பேல் பூரி
எங்க வீட்டுத் தென்னை மரத்தில் ஏறிப் பார்த்தா... ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியிறாங்கடா''
கண்டது
(அம்பாசமுத்திரம் அருகில் உள்ள சிவசைலத்தில் உள்ள
காது கேளாத, பேச முடியாத குழந்தைகளின் ஆசிரமத்தில்
எழுதப்பட்டிருந்த வேண்டுதல்)
இறைவா!
பிறர் என்னைத் தேற்றுவதை நாடாமல்
நான் பிறரைத் தேற்றுவதற்கு
அருள்வாயாக!
பிறர் என்னைப் புரிந்து கொள்வதை நாடாமல்
நான் பிறரைப் புரிந்து கொள்வதை அருள்வீராக!
பிறர் என்னை நேசிப்பதை நாடாமல்
நான் பிறரை நேசிக்க அருள்வீராக!
ஆ.பாரதிசங்கர், சங்கரன்கோவில்.
(திருச்சி டோல்கேட் - சமயபுரம் செல்லும் சாலையில் உள்ள ஓர் அறிவிப்புப் பலகையில்)
வெற்றி வந்தால் பணிவு அவசியம்
தோல்வி வந்தால்
பொறுமை அவசியம்
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்
ஆனால்,
எதுவந்தாலும் நம்பிக்கை அவசியம்
துரை. ஏ.இரமணன், துறையூர்.
(செங்கோட்டையின் மெயின் பஜாரில் ஒரு டீக்கடையின் பெயர்)
மீட் மீ ஸ்நாக்ஸ், டீ, காபி ஸ்டால்
வெ.கணேசன், அருப்புக்கோட்டை.
(கிழக்கு தாம்பரம் காந்தி பூங்கா அருகே வாக்கிங் செல்லும்போது கண்ட வாசகம்)
நடப்பதெல்லாம் நன்மைக்கே!
பெ.கருணை வள்ளல், சென்னை-59.
(சென்னை பம்மல் - பொழிச்சலூர் மெயின் ரோட்டில்
உள்ள உணவகத்தின் பெயர்)
அப்பா சோறு
நெ.இராமன், சென்னை-74.
கேட்டது
(பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே)
""என்ன மச்சான் டூ வீலர் எங்கே? நடந்து வர்றே?''
""நாலைஞ்சு நாளா வண்டி ஓட்டும்போது தலை சுத்துது மாப்ளே... அதான் நடந்து வர்றேன்''
""ஆச்சரியமா இருக்கே''
""எது நான் நடந்து வர்றதா?''
""இல்லை. வழக்கமா வண்டி ஓட்டுனா வீல்தானே சுத்தும். நீ தலை சுத்துதுன்னு சொல்றீயே... அதான்''
விசாகன், திருநெல்வேலி.
(நாகர்கோவிலில் தியேட்டர் வாசலில்)
படம் பார்த்துவிட்டு வரும் இளைஞரிடம், ""படம்
எப்பிடி?''
""கடைசி வரை பொறுமையா இருந்து பார்ப்பவருக்கு
நோபல் பரிசே கொடுக்கலாம் ''
சு.நாகராஜன், பறக்கை.
(ஏரல் கடைவீதியில் இரு கல்லூரி மாணவர்கள்)
""எங்க வீட்டுத் தென்னை மரத்தில் ஏறிப் பார்த்தா... ஆர்ட்ஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லாம் தெரியிறாங்கடா''
""மரத்து உச்சியிலிருந்து அப்படியே கையை விட்டுப் பாரேன். மெடிக்கல் காலேஜ் பொண்ணுங்க தெரிவாங்க''
அ.நந்தகுமார், ஏரல்.
(மதுரை நகர் பேருந்தில் நடத்துநரும் பயணியும்)
""சில்லறையாக் கொடுங்க''
""சில்லறை சுத்தமா இல்லண்ணே''
""பரவாயில்ல... அழுக்கா இருந்தாலும் கொடுங்க''
கனக.விஜயன், மதுரை-2.
