ஸ்வீட்டான டிப்ஸ்!
குலோப்ஜாமூன் செய்யும்போது பொரித்தெடுத்த ஜாமூன்களை சூடான சர்க்கரைப்பாகில் உடனே போடாமல் ஜாமூன்கள் நன்றாக ஆறிய பின் போட்டு வைத்தால் ஜாமூன்கள் விரியாமலும், கரையாமலும் இருக்கும்.
குலோப்ஜாமூன் செய்யும்போது பொரித்தெடுத்த ஜாமூன்களை சூடான சர்க்கரைப்பாகில் உடனே போடாமல் ஜாமூன்கள் நன்றாக ஆறிய பின் போட்டு வைத்தால் ஜாமூன்கள் விரியாமலும், கரையாமலும் இருக்கும்.
வீட்டில் வாழைப்பழங்கள், மாதுளை, ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு என நிறைய சேர்ந்துவிட்டதா? கவலையே வேண்டாம். எல்லாப் பழங்களையும் நறுக்கி அதனுடன் உலர்ந்த திராட்சை, பேரிச்சை, கல்கண்டு, தேன், சர்க்கரை, சேர்த்து ஃப்ரூட் மிக்ஸ் செய்யலாம்.
லட்டு பிடிக்கும்போது ஏதாவது பழ எசன்ஸ் விட்டுப் பிடித்தால், சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலை, பொடித்த முந்திரி சேர்த்துப் பிடித்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.
அல்வா போன்ற ஸ்வீட் செய்யும்போது வெண்ணெய்யை அரைப்பதமாக உருக்கி வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளறினால் நெய் பதமாக காய்ந்து ஸ்வீட் கமகமக்கும்.
ரவா கேசரி செய்யும்போது ரவையை நன்கு வறுத்துவிட்டு சுடுநீர் சேர்த்து குழைய வேகவிடவும். பின் அடுப்பை அணைத்துவிட்டு சர்க்கரை சேர்த்து
நன்கு கலக்கவும். மீண்டும் அடுப்பை ஏற்றி நெய்விட்டுக் கிளறினால் ஒரு சிறு கட்டி கூட இல்லாமல் ரவா கேசரி நிமிடத்தில் ரெடி.
பாதுஷா செய்யும்போது மாவில் ஒரு சிட்டிகை ஆப்ப சோடாவுடன் சிறிதளவு டால்டாவையும் சூடு செய்து சேர்த்துப் பிசைந்தால் பாதுஷா மிருதுவாகவும், நல்ல சுவையாகவும் இருக்கும்.
ஜாங்கிரி செய்ய உளுந்தை கிரைண்டரில் அரைப்பதைவிட ஆட்டுக்கல்லில் அரைப்பதுதான் நல்லது.
மைசூர்பாகை வெறும் நெய் மட்டும் சேர்த்துச் செய்யாமல் சிறிதளவு ரீஃபைண்ட் ஆயில் சேர்த்து செய்தால் மைசூர்பாகு பூத்துவரும்.
பர்ஃபி செய்து தட்டில் கொட்டியவுடன் அதன் மேல் நெய்யில் வறுத்த முந்திரி அல்லது வேர்க்கடலையைப் போட்டு லேசாக அழுத்திவிட்டால் பார்க்க அழகாக இருப்பதுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
பேரீச்சம் பழத்தை சூடான பாலில் ஊறவைத்து வெண்ணெயாக அரைத்து பாயாசத்தில் கலந்துவிட்டால் புத்தம் புது சுவையில் பாயாசம் ரெடி.
போளிக்கு கடலைப் பருப்பு பூரணம் செய்யும்போது வெல்லத்துக்கு பதில் பொடித்த சர்க்கரையை பயன்படுத்தினால் போளி மெல்லியதாக, வெண்மையாக சுவையாக இருக்கும்.
கேழ்வரகை ஊற வைத்து அரைத்து பால் எடுத்து கோதுமை அல்வா போலச் செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும்.
பால் இனிப்புகள் மீந்துவிட்டால் பாயாசம் செய்யும்போது அவற்றை உதிர்த்துச் சேர்த்தால் பாயாசத்தின் சுவை கூடும்.
அதிரசம் செய்யும்போது மேலே மட்டும் வெந்திருக்கும். உள்ளே அப்படியே மாவாக இருக்கும். இதற்கு மாவில் சரியான அளவில் தண்ணீர் சேரவில்லை என்று அர்த்தம்.
மைசூர்பாகின் கலர் ஒரே சீராக வர வேண்டுமென்றால் 80 கிராம் கடலை மாவுக்கு 20 கிராம் மைதா சேருங்கள்.
ஜாங்கிரி மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டாலும் ஜாங்கிரி சுற்ற வராது. இதற்கு சிறிதளவு மட்டும் சோள மாவைச் சேருங்கள். சோள மாவு அதிகம் சேர்த்துவிட்டால் ஜாங்கிரி ஜீரா குடிக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
லட்டு செய்வதற்கான கடலை மாவு கரைசல் தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் வால் இல்லாமல் முத்துமுத்தாக பூந்தி எண்ணெயில் விழும்.
வெல்ல அதிரசம் நன்றாக செய்பவர்களைக்கூட சர்க்கரை அதிரசம் ஏமாற்றிவிடும். கொஞ்சம் அசந்தாலும் எண்ணெயில் போட்டவுடனே பிரிந்துவிடும். இதற்குக் காரணம் பாகில் தண்ணீர் அதிகமாகிவிடுவதுதான். அதே போல தண்ணீர் குறைந்தாலும் சர்க்கரை அதிரசம் கறுத்துவிடும். இதற்கு ஒரு கப் மாவுக்கு முக்கால் கப் தண்ணீரில் பாகு எடுக்க வேண்டும்.
பொரி உருண்டை செய்யும்போது முந்திரிப் பருப்பையும் நெய்யில் வறுத்துப் போட்டு உருண்டை செய்தால் ருசி நன்றாக இருக்கும்.
ஒரு கரண்டி கோதுமை மாவை நெய்யில் வாசனை வரும் வரை நன்கு வறுத்து பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும். பிறகு காய்ச்சின பால், சர்க்கரை, ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்க்க சுவையான, மணமான கோதுமைப் பாயாசம் ரெடி.