தினமணி கதிர்

திரைக் கதிர்

வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் "நேரம்'.  கதை, திரைக்கதை, எடிட்டிங், இயக்கம் அல்போன்ஸ் புத்ரன்.

ஜி. அசோக்

வின்னர் புல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம் "நேரம்'.  கதை, திரைக்கதை, எடிட்டிங், இயக்கம் அல்போன்ஸ் புத்ரன். இப்படத்தில் இடம் பெற்றுள்ள ""பிஸ்தா...'' என்ற பாடலை யூ டியூபில் பார்த்து விட்டு, படத்தை பார்த்த உதயநிதி, நிச்சயம் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் படத்தை வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளார். அப்படி என்ன படத்தின் ஸ்பெஷல்... ""வாழ்வின் எதார்த்த நிமிடங்கள்தான் திரைக்கதை. நல்ல நேரம், கெட்ட நேரம் என இரண்டு உண்டு. சிலருக்கு இதில் நம்பிக்கை உண்டு. சிலருக்குக் கிடையாது. சாஃப்ட்வேர் என்ஜீனியரான ஹீரோ தன் தங்கைக்கு கடன் வாங்கி திருமணம் செய்கிறார். திடீரென அவர் வேலை பறிபோகிறது. திருமணத்துக்கு வாங்கிய கடனை அடைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. இதில் இருந்து எப்படி மீள்கிறான் என்பதுதான் கதை. பார்த்து பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், படத்தின் மேக்கிங் புது விதமாக இருக்கும்'' என்கிறார் அல்போன்ஸ்.

மலையாள இயக்குநர் பாசிலின் மகன் பஹத் பாசில், இவருடன் ஆண்ட்ரியா "அன்னயும் ரசூலும்' என்ற படத்தில் நடித்தார். இது ஹிட்டானது. இதையடுத்து ஒரு பேட்டியில், ""இந்தப் படத்தில் நடித்த போது ஆண்ட்ரியாவை காதலிப்பதாக உணர முடிந்தது'' என்று பரபரப்பு உண்டாக்கினார். ஆனால் அவரது காதலை ஏற்க மறுத்து மற்றொரு பேட்டியில் ஆண்ட்ரியா பதில் பேசினார். இந்நிலையில் இரண்டு பேரையும் "நார்த் 24 காதம்' என்ற படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நடிக்க ஆண்ட்ரியா மறுத்து விட்டார். மீண்டும் இணைந்து நடித்தால் காதல் ஆசையை பஹத் எழுப்பலாம் என்பதால்தான் ஆண்ட்ரியா படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஆண்ட்ரியா தரