முகப்பு
தினமணி கதிர்

இருண்ட சுற்றுலாத் தலம்

கர்நாடகாவில் உள்ள பிஜாப்பூரில் சுற்றுலா பயணிகளுக்கான ஏராளமான கதைகளை கூறும் சரித்திரச் சான்றுடன் கூடிய நினைவிடங்கள் உள்ளன. ஆனால் சுற்றுலாத் துறையின்

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:09 PM
பகிர்:

கர்நாடகாவில் உள்ள பிஜாப்பூரில் சுற்றுலா பயணிகளுக்கான ஏராளமான கதைகளை கூறும் சரித்திரச் சான்றுடன் கூடிய நினைவிடங்கள் உள்ளன. ஆனால் சுற்றுலாத் துறையின் முறையான வழிகாட்டுதல் இல்லாததால் நிறைய இடங்கள் பாதுகாப்பின்றி கவனிப்பாராற்று உள்ளன.

இவற்றில் ஒன்று தான் " இருண்ட சுற்றுலாத் தலம் எனப்படும் " சாத் கபார்' (அறுபது நினைவிடங்கள்) பிஜாப்பூரில் உள்ள கோல் கும்பாஸþக்கு வருகை தருபவர்கள் இந்த நினைவிடங்களைக் காணலாம். இந்த புராதன நினைவிடங்களைப் பார்த்த பின்னர் அதன் பின்னணித் தகவல்களைக் கேட்டால் நெஞ்சம் பதறும்.

நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் அலி ஆதில்  சாஹி பிஜாப்பூரை ஆட்சி செய்தபோது அவரது ராணுவத் தளபதியாக இருந்தவர் அப்சல்கான். இவருக்கு  63 மனைவிகள். இவருக்கு தன்னுடைய வீரத்தின் மீது நம்பிக்கை இருந்த அளவுக்கு ஜோதிடத்திலும் நம்பிக்கை இருந்தது. 1659ஆம் ஆண்டில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி ஒரு பக்கம் பிஜாப்பூரை தாக்க புறப்பட்டார். ஏற்கெனவே அவுரங்கசீப்பும் பிஜாப்பூரை அடிக்கடி தாக்கி வந்தார். இவர்களது தாக்குதல்களைச் சமாளிக்க ஆதில் சாஹி அப்சல்கானை போர்க் களத்திற்கு அனுப்பி வைத்தார். போருக்கு புறப்படுவதற்கு முன் ஜோதிடரிடம் கலந்தாலோசித்தபோது, சிவாஜிக்கு எதிராக நடக்கும் போரில் தோல்வியடைவதோடு மரணமும் நிச்சயம் என்று கூறியதில் யாருமே எதிர்பார்க்காத ஒரு முடிவை அப்சல்கான் எடுத்தார்.

தன் மரணத்திற்குப் பின்னர் தன்னுடைய மனைவிகள் வேறு யாரையும் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கருதிய அப்சல்கான் அவர்களனைவரையும் நகருக்கு வெளியே ஆள்அரவமற்ற  இருண்ட இடத்தில் இருந்த பெரிய கிணற்றருகே அழைத்து சென்று ஒருவர் பின் ஒருவராகக் கிணற்றில் தள்ளினார். தப்பியோட முயற்சித்த இரு மனைவிகளை சிப்பாய்கள் மூலம் தேடிப்பிடித்து இழுத்து வந்து கிணற்றில் தள்ளினார். பின்னர் அவர்களது உடல்கள் கிணற்றின் அருகிலேயே புதைக்கப்பட்டதாகச் சரித்திர சான்றுகள் உள்ளன.

பிஜாப்பூர் நகர பஸ் ஸ்டாண்டிலிருந்து அதானி ரோட்டில் 5.கி.மி. தொலைவில் இந்த நினைவிடங்கள் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கறுப்பு கற்களால் இடைவெளிவிட்டு முதல் இரண்டு வரிசைகளில் தலா ஏழு நினைவிடங்களும், மூன்றாவது வரிசையில் ஐந்து நினைவிடங்களும், கடைசி நான்கு வரிசைகளில் தலா பதினொன்று நினைவிடங்களும் அமைந்துள்ளதை இன்றும் காணலாம். இந்த மைதானத்தில் ஒரு வளைவு கட்டப்பட்டிருந்தாலும், எதற்காகக் கட்டப்பட்டதென்ற குறிப்பு அதில் இல்லை. வளைவு அருகிலேயே அந்த "கொலைகாரக் கிணறு' இன்றும் உள்ளது. அங்கிருந்து ஒரு கி.மி. தொலைவில் அப்சல்கான் மரணமடைந்ததால் அவனது உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. தனக்குத் தானே அமைத்துக் கொண்ட நினைவிடம் காலியாக வெற்று நினைவிடமாக  உள்ளது.

சரித்திரச் சான்றுகள் நிறைந்த இந்த நினைவிடம் இன்று கவனிப்பாரற்று உள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்கு செல்வதற்குச் சரியான பாதை வசதியில்லை. ஆள் அரவமற்ற தனிமையான பகுதியில் இந்த நினைவிடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் செல்ல அச்சப்படுகின்றனர். சில நினைவிடங்கள் சிதைந்தும் காணப்படுகின்றன. தற்போது இந்த பகுதியைச் சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஒரு மனிதனின் காதலையும் பொறாமையையும் விளக்கும் இந்த "சாத் கபார்" முறைப்படி பராமரிக்கப்படுமானால் பிஜாப்பூர் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.