இதுவரை கிராமத்துப் பின்னணியில் உருவான படங்களில் மட்டுமே நடித்து வந்த விமல் முதல் முறையாக "இஷ்டம்' படத்தில் நவநாகரிக இளைஞனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பிரேம் நிஸார் இயக்கத்தில் காமெடி, காதல் கலந்து உருவாகும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெüரவித்துள்ளது. அடுத்த கட்டமாக அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகைக்கு வந்து தனது குடும்பத்தினருடன் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். டாக்டர் பட்டத்தை விட ஒபாமாவின் அழைப்பை பெருமையாகக் கருதுவதாகக் கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
தமிழ், தெலுங்கு, ஹிந்திப் படவுலகில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்த சதாவுக்கு இப்போது வாய்ப்புகள் இல்லை. அதனால் சுந்தர்.சி இயக்கும் "மதன் கஜன் ராஜா' படத்தில் விஷாலுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட சம்மதித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு "துப்பாக்கி' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடியுள்ளார் விஜய். "டான்ஸ் வித் மி' என்ற இந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆகும் என்கிறது பட யூனிட்.
தெலுங்கில் வெற்றி பெற்ற "தடா' படம், "டைகர் விஷ்வா' என்ற பெயரில் தமிழில் வெளியாகிறது. இந்தப் படத்தின் மூலம் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா தமிழில் கால் பதிக்கிறார். இதில் ஒரு பெரிய தாதாவிடம் இருந்து தனது அண்ணனை மீட்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாகசைதன்யாவுக்கு காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங்காங் என வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட்டிருப்பது படத்தின் ஹைலைட்.
"மதராசப் பட்டணம்' படத்தில் நடித்த எமி ஜாக்சன், பிரபல யார்ட்லி காஸ்மெட்டிக் நிறுவனத்தின் விளம்பர மாடலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வசந்தபாலனின் முதல் படமான "ஆல்பம்' படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஆர்யன் ராஜேஷ் அதன் பிறகு தெலுங்குப் படவுலகில் பிஸியாகிவிட்டார். இப்போது முரளிகிருஷ்ணா இயக்கும் "துட்டு' படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ஹீரோவாக நடிக்கிறார். கந்து வட்டிக் கொடுமையைக் காமெடி கலந்து சொல்லியிருக்கும் இந்தப் படத்தில் சோனா சோப்ரா என்ற மும்பை மாடல் கதாநாயகியாக நடிக்கிறார். "இவர்தான் அடுத்த குஷ்பு என்று குஷ்பு தலையிலேயே அடித்துச் சொல்வேன்' என்கிறார் இயக்குநர் முரளிகிருஷ்ணா.
கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்தாலும் விளம்பரங்களில் நடிப்பதில்லை என்ற தீவிரமான முடிவில் இருப்பவர்கள் இந்திய சினிமாவில் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் மட்டுமே. அமிதாப் பச்சன், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர் போன்ற பாலிவுட் பிரபலங்களை வைத்து பல விளம்பரப் படங்களை எடுத்த அல்லயன்ஸ் மீடியா நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் புதிய விளம்பரப் படத்தில் நடிக்க வேண்டும் என கமல்ஹாசனிடம் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சம்பளம் பல கோடிகள் என்பதால் இந்த நிறுவனத்தின் விளம்பரப் படத்தில் கமல் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதியவர் சீலன் இயக்கும் "கண்டதும் காணாததும்' படத்தில் பிரபல நடன இயக்குநர் ஜான்பாபுவின் மகன் விகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். சுவாஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார். கல்லூரிக் காதலை வழக்கத்துக்கு மாறான பாணியில் சொல்லும் இந்தப் படத்தை செல்ஃபோன், 16 எம்.எம்., ஹேண்டி கேம், சோனி கேம், ஸ்டில் கேமிரா, ரெட் ஒன் கேமிரா என ஆறு வகையான கேமராக்களைப் பயன்படுத்தி வித்தியாசமாகப் படமாக்கியிருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சங்கரநாராயணன் சாஃப்ட்வேர் என்ஜினீயர் என்பதால் அனிமேஷன், கிராஃபிக்ஸ் காட்சிகளில் முதல் முறையாக பல புதுமைகளைப் புகுத்தியுள்ளார்.
தமிழ்ப் படவுலகை விட்டு தெலுங்குக்குச் சென்ற தமன்னா இன்றைய தேதியில் அங்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனாலும் தெலுங்கின் இளம் முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.
காரணம்... சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்களுக்கு மட்டும்தான் முன்னுரிமை கொடுக்கிறார். மற்ற ஹீரோக்கள் படத்தில் நடிக்க வேண்டும் என்றாலும் அவர்களிடம் அனுமதி பெற்றே நடிக்கிறார் என்பதுதான். இதைப் பற்றி கேட்டால்... ""சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு காட் ஃபாதர் போன்றவர்கள். அவர்கள் நட்பு வளையத்தில் இருப்பது எனக்கு ப்ளஸ் பாயிண்ட்தான்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.