முகப்பு
தினமணி கதிர்

நிஜாம் மன்னரின் வாரிசுகள்!

ஹைதராபாத் நிஜாம் மன்னர்களில் கடைசி நிஜாம் மிர் உஸ்மான் அலிகானுக்கு பல மனைவிகள்; ஏராளமான குழந்தைகள் இருந்ததாகக் கூறப்பட்டாலும் உயிலின்படி அதிகாரப்பூர்வமான வாரிசுகளாக 3 மகன்கள் 4 மகள்கள் மட்டுமே உள்ளனர்

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:17 PM
பகிர்:

ஹைதராபாத் நிஜாம் மன்னர்களில் கடைசி நிஜாம் மிர் உஸ்மான் அலிகானுக்கு பல மனைவிகள்; ஏராளமான குழந்தைகள் இருந்ததாகக் கூறப்பட்டாலும் உயிலின்படி அதிகாரப்பூர்வமான வாரிசுகளாக 3 மகன்கள் 4 மகள்கள் மட்டுமே உள்ளனர். நவாஸிஸ் ஜா, ஃபாஸல் ஜா, இம்தத் ஜா ஆகியோர் மூன்று மகன்கள். சாகேஸாடி

பஷிருன்னி சா பேகம், சகாப்ஸாடி சயிதா பேகம், சகாப்ஸாடி மசாதிபேகம், சகாப்ஸாடி கபிருன்னிஸா ஆகியோர் 4 மகள்கள் ஆவர்.

ஐந்து தலைமுறையாக ஹைதராபாத்தை நிஜாம் மன்னர்கள் ஆண்டு வந்தாலும் கடைசி மன்னராகக் கருதப்படுபவர் மிர் உஸ்மான் அலிகான் மட்டுமே. இந்தியா சுதந்திரமடைந்தவுடன் தனித்தனியாக இயங்கி வந்த சமஸ்தானங்கள் அனைத்தும் இந்தியாவுடன் இணைந்தன. சர்தார் பட்டேல் அனைத்து சமஸ்தானங்களையும் இணைத்தபோது ஹைதராபாத் மன்னர் மட்டுமே இணைய மறுத்தார். பின்னர் ராணுவ நடவடிக்கை மூலம் இணைய வைப்போம் என்று அறிவித்த பின்னர் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தது.

நிஜாம் ஜூவல்லரி டிரஸ்ட் உயிலின்படி நிஜாமின் முதல் மனைவி அஸமுன்னிஸா பேகமுக்கு பிறந்த இளவரசர் அஸாம் ஜா, இளவரசர் மொஸாம்ஜா, இளவரசி

அகமதுன்னிசா பேகம் ஆகியோர் முதல் வாரிசுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஜானி பேகம் ஷாகிபா மகனாக கும்தாத் ஜாவும், லைலா பேகம் ஷாகியா மகன்களாக நவாஸிஸ் ஜா, ஃபாஸல் ஜா ஆகியோரும் பிறந்தாலும் மிர் உஸ்மான் அலிகான்தான் இவர்களது தந்தையுமாவார். நிஜாம் மன்னரின் மனைவிகளில் எவரும் இன்று உயிருடன் இல்லை. தந்தையுடன் வளர்ந்த நினைவுகளும் இளமை கால அனுபவங்களும்தான் இன்று இவர்கள் நினைவில் உள்ளன.

1944-1946-ம் ஆண்டிற்குள் பிறந்த இந்த மூன்று சகோதரர்களுக்கும் மன்னராகும் உரிமை இல்லை.

தந்தையின் புகழுக்கும் செல்வாக்குக்கும் எதிரில் நாங்கள் ஒன்றுமே இல்லை என்று கூறினாலும் இம்தாத் ஜாவுக்கு மட்டும் நிஜாம் மன்னர் தங்களை வெளியில் பள்ளிக்கு அனுப்பாமல் மற்ற குழந்தைகளுடன் தொடர்பின்றி மாளிகைக்குள்ளேயே கல்வி கற்க வைத்தது குறித்து வருத்தம் இருக்கிறது. பெரும்பாலும் தாயாருடன்தான் இருந்தோம், பெண் ஆசிரியைகள்தான் எங்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தனர்.

நிஜாம் மறைவுக்கு பின்னரே வெளியுலகத் தொடர்பு எங்களுக்கு ஏற்பட்டது என்கிறார்.

பாஸல் ஜா சொல்வதோ வேறு விதமாக இருக்கிறது. ""எங்கள் தந்தை நல்ல தரமான ஆசிரியைகளையே எங்களுக்கு நியமித்தார்.