(கும்பகோணம் - திருச்சி பேருந்தில் இருவர்)
""வாந்தி வருது''
""ஏன் சார்?''
""தலை சுத்துது''
""என்ன ஆச்சு... உடம்பு சரியில்லையா?''
""கும்பகோணத்தில் பஸ் ஏறின உடனே பேச ஆரம்பிச்ச நீங்க... விடாம தொணதொணன்னு பேசிக்கிட்டிருக்கீங்களே... அதான்''
பிரசன்னா, கும்பகோணம்.
மைக்ரோ கதை
தன்னுடைய கண்களுக்குத்தான் பார்க்கும் திறன் அதிகம் என்று மூவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த கோயில் குருக்கள், ""இன்னும் ஒரு வாரத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது. அப்போது கோவிலுக்கு மேலே ஒரு கல்வெட்டு வைக்கப் போகிறோம். அதில் உள்ள எழுத்துகளை யார் கீழ் இருந்தே படிக்கிறாரோ, அவருடைய கண்களின் பார்வைத் திறன்தான் அதிகம்'' என்றார்.
அந்த மூவரும் கல்வெட்டு உருவாகும் இடத்தைக் கண்டுபிடித்தனர். தனித்தனியாக, ரகசியமாகச் சிற்பியைச் சந்தித்து, ""கல்வெட்டில் என்ன உள்ளது?'' என்று கேட்டனர்.
அதற்கு முதலாமவரிடம், "ஓம் நமசிவாய' என்பது கல்வெட்டின் முதல் வரியில் வருவதாகவும், இரண்டாமவரிடம், "அன்பே சிவம்' என்பது கல்வெட்டின் இரண்டாம் வரியில் வருவதாகவும், மூன்றாமவரிடம் "உபயம் ராமமூர்த்தி' என்பது மூன்றாம் வரியில் வருவதாகவும் சொன்னார்.
கும்பாபிஷேகம் முடிந்ததும், கோவில் அருகே குருக்களை மூவரும் சந்தித்தனர்.
குருக்கள் மூவரையும், ""கல்வெட்டில் உள்ளதைப் படியுங்கள்'' என்றார். சிற்பி சொன்னதை மூவரும் படித்துக் காட்டினர்.
குருக்கள் சொன்னார்: ""மூவருக்குமே பார்வைத் திறன் குறைவு. ஏனென்றால் கல்வெட்டு
இன்னும் வைக்கப்படவே இல்லை''
சுகந்தா ராம், சென்னை-59.
ஒன்றாம் வகுப்புப் படிக்கும் அந்தச் சிறுமி தனது அம்மாவின் தலை முடியையே பார்த்துக் கொண்டிருந்தாள்,
""ஏன்டா குட்டீ... அம்மா தலையையே பார்த்துக்கிட்டிருக்க?''
""உன் தலைமுடியில வொயிட் முடி இருக்கே. அதான் பார்த்தேன்'' என்றாள் சிறுமி.
""அதுவா? நீ அம்மா சொல்றதைக் கேட்காமக் கத்துறப்போ ஒரு முடி வெள்ளையாயிடும். சேட்டை பண்றப்ப இன்னொரு முடி நரைக்கும்''
""அப்படீன்னா நீ ரொம்ப சேட்டை பண்ணுவ போலிருக்கே?'' சிறுமி கேட்டதும், அம்மாவுக்குத் திகைப்பு.
""ஏன் அப்பிடிச் சொல்ற?''
""பாட்டியோட தலை முடியெல்லாம் வொயிட்டா மாறிடுச்சே''
ப்ரணா, ஹைதராபாத்.
எஸ்எம்எஸ்
மழை பெய்ஞ்ச
மண்ணையும்
லவ் பண்ற பெண்ணையும்
நம்பவே கூடாது.
ஏன்னா,
ரெண்டுமே எப்ப வேணா
வழுக்கிவிடும்.
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.