புள்ளிகள்
நவீன நடனக் கலைஞர். உள்நாட்டின் முக்கிய மேடைகளிலும் மேலை நாட்டிலும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பவர்
அபர்ணா நாகேஷ்
நவீன நடனக் கலைஞர். உள்நாட்டின் முக்கிய மேடைகளிலும் மேலை நாட்டிலும் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருப்பவர். நடனம் நவீனமாக இருந்தாலும் பிறந்தது என்னவோ சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில்தான்! வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் முழுக்க முழுக்க பெண் நடனக் கலைஞர்களை மட்டுமே கொண்ட ஒரு நடனக் குழுவைத் தொடங்கினார். "ஹை-கிக்ஸ்' என்பதுதான் குழுவின் பெயர். ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்தக் குழுவினர் பிரிட்டிஷ் கவுன்சிலால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஸ்காட்லாந்தில் நடக்கும் இளைஞர்களின் திருவிழாவில் பங்கெடுக்க இருக்கின்றனர்.
முகேஷ் அம்பானி
சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைப் பள்ளியின் விரிவாக்க விழாவுக்கு அவரால் மும்பையில் இருந்து அழைக்கப்பட்ட வி.ஐ.பி.கள் முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நிதா அம்பானியும்தான். விரிவாக்கம் செய்யப்பட்ட பள்ளியின் பகுதிகளை திறந்துவைத்த முகேஷ் அம்பானி,
"" "புதுமை' என்றவுடன் எனக்கு எப்போதுமே நினைவுக்கு வரும் பெயர் ஏ.ஆர். ரஹ்மான்தான். இசையில் அவரின் இந்த புதிய முயற்சிகள்தான் அவரை ஆஸ்கார் பரிசு வாங்கும் அளவுக்கு தகுதியுடையவராக ஆக்கியிருக்கிறது!'' என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்!
ஒரியாண்டோ எரிக் ஸ்ட்ரி
அமெரிக்காவின் லீ டேனியல், நிஜத்தில் வாழும் மனிதர்களின் கதைகளைப் படமாக்குவதில் சமர்த்தர். தற்போது அவர் எடுத்துக் கொண்டிருக்கும் படம் - தி பட்லர். அதுவும் சாதாரண வீட்டு சமையல்காரர் அல்ல, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் சமையல்காரர் யூஜின் ஆலன் என்பவரைப் பற்றிய படம். படத்தில் சில காட்சிகளில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் தோன்றியாக வேண்டிய கட்டாயம்! ஆனால் ஒபாமா நடிப்பாரா? லீ டேனியலுக்கு அவரிடம் கேட்கவும் தயக்கம். படத் தயாரிப்புப் பணிகள் இறுதிகட்டத்தை அடைந்தது. கடைசியில் லீ டேனியல், ஒரியாண்டோ எரிக் ஸ்ட்ரியைக் கண்டுபிடித்தார். இவர்தான் படத்தில் ஒபாமாவின் பாத்திரத்தை ஏற்க இருப்பவர். படம் அடுத்த மாதம் அமெரிக்காவில் திரைக்கு வருகிறது!
நதிஷா தாமஸ்
ஐந்து, ஏழு நட்சத்திர ஓட்டல்களில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பாடுபவர் நதிஷா தாமஸ். அவர் பாடுவது கோலி, டோலி, மாலி, பாலிவுட் பாடல்களை அல்ல, இவர் பாடுவது பிரெஞ்ச், ஜெர்மன், லேடின், ஸ்பானிஷ் மொழிகளில். ஒரு மொழியைத் தெரிந்து கொள்வது என்பது கண்களைத் திறந்து காட்சியைப் பார்ப்பது போல என்பார்கள். நதிஷாவுக்குத்தான் எத்தனை கண்கள்?!
பிரதிபா
சென்னையைச் சேர்ந்த பிரதிபா 2002-ஆம் ஆண்டில் சில செஸ் டைட்டில்களை வென்றிருக்கிறார். அதோடு இவருக்கு திருமணம் ஆகிவிட, அமெரிக்காவுக்குப் பறக்கிறார். தற்போது அவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். "தொட்டும்விட்டும் போயிருந்த செஸ் விளையாட்டில் நீ மீண்டும் ஈடுபட்டால் என்ன?' என்று அவரின் கணவர் கேட்டிருக்கிறார். இரண்டு மாதங்கள் மீண்டும் கடுமையாக பயிற்சி செய்திருக்கிறார். விளைவு? இந்தாண்டு நடந்த வோர்ல்ட் வுமன் ஓபன் போட்டியில் சமன் செய்திருக்கிறார். யு.எஸ்.ஓபன் வீக்எண்ட் டோர்னமென்டில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த யு.எஸ். வுமன் ஓபன் டைட்டிலை வென்றிருக்கிறார்! அமெரிக்காவின் முடி சூடிய செஸ் ராணி பிரதிபாதான்!
- திரு
ஸ்ரீநிதி!
சுஜா - பிரகாஷ் தம்பதி லண்டனில் வாழ்கிறார்கள். சுஜா சென்னையைச் சேர்ந்தவர். சாப்ட்வேர் இன்ஜினியர். பிரகாஷ் திருவனந்தபுரத்துக்காரர். வீட்டில் தமிழ் பேசுகிறார்கள். இவர்களுடைய 11 வயதான ஸ்ரீநிதி, லண்டனில் உள்ள பார்ன்பரோ பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி.
மேதை குழந்தையைத் தேர்ந்தெடுக்கும் போட்டி லண்டனில் நடந்தது. போட்டியை நடத்தியவர்கள் சேனல் 4 என்ற தொலைக்காட்சியும், மென்சா அமைப்பும். 2005 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் இதுவரை 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். கணிதம், தர்க்கம், உச்சரிப்பு, பொது அறிவு ஆகியவற்றில் கேள்விகள் கேட்டார்கள். இறுதிச் சுற்றில் தேறியவர்கள் 21 பேர். அந்த 21 பேரில் அதி புத்திசாலிக் குழந்தையாக - குழந்தை மேதையாக- ஸ்ரீ நிதி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
இந்த மேதைமை திடீரென்று வந்ததல்ல.
3 வயதாக இருக்கும்போது 200 நாடுகளின் தேசியக் கொடிகளைப் பார்த்து இந்த நாட்டுக் கொடி இது என்று "டக்' என்று சொல்லும் திறமை ஸ்ரீநிதிக்கு இருந்தது.
புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம். எழுதுவதிலும்.
ஸ்ரீநிதி தனது நான்காவது நாவலை எழுதிக் கொண்டிருக்கிறாராம்.