எங்களுக்கு அவர் அடிப்படைக் கல்வியை மட்டும் கற்றுத் தரவில்லை, கிரிக்கெட், பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் போன்ற விளையாட்டுகளிலும் எங்களை ஈடுபட வைத்தார். ஈடன் கார்டனில் உள்ள எங்கள் மூத்த சகோதரியின் வீட்டிற்குச் செல்வோம். அங்கு நீச்சல்குளம் இருந்ததால் நீச்சல் கற்றுக் கொண்டோம். கெட்ட சகவாசம் ஏற்படக் கூடாதென்பதற்காக அவர் எங்களை பாதுகாப்பாக வளர்த்தார்'' என்கிறார்.

நவாஸிஸ் ஜாவின் திருமணத்தை நிஜாமே முன்னின்று அக்கறையுடன் நடத்தி வைத்தாராம். மூன்று மகன்களையும் நான்கு மகள்களையும் நன்கு படிக்க வைத்ததோடு நல்ல வாழ்க்கையையும் அமைத்துக் கொடுத்ததையும் அவரது காலத்தில் பிறந்ததை பெருமையாகக் கருதுகின்றனர்.

அனைவருமே அவரவர் திருமண ஆல்பங்களை பொக்கிஷமாக பாதுகாத்து வருகின்றனர்.

ஃபாஸல் ஜா திருமணத்தின்போது அப்போதைய இந்திய துணை ஜனாதிபதி ஜாகிர் உசேன் பங்கேற்றதை பெருமையாக கருதுகின்றனர்.

தற்போது ஃபாஸல் ஜா, தங்களுடைய மத தொடர்புடைய டிரஸ்ட்டை கவனித்துக் கொள்வதோடு, தங்கள் பெற்றோர்களை அடக்கம் செய்துள்ள மஸ்ஜித்-இ-ஜூடியை தினமும் சென்று பார்வையிடுகிறார். கிங் கோட்டியில் அமைந்துள்ள தங்கள் மசூதியையும் பராமரித்து வருகிறார்.

புராணி ஹவேலியில் உள்ள டிரஸ்ட் அலுவலக பணிகளை கவனிப்பதோடு மத தொடர்பான அலுவல்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறார்.

இம்தாத் ஜாவுக்கு அரசியல்வாதிகளுடன் பழகுவது மிகவும் பிடிக்கும். 20-க்கும் மேற்பட்ட பந்தயக் குதிரைகளைப் பராமரித்து வருகிறார்.

நஸ்ரிபாகில் உள்ள மனைவியைவிட ஈடன் கார்டன் மாளிகையில் மிகவும் சுதந்திரமாக இருந்ததை நினைவு கூறும் இவர், இந்தியாவில் நடக்கும் குதிரைப் பந்தயங்களில் தன்னுடைய குதிரைகளை பங்கேற்க வைக்கிறார். நிஜாம் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் பல லீக் போட்டிகளில் பங்கேற்றதாகவும், 20 ஆண்டுகளுக்கு பின்னர் அதிக செலவாகிறது என்ற காரணத்தால் கிரிக்கெட் கிளப்பை மூடிவிட்டாராம்.

1967-ம் ஆண்டில் நிஜாம் மன்னர் மரணமடைந்த பின்னர் இவர்களது வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. அவர் உயிருடன் இருந்தவரை பணத்திற்காக இவர்கள் கவலைப்பட்டதே இல்லை. உணவு, உடை, பாக்கெட்மணி, வேலைக்காரர்கள் சம்பளம் உள்பட அனைத்தும் நிஜாமிடமிருந்து கிடைத்து வந்தன.

நிஜாம் இறந்தவுடன் ஓராண்டிற்குள் தங்கள் வாழ்க்கைக்கானத் தேவைகளை அவர்களே தேட வேண்டியதாயிற்று. டிரஸ்ட் மூலம் பணம் கிடைத்தாலும் அதை எப்படிப் பயன்படுத்துவதென்பது தெரியாமல் சுற்றியிருந்தவர்களால் ஏமாற்றப்பட்டனர்.

1995-ம் ஆண்டு இந்திய அரசு, நிஜாம் மன்னரின் நகைகளை வாங்கியதன் மூலம் பெரும்தொகை கிடைத்தது. அதில் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்ததோடு வீடுகளையும் வாங்கிக் கொடுத்தனர். அப்போது முறையான அனுபவம் இல்லாததால் பல நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து இழந்தனர்.

டிரஸ்ட் மூலம் பெருமளவில் லாபமடைந்த ஒன்றுவிட்ட சகோதரன் முக்ராம் ஜாவுக்கு எதிராக இவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. இருப்பினும் தாங்கள் வாரிசுதாரர்களாக முடியாத காரணத்தால் அவரை எட்டாவது நிஜாமாக தங்கள் தந்தையின் ஸ்தானத்தில் வைத்துப் பெருமைப்பட வைக்க மட்டுமே முடிந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.