எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771
எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகள், காலையில் பள்ளிக்குச் செல்வதற்கு நேரமாகிவிட்டால் குளிக்காமலேயே அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு ஓடிவிடுகிறாள். நேரம் கிடைத்தால் வெந்நீரில்தான் குளிப்பேன் என்று அடம் பிடிக்கிறாள். அவளை எப்படித் திருத்துவது?
லக்ஷ்மி, காரைக்கால்.
குளிப்பதால் ஏற்படும் நன்மைகளை வாக்படர் எனும் முனிவர் தான் இயற்றிய "அஷ்டாங்க ஹ்ருதயம்' எனும் ஆயுர்வேத நூலில் விவரிக்கிறார்:
தீபனம் - வயிற்றின் உள்ளிருக்கும் ஜீர்ணகாரி அக்கினியும், ரஸம், ரக்தம் முதலிய தாதுக்களில் இருக்கும் தாத்வக்னிகளும் நன்றாகத் தூண்டப்பட்டு, உண்ட உணவின் சத்தானது சீராக உடலின் உட்புறங்களில் சேர்க்க உதவுகிறது.
வ்ருஷ்யம் - விந்து போஷிக்கப்பட்டு வீர்ய விருத்தி சக்தி வளரும்
ஆயுஷ்யம் - நீடித்த ஆயுளைத் தரும்
ஓஜோபலப்ரதம் - தாதுக்களுடைய சாரமான ஓஜோ குணம் ஓங்கும். மனோபலம், இந்திரிய பலம், தேக பலம் அதிகரிக்கும்.
கண்டூமலச்ரமஸ்வேத, தந்த்ராத்ருட்தாஹபாப்மஜித் - தோலின் அரிப்பு, அழுக்குகள் அகலும். தேகக் களைப்பு, மனச்சோர்வு, சோம்பல்கள் நீங்கும். தோலின் நுண்ணிய துவாரங்கள் வழியே உள் மலத்தை வெளியாக்கிக் கொண்டிருக்கும் வியர்வை சுத்தமாகும். தண்ணீர் தாகம் அடங்கும். உடல் வெப்பம் தணியும். புண்ணிய தீர்த்தங்களில் குளிப்பது, விடியற்காலையில் குளிப்பது, ஈசுவர தியானம், ஜபம் செய்து கொண்டு ஸ்நானம் செய்தல் - அநேகவித பாபங்களையும் அகற்ற வல்லது.
வெந்நீரினால் கழுத்துக்குக் கீழ்ப் பக்கங்களுக்கு பலமுண்டாகும். ஆனால் தலைக்கு சுடுதண்ணீரை விட்டுக் கொண்டால், கண்களுக்குக் கெடுதி உண்டாகும். அதனால் உங்கள் மகளுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வேறு ஒரு பாத்திரத்தில் வெந்நீரும் வைத்துக் கொண்டு, தலையை முன்புறமாகக் குனிய வைத்து உடலில் நீர்படாமலேயே தலையில் தண்ணீர் நிறைய விட்டு முடியைச் சுத்தம் செய்து, உலர்ந்த துணியினால் தலைமுடியைத் துவட்டி முடியிட்டு, உடனே வெந்நீரினால் குளிப்பது நல்லது. இதனால் தலையில் வெந்நீர் ஊற்றவே கூடாது. உடம்பில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவே கூடாது என்று நிச்சயம் செய்து கொள்ள வேண்டாம். குளிர்ச்சியான கப - வாத தோஷங்களின் மேலீட்டால் தலையில் ஏற்படும் நீர்க்கோர்வை, ஜலதோஷம் போன்றவையிருந்தால், உடம்புக்குப் போல தலைக்கும் வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லதாகும். முடிந்தவரை மகளுக்கு தலைக்கு நன்றாய் ஆறிய வெந்நீரையும் உபயோகிப்பதே நல்லது. மிகவும் சூடு அதிகமுள்ள வெந்நீர் தோலுக்கும் ரத்தத்திற்கும் கெடுதி செய்யும்.
இதுபோன்ற நல்ல விஷயங்களை உங்களுடைய மகளுக்கு எடுத்துக் கூறி, தினமும் காலையில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகளை அவள் உணர்ந்துவிட்டால், தானே குளிக்க ஆரம்பித்துவிடுவாள். பொதுவாகவே தமிழகத்தில் பெண்கள், தலைக்குத் தினமும் தண்ணீர் விட்டுக் குளிப்பதில்லை. அதற்கு அவர்கள் கூறும் காரணம், தலைமுடியை உலர்த்திக் காய வைத்து, தலைவாரிக் கொள்வதற்கு நேரமில்லை, தலை கனத்துக் கொண்டு சளி, தும்மல், தலைவலி ஏற்படும் என்று. இக்கருத்தை ஆயுர்வேதம் "ந அநாப்லுத்ய சிர: ஸ்நாயாத்' என்கிறது. அதாவது நோயற்றவர்கள் தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளாமல் குளிக்காதீர் என்கிறது. அதற்குக் காரணம், உடலில் மட்டும் ஊற்றிய தண்ணீர் கீழ் பகுதியில் மட்டும் சூட்டைத் தணியச் செய்கிறது. மேலே தலைக்கு உஷ்ணத்தைப் பரவச் செய்கிறது. உஷ்ணத்தின் இயல்பே மேல்நோக்கிப் பரவுவதுதான். உடல் சூடு தலையையும் அங்குள்ள மூளை, கண்கள் முதலிய புலன்களையும் தாக்கும். அதனால் எப்போதுமே தலைக்குச் சேர்த்துக் குளிப்பதே நன்மை.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.