தொடர்ச்சியான தயாரிப்புகளால் மட்டும் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த ஷங்கர், படம் தயாரிப்பதையே நிறுத்தியிருந்தார். ஆனால் இப்போது மீண்டும் உற்சாகத்துடன் களமிறங்கவுள்ளார். சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் "இம்சை அரசன் 23-ம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தை பெரிய பட்ஜெட்டிலும் லிங்குசாமியின் உதவியாளர் ராஜுமுருகன் இயக்கும் "சந்திரபாபு' என்ற படத்தை சிறிய பட்ஜெட்டிலும் தயாரிக்கவுள்ளார் ஷங்கர்.
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சஸ்பென்ஸ், த்ரில்லர் படங்கள் என்றாலே இருட்டிலும் தனி பங்களாக்களிலும்தான் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்த விதியை தனது "மெüனமான நேரம்' படத்துக்காக முதல் முறையாக உடைத்திருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜ். இயக்குநர் மகேந்திரனிடம் உதவியாளராகப் பயணியாற்றிய இவர், இந்த த்ரில்லர் படத்தை முழுக்க முழுக்க பகலிலும் அவுட்டோரிலும் எடுத்துள்ளார். புதுமுகங்கள் ரிஷிகுமார், டெய்சி ஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். "பேசப்படும் படமாக இருக்கும்' என்பதுதான் இந்தப் படத்தின் "ரஷ்' பார்த்தவர்களின் கமெண்ட்.
மாதேஷ் இயக்கத்தில் வினய், ஷர்மிளா, பிரபு நடிக்கும் "மிரட்டல்' படத்தில் இதுவரை எந்தப் படத்திலும் வராத லொகேஷன்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, அரசின் சிறப்பு அனுமதி பெற்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் படமாக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களைப் பெரிதும் கவரும். அதேபோன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டிலும் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
பிரபல மாடலும் "மிஸ் இந்தியா யுனிவர்ஸ் 2010' அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றவருமான பூஜா ஹெக்டே "முகமூடி' படத்தில் ஜீவாவுடன் நடித்து வருகிறார். இவருக்கு காதணிகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். விதவிதமான டிசைன்களில் - ஒரு வருடத்துக்கு மட்டும் - நூற்றுக்கணக்கான காதணிகளை வாங்குகிறார். "நூற்றுக்கணக்கில் காதணிகளா?' என்று யோசிக்க வேண்டாம். ஏனென்றால்... ஒரு முறை பயன்படுத்தியதை மறு முறை பயன்படுத்தும் பழக்கம் தனக்கு இல்லை என்கிறார் பூஜா ஹெக்டே.
காமெடியை மையமாக வைத்து உருவான "ஒரு கல் ஒரு கண்ணாடி', "கலகலப்பு', "இஷ்டம்' படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்த வரிசையில் "மனம் கொத்திப் பறவை' படமும் அமையும் என்கிறார் இயக்குநர் எழில். சிவகார்த்திகேயன், ஆத்மியா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளராகியிருக்கிறார் எழில். இந்தப் படம் எதிர்பார்த்ததை விட அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளதால் உடனடியாக அடுத்த பட வேலையைத் தொடங்கியிருக்கிறார்.
வாசுபாஸ்கர் இயக்கியுள்ள "மறுபடியும் ஒரு காதல்' படத்தின் மூலம் மீண்டும் கலக்க வருகிறார் வடிவேலு. போலி டாக்டர் சிங்காரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள வடிவேலுவின் நடிப்பு, "வின்னர்' படத்தின் கைப்புள்ள கேரக்டரையும் மிஞ்சும் என்கிறது படக்குழு. படத்தின் 90 சதவீத காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளன. லண்டனைச் சேர்ந்த ஜோத்ஷ்னா இந்தப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். கவிஞர் வாலி இயக்கிய "வடைமாலை' படத்தின் கதாநாயகி சரோஜாவின் மகள்தான் ஜோத்ஷ்னா.
நடிப்பே வேண்டாம் எனக் கூறிய அரவிந்த் சாமியை வற்புறுத்தி தனது "கடல்' படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம். இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, டாப்ஸி நடிக்கும் புதிய படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அரவிந்த்சாமி. இதில் அஜித்துக்கு அண்ணன் வேடம் ஏற்றிருக்கிறார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஜாக்கி சான், தற்போது "ஆர்மர் ஆஃப் த காட்' படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகும் "சைனிஷ் ஜோடியாக்' படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவருடைய கடைசி படம்; இனி நடிக்க மாட்டார் என பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டாராம் ஜாக்கி சான். இது குறித்து தனது வெப்சைட்டில் "நான் நடித்த படங்களிலேயே அதிக அளவு ஆக்ஷனும் காமெடியும் உள்ள படம் இது என்றுதான் கூறினேன். அதைத் தவறாகப் புரிந்துகொண்டு இப்படி எழுதிவிட்டார்கள். நான் தொடர்ந்து நடிப்பேன்' என்று கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.