முகப்பு
தினமணி கதிர்

மத்திய அரசு வழங்கும் பாடப் புத்தகத்தில் தலைவர்களுக்கு அவமதிப்பா?

சர்ச்சைக்கு மேல் சர்ச்சை   கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே மிகுந்த கொந்தளிப்பாக இருந்தது. அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல், எல்லாக் கட்சிகளின் உறுப்பினர்களின் கோப ஆவேசக் குரல் நாடாள

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:24 PM
பகிர்:

சர்ச்சைக்கு மேல் சர்ச்சை

கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே மிகுந்த கொந்தளிப்பாக இருந்தது. அந்தக் கட்சி, இந்தக் கட்சி என்றில்லாமல், எல்லாக் கட்சிகளின் உறுப்பினர்களின் கோப ஆவேசக் குரல் நாடாளுமன்றத்தின் சுவர்களில் எதிரொலித்தது. அவர்களின் கோப ஆவேசத்தில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபில் நடந்துவிட்ட தவறுக்காக மன்னிப்புக் கேட்கும்படி ஆயிற்று.

 இந்தக் கோபம் ஏன்?எல்லாம் மத்திய அரசின் பாடத்திட்டத்தில் (சி.பி.எஸ்.ஐ) 11 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த ஒரு கார்ட்டூனால் வந்த வினை.

 அம்பேத்கர், ஜவகர்லால் நேரு இருவரையும் சம்பந்தப்படுத்தி வெளிவந்த அந்த கார்ட்டூனால்தான் இந்தப் பெரும்... பெரும்... பிரச்னை.

 2006 ஆம் ஆண்டிலிருந்தே இந்த கார்ட்டூன் பாடப் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தாலும், யார் கண்ணிலும் படாமல் எப்படி டிமிக்கி கொடுத்துத் தப்பித்தது என்றுதான் தெரியவில்லை.

 இந்த கார்ட்டூன் அம்பேத்கரை இழிவுபடுத்துகிறது என்பதால் அனைத்துக் கட்சியினரும் இந்தக் கார்ட்டூனை எதிர்த்தனர். 1949 இல் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் சங்கர் வரைந்த கார்ட்டூன்தான் அது.

 யார் இந்த கார்ட்டூனை பாடத்தில் இடம் பெற வைத்தது? யார் அனுமதி கொடுத்தது? இது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறைக்குத் தெரியுமா? தெரியாதா? இப்படி எதையாவது பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யலாமா? என்று சுனாமி போல எழுந்த கேள்விகளின் பேரலையில், என்சிஆர்டி பாடத்திட்ட மேம்பாட்டுக் குழுவின் ஆலோசகர்களாக இருந்த யோகேந்திர யாதவும், சுகாஷ் புல்ஷிகரும் வேலையிலிருந்து விலகினார்கள்.

 இருந்தும் கோபம் தணியவில்லை. சுகாஷ் புல்ஷிகரின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.

 தமிழ்நாட்டில் கல்பாக்கம் உட்பட பல இடங்களில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபிலின் உருவ பொம்மைகள் கொளுத்தப்பட்டன.

 இந்தக் கார்ட்டூன் நீக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கார்ட்டூன்களின் பிரச்னை என்னவோ தீரவில்லை.

 புயலுக்குப் பின் அமைதி என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் ஒரு புயல் கரையைக் கடப்பதற்கு முன்னே அடுத்த புயல் உடனே உருவாகிவிட்டது.

 இந்த என்சிஆர்டி பாடப் புத்தகங்களில் உள்ள பிற கார்ட்டூன்களையும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எல்லாரும் கண்களில் விளக்கெண்ணெயை விட்டு துருவித் துருவி ஆராய்ந்தார்கள். தோண்டத் தோண்ட வந்த கார்ட்டூன்களின் கரிப்பூச்சில் முகத்தில் கோபம் கொப்பளிக்க கிளம்பி வந்தார்கள்.

 அம்பேத்கரை மட்டுமா இந்த பாடப் புத்தகங்களில் வந்துள்ள கார்ட்டூன்கள் இழிவு படுத்துகின்றன? அரசியல்வாதிகளையும் அல்லவா கேவலப்படுத்துகின்றன என்று அடுத்த எரிமலைச் சீற்றங்கள் நாடாளுமன்றத்தில் வெளிப்பட்டன.

 அரசியல்வாதிகளைப் பற்றிய தவறான எண்ணங்களை மாணவர்கள் மத்தியில் இந்தக் கார்ட்டூன்கள் உருவாக்கிவிடும் என்பதுதான் அவர்களுடைய அதிதீவிரமான கோபங்களுக்குக் காரணம்.

 அதிலும் சிரோன்மணி அகாலிதளத்தைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கெüர் பாதலின் கேள்விகள் நாடாளுமன்றத்தில் அனைவருடைய இதயங்களிலும் பலமான அதிர்வுகளை ஏற்படுத்தின.

 அரசியல்வாதிகளைக் கொள்ளைக்காரர்களாகவும், கொலைகாரர்களாகவும் சித்திரிப்பது நியாயமா? அரசியல்வாதிகள் எல்லாரும் கிரிமினல்களா? திருடர்களா? அரசியல்வாதிகளைப் பற்றிய தவறான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தினால் அவர்கள் அரசியல்வாதிகளை மதிப்பார்களா? என்று அவர் கொதித்துக் கொதித்துப் போனார்.

 அதிர்வெடிகளை வெடிக்கும் லாலு பிரசாத் யாதவும் இந்தக் கொதிப்புகளுக்கு விதிவிலக்கல்ல.

 ""இது இன்றைக்கு நேற்றைக்குப் பிரச்னையில்லை. கடந்த 6- 7 வருடங்களாகவே இம்மாதிரியான கார்ட்டூன்கள் இடம் பெற்று வருகின்றன. இந்திரா காந்தியையும், சோனியா காந்தியையும் கூட கார்ட்டூன்களில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் நமக்கென்ன என்று நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

 இந்தக் கார்ட்டூன்களை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கிவிடலாம். ஆனால் இந்தக் கார்ட்டூன்களைப் பார்த்துள்ள மாணவர்களின் மனதில் இருந்து அவற்றை நீக்க முடியுமா? பொதுமக்கள் நம்மைப் பார்த்து சிரிக்க மாட்டார்களா? குழந்தைகள் அரசியல்வாதிகளையும் அரசியலையும் எப்படி அவர்கள் புரிந்து கொள்வார்கள்?

 பாடப் புத்தகங்களில் உள்ள கார்ட்டூன்கள் அரசியல்வாதிகளை மட்டும் கேவலப்படுத்தவில்லை. வாக்காளர்களைக் கூட கேவலப்படுத்துகின்றன. வாக்காளர்களைப் பிச்சைக்காரர்களாகச் சித்திரிக்கின்றன'' என்றார் கொதிப்புடன்.

 யஷ்வந்த் சின்கா, ""இம்மாதிரியான புத்தகங்களால்தான் குழந்தைகள் உருவாக்கப்படுகிறார்கள். இவற்றைப் படித்தால் அரசியல்வாதிகளின் மீதும், அரசியல் அமைப்புமுறை மீதும் அவர்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடும். இப்படியே போனால் ஜனநாயகத்தின் மீதே வெறுப்பு வந்துவிடும்.

 கார்ட்டூனை நீக்கிவிடுகிறோம் என்று சொல்கிறார்கள். கார்ட்டூனை நீக்குவதோ, புத்தகத்தை நீக்குவதோ போதுமானதல்ல. அதிகபட்சம் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இந்தப் பிரச்னையால் ராஜினாமாக் கூடச் செய்யலாம். ஆனால் அதனால் என்ன பயன்? மனித வள மேம்பாட்டுத்துறை இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்'' என்றார் கோபத்துடன்.

 ஜனதா தளத் தலைவர் சரத் யாதவோ, ""கல்வியாளர்கள் நடந்துவிட்ட இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும்'' என்றார்.

 ""மாணவர்களுக்கு இவர்கள் எதைச் சொல்கிறார்கள்? எல்லாம் கெட்டுப் போச்சு. நாட்டின் ஒட்டுமொத்தச் சூழ்நிலையே கெட்டுப் போச்சு. எல்லாரும் கெட்டவர்கள். எல்லா அமைப்புகளும், முறைகளும் படுமோசம் என்று சொல்லித் தருகிறார்கள். இப்படியே போனால் உலகம் முழுவதுமுள்ள எல்லா அரசியல் அமைப்பு முறைகளும் மோசம் என்று சொல்லிவிடுவார்கள்'' என்று கொதித்திருக்கிறார் அவர்.

 இத்தனைக்கும் இந்தப் பாடப் புத்தகங்களில் எவை இடம் பெறலாம்? எவை இடம் பெறக் கூடாது கவனிப்பதற்கு "பாடப்புத்தக வளர்ச்சிக் குழு', "கண்காணிப்பு குழு' என்றெல்லாம் "முறை'யாகத்தான் திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கிறார்கள்.

 பாடப் புத்தகத்தில் இப்படியான சர்ச்சைக்கு இடமளிக்கும் செய்திகள் புதியன அல்ல.

 2003 ஆம் ஆண்டு இதே போல ஒரு கடுமையான எதிர்ப்பு - அது வெளிப்படுத்திய ஒரு செய்திக்காக - இந்த என்சிஇஆர்டி பாடப் புத்தகங்கள் எதிர்கொள்ள நேரிட்டது. அதற்குப் பிறகு, அந்தப் பகுதிகளை பாடப் புத்தகங்களில் இருந்து நீக்கினார்கள்.

 இந்த என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களில், பழையன கழிந்தாலும் புதியன புகுந்தாலும் இரண்டுமே பிரச்னைகளை ஏற்படுத்துபவையாகவே இருக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →