ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கை நிராகரித்த ஹாலிவுட்!
இளைஞர்களே! உங்களுக்கு ஓர் அறிவுரை. எக்காரணத்தைக் கொண்டும்
லண்டன், ஈஸ்ட் எண்ட் புறநகர் பகுதியில் 1899-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி பிறந்த ஆல்ஃபிரட் ஜோசப் ஹிட்ச்காக், தனது ஆறாவது வயதில் நடந்த ஒரு சம்பவத்தை அடிக்கடி நினைவு கூர்வதுண்டு. வீட்டில் இவர் செய்த குறும்புத்தனத்திற்கு தண்டனை கொடுக்க விரும்பிய இவரது தந்தை ஒரு கடிதத்தை எழுதி ஹிட்ச்காக்கிடம் கொடுத்து உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்கச் சொன்னாராம். அங்கிருந்த போலீஸ் அதிகாரி கடிதத்தை வாங்கி படித்தவுடன் இவரை அங்கிருந்த சிறைக்குள் தள்ளிப் பூட்டினாராம். பத்து நிமிடங்கள் கழித்து சிறைக் கதவைத் திறந்து அவரை வெளியே அனுப்பும்போது அந்த அதிகாரி சொன்னாராம் ""உன்னைப் போன்ற குறும்புக்கார சிறுவர்களுக்கு இதுதான் தண்டனை''
அன்றுமுதல் போலீஸ் என்றாலே இவருக்கு அலர்ஜி. அதுமட்டுமல்ல, ""இளைஞர்களே! உங்களுக்கு ஓர் அறிவுரை. எக்காரணத்தைக் கொண்டும் போலீசாரிடம் மாட்டாதீர்கள். வழக்குகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறைத் தண்டனையைத் தவிர்ப்பது நல்லது..'' என்று பிற்காலத்தில் அறிவுறுத்திவந்தார்.
ஹிட்ச்காக்கின் பெற்றோர் இவரை என்ஜினீயராக்க விரும்பினர். பணப் பிரச்னை காரணமாக அது நிறைவேறவில்லை. சில காலம் கிளார்க்காக பணியாற்றிய இவர், பின்னர் விளம்பர நிறுவனமொன்றில் லே-அவுட் ஆர்டிஸ்டாகச் சேர்ந்தார். மவுனப் படங்களுக்கு டைட்டில் கார்டுகள் எழுதிவந்த இவரது திறமையைக் கண்ட பிளேயர்ஸ்-லஸ்கி நிறுவனம் தங்களிடம் அழைத்துக் கொண்டது. அங்கு உதவி இயக்குநராகச் சேர்ந்தவர், 1926-ஆம் ஆண்டு "தி லாட்ஜர், எ ஸ்டோரி ஆஃப் தி லண்டன் ஃபோக்' என்ற படத்தை இயக்கினார். பின்னர் அடுத்து 39 ஸ்டெப்ஸ், தி மேன் ஹூ ந்யூ டூ மச், நார்த் பை நார்த் வெஸ்ட், ஐ கன்ஃபெஸ் போன்ற படங்களை இயக்கினார்.
சிறுவயதில் ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக தன் படங்களில் போலீஸை மிகவும் கண்ணியமானவர்களாக சித்திரிப்பதுண்டு. பெரும்பாலான படங்களுக்கு இவரது மனைவி அல்மா ரெவல்லி திரைக்கதை அமைத்துள்ளார்.
பொதுவாகவே இருட்டையும் நிழலையும் கண்டாலே பயம். ஆனால் அவருடைய படங்களில் பெரும்பாலும் இருளையும் நிழலையும் காட்டி ரசிகர்களை பயப்படுத்துவதில் இவருக்கு அலாதிப் பிரியமிருந்தது. ஒரு நாற்காலியை மட்டுமே காட்டி பார்ப்பவர்களை திகிலடையச் செய்யும் திறமையும் இவருக்கிருந்தது. சில சமயங்களில் சில படங்களை கறுப்பு வெள்ளையில்தான் எடுக்க வேண்டுமென்று சொல்வார். காரணம், அளவுக்கதிகமாக ரத்தத்தை வண்ணப்படத்தில் காட்டி சென்சார் உறுப்பினர்களைப் பயமுறுத்தக் கூடாதென்பார்.
தன்னுடைய கைப்பையில் தனக்கு சொந்தமில்லாத நாற்பதாயிரம் டாலரை வைத்திருந்த மரியன் கிரேனுக்கு போலீசாரை ஏமாற்றிவிட்டதாக நினைப்பு. அன்றையபொழுதை எங்கேயாவது கழித்தால் போதுமென்று நினைக்கிறாள். இரவு நேரம். இருளடைந்த பகுதியில் இருந்த ஓட்டல் ஒன்றில் தங்க முடிவெடுக்கிறாள். அதுதான் அவளது கடைசி இரவு என்பது அவளுக்குத் தெரியாது. குளித்துக் கொண்டிருந்தவளின் அறைக் கதவு மெல்ல உட்பக்கமாகத் தள்ளப்பட - கொலைகாரன் கையில் கத்தியுடன் உள்ளே நுழைகிறான். மரியனால் எந்தப் பக்கமும் தப்பிக்க முடியாத நிலை.. இதுதான் ஹிட்ச்காக்கின் "சைக்கோ' படத்தின் கதை. அவர் எடுத்த படங்களிலேயே இது மிகவும் வித்தியாசமான படம். மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம்தான் இன்றைய நவீன மர்மப் படங்களுக்கு முன்னோடி என்று சொல்லலாம். "சைக்கோ'வை வண்ணப்படமாக எடுத்திருந்தால் இத்தனை பெரிய வெற்றி பெற்றிருக்காது என்பது இவரது கருத்து.
தன்னுடைய படங்களில் நடிக்கும் கதாநாயகிகளை மிகவும் விரும்புவதைப் போல் வெறுக்கவும் செய்வார். கடவுள் அழகிகளைப் படைக்க மறந்துவிட்டாலும் ஹிட்ச்காக் அழகிகளைத் தேடிப் பிடிக்கும் திறமை படைத்தவர். உதாரணத்துக்கு "ரியர் விண்டோ' கிரேஸ் கெல்லி, "சைக்கோ' ஜேனட் லீ, "ஐ கன்பெஸ்' அன்னி பேக்ஸ்டரை ஆகியோரைச் சொல்லலாம். படப்பிடிப்பின்போது நடிகைகள் இவரைக் கொடுமைக்காரன் என விமர்சிப்பதுண்டு. காட்சிக்குத் தேவையான நடிப்பைக் கொண்டுவரும்வரை எப்படி என்னை விமர்சித்தாலும் கவலையில்லை என்பார்.
""மிஸ்ட்ரி மற்றும் சஸ்பென்ஸ் என்று படமெடுக்கிறீர்களே... ஏன்?'' என்று இவரிடம் கேட்டபோது, ""மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ் என்ற இரு வார்த்தைகளிலேயே மிகப் பெரிய குழப்பம் உள்ளது. இரண்டுமே வெவ்வேறானவை. யார் அதைச் செய்திருப்பார்கள்? என்ற எதிர்பார்ப்புக்கு புத்திசாலித்தனமாக பதிலளிப்பதுதான் மிஸ்ட்ரி. ரசிகர்களுக்கு திகிலை ஏற்படுத்தி அதைச் சுலபமாக தீர்த்துவைப்பதுதான் சஸ்பென்ஸ். என்ன நடக்கிறது? எதற்காக அவன் இதைச் செய்கிறான்? இதெல்லாம் என்ன? என்று ஒவ்வொன்றையும் நீங்களாகவே கேள்வி கேட்கும் வகையில் காட்சிகளை கொண்டு செல்வது முற்றிலும் தேவையற்றது. அதன் மூலம் ரசிகர்களிடம் எவ்வித ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியாது. ரசிகர்களை திகிலடையச் செய்ய ஒருசில காட்சிகள் மட்டுமே போதுமென்றும் நான் நினைக்கவில்லை.
எனக்குக் கிடைத்த வெற்றிகளால் என்னை ஒரு கைதியாகவே நினைக்கிறேன். இது நான் விருப்பத்துடன் தேடிக் கொண்டதல்ல. இது ஒருசில படங்களால் கிடைத்த அனுபவம். த்ரில்லர், கொலை என என்னுடைய படங்களைப் பார்த்து பயந்து மனம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்தப் படங்களை என்னை நானே திருப்திபடுத்திக் கொள்ள எடுத்தவையாகும். நகைச்சுவையோ உண்மைத் தன்மையோ இல்லாமல் நாடக பாணியாகவும் இருந்திருக்கலாம். வர்த்தக ரீதியில் சஸ்பென்ஸ் கதைகளில் திறமைசாலி என்று என்னைக் குறிப்பிட்டதால் அதை தக்கவைத்துக் கொள்ளவும் என்னிடமிருந்து இதுபோன்ற கதைகளையே ரசிகர்கள் விரும்புவதால் அவர்களை ஏமாற்ற விரும்பாமல் தொடர்ந்து எடுக்க வேண்டியதாகிவிட்டது'' என்றாராம்.
இவர் யாரையும் நெருங்கிய நண்பர்களாக வைத்துக் கொள்ளவில்லை. தேவையும் இல்லை என்று நினைத்தார். இவர் மிகச் சிறந்த இயக்குநராக இருந்தாலும் ஹாலிவுட் இவரை ஏற்க மறுத்துவிட்டது. திரைப்படங்கள் மூலம் நெடுங்கதைகளை சொல்வதாக நினைத்தது. இவரது கதைகளை அற்பத்தனமானது என்றும் விமர்சித்தனர். இவரை மிகச்சிறந்த டைரக்டராக ஹாலிவுட் ஏற்கவில்லை என்றாலும் சில சந்தர்ப்பங்களில் டைரக்டர்ஸ் கில்ட் அவார்டு மற்றும் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கவும் செய்தனர்.
ஹிட்ச்காக்கிற்கு ஹாலிவுட் தன்னை ஒதுக்குகிறது என்பது தெரிந்தாலும் அதை மனதிற்குள்ளேயே வைத்திருந்தார். அந்த வலியின் காரணமாக மீண்டும் லண்டனுக்கே சென்ற பிறகாவது ஹாலிவுட் தன்னை கெளரவிக்குமெனக் கருதினார். ஆனால் ஹாலிவுட் அவரை ஒரு கோமாளியாகவே கருதியது. 1980-ஆம் ஆண்டு ஏப்ரல் 29-ஆம் தேதி அவர் மரணமடைந்தபோது, "எவ்வித இம்சையுமின்றி சஸ்பென்ஸூம் இன்றி மரணமடைந்தார்...' என்று பத்திரிகையொன்று குறிப்பிட்டிருந்தது.