின்னர் 1954-ஆம் ஆண்டு ரூத் சோ போட்காவை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது. மூன்றாவது முறையாக சூசன் கிரிஸ்டின் ஹார்லேனை திருமணம் செய்து மூன்று பெண்களுக்கு தந்தையானார். திரையுலகில் பிரச்னைக்குரியவராக இருந்தாலும் வாழ்க்கையில் மிகவும் சாதாரணமாகவே இருந்தார். மேற்கத்திய பத்திரிகையாளர்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார்.
1995-ஆம் ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆஸ்திரிய நாவலாசிரியர் ஆர்தர் ஸினிட்ஸ்வர் எழுதிய "ட்ரீம் ஸ்டோரி'யை அடிப்படையாக வைத்து டாம் க்ரூஸ், நிக்கோல் கிட்மென் நடிப்பில், "ஐஸ் வைட் ஷட்' என்ற படத்தைத் தொடங்கினார். இரண்டு மனோதத்துவ நிபுணர்கள் பாலின பிரச்னை காரணமாக சிகிச்சை அளிப்பதாக கூறப்பட்டாலும், படமாக்குவதையும் கதை என்ன என்பதையும் ரகசியமாகவே வைத்திருந்தார். இத்திரைப்படத்திற்காக டாம் க்ரூஸ், நிக்கோல் கிட்மென் இருவரும் தொடர்ந்து 15 மாதங்கள் லண்டனில் தங்கியிருந்தனர். படம் தனக்கு திருப்திகரமாக இல்லையென்றால் திரையிடக் கூடாது என்ற நிபந்தனையுடன் தயாரிப்பு செலவுக்காக 60 மில்லியன் டாலர் பெற்றார். ஆனால் படம் முடிவடைந்தவுடன் எதிர்பாராத விதமாக 1999-ஆம் ஆண்டு 70 வயதில் மார்ச் 7-ஆம் தேதி மரணமடைந்தார்.
1997-ஆம் ஆண்டில் டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா வழங்கும் உயரிய விருதான டி.டபிள்யூ. கிரிஃபித் விருது வழங்கப்பட்டபோது கூப்ரிக் கூறினார், ""ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் அமர்ந்து "வார் அண்ட பீஸ்' போன்ற நாவலை தன்னாலும் எழுத முடியுமென்று நம்புகிறவன், எவ்வித அனுபவமும் இன்றி ஒரு படத்தை இயக்க முயற்சித்து வெற்றி பெற்றுவிட்டால் அது போன்ற மகிழ்ச்சி அவனது வாழ்க்கையில் எதுவுமே இல்லை.''