முகப்பு
தினமணி கதிர்

காக்கை பிடிப்பவர்கள்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பேரழிவு காரணமாக ஆந்திரத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:33 PM
பகிர்:

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய பேரழிவு காரணமாக ஆந்திரத்திலிருந்து மேற்கு வங்கத்திற்கு குடியேறிய சிலர் அங்கேயே தங்கிவிட்டனர். தற்போது மேற்கு வங்கத்தில் தென்கிழக்கு மித்னாபூர் பகுதியிலேயே சுற்றியலைந்து வாழும் இவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக ஆண்கள், தலையில் சிவப்பு துணியை கட்டிக்கொண்டு லுங்கியை அரை வேட்டிபோல் சுற்றிக் கொண்டு தோளில் துணி மூட்டையுடன் திரிவார்கள். நெற்றியில் நீளமாக சிவப்பு பொட்டு வைத்து கைகளில் வளையல்கள் அணிந்திருப்பார்கள். ஒரு கையில் எப்போதும் சிறிய கத்தி ஒன்று இருக்கும். பெண்கள் ரவிக்கை அணியாமல் புடவை கட்டியிருப்பார்கள்.

இவர்களுக்கென்று தொழில் எதுவுமில்லை. பெரும்பாலும் கிராமப் பகுதிகளையொட்டிய நிலங்களில் குப்பை கூளங்களை அகற்றி குடிசை போட்டுக்கொள்வார்கள். ஊருக்குள் சென்று பிச்சை எடுப்பது பெண்களின் வழக்கம். கிராமங்களில் வசிப்பவர்களும் ஏழைகள் என்பதால் அரிசி மட்டுமே பிச்சையாக அளிப்பதுண்டு. சுமார் ஆயிரத்து 500 பேர் உள்ள இந்த கும்பல் மாலையில் ஒன்றுகூடும்போது பிச்சையாக வாங்கி வந்த அரிசியை மொத்தமாகக் கொட்டி பங்கிட்டுக் கொள்வதுண்டு. இரவு வேளையில் மட்டும் விறகு அடுப்பு மூட்டி மண்பானையில் சமையல் செய்து சாப்பிடும் இவர்கள் மீதமுள்ள சோற்றை மறுநாள் காலை உணவாக வைத்துக் கொள்வதுண்டு. பிச்சையெடுத்து வந்து சமைப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது, வயதானவர்களை கவனித்துக் கொள்வது பெண்களின் வேலையாகும்.

இவர்களுக்கு காக்கைகளை வேட்டையாடுவது மிகவும் பிடிக்கும். பறவை இனத்தில் மனிதர்கள் காக்கை மாமிசத்தை சாப்பிடக்கூடாதென்று கூறப்பட்டாலும் இவர்களுக்கு காக்கை மாமிசம் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். காக்கைகளைக் கொன்று இடுப்பில் கட்டிக் கொண்டு வருவதை பெருமையாக கருதுவார்கள். இதனால் இவர்களை "காக்மரா' என்றழைப்பதுண்டு. "காக்' என்றால் காக்கை, "மரா' என்றால் வேட்டையாடுபவர்கள். "காக்கை பிடிப்பவர்கள்' என்று கருதப்படும் இவர்களை நாடோடிகள் என்றும் கூறலாம். 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்திலிருந்து இடம் பெயர்ந்தார்கள் என்பதால் தெலுங்கு கலந்த உள்ளூர் மொழியைப் பேசி வரும் இவர்கள் மீண்டும் ஆந்திரத்திற்கு திரும்பவில்லை.

ஒரே இடத்தில் தங்குவதும் இல்லை. காக்கைகள் கிடைக்காவிட்டால் வேறு ஊர்களுக்கு கிளம்பிவிடுவார்கள். நினைத்த இடத்தில் தங்கி கிடைத்ததை சாப்பிட்டாலும் காக்கைகள் கிடைக்கும் நாள் இவர்களுக்கு விருந்து நாளாகும். இவர்கள் ஒரே குடும்பமாக இருந்தாலும் திருமணம் செய்து கொள்வதெல்லாம் உள்ளுக்குள்ளேயே தான்.

இவர்களை, வங்காளத்தில் இருந்தபோது பத்தாண்டுகளாக கவனித்து வந்த தேசிய விருது பெற்ற இயக்குநர் தனஞ்செய் மண்டல், "காக்மரா' சமூகத்தைப் பற்றி குறும்படமொன்று எடுக்க விரும்பினார். ஆனால் தங்களைப் பற்றி படமெடுக்க அவர்கள் சுலபத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் அவர்களை தொடர்ந்து வற்புறுத்தி ஒப்புதல் பெற்று "எ ஜர்னி வித் காக்மராஸ்' என்ற தலைப்பில் 23 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமொன்றை தனஞ்செய் மண்டல் எடுத்து வெளியிட்டபோதுதான் இந்த அபூர்வ நாடோடி சமூகத்தைப் பற்றி வெளி உலகத்தினர் அறிந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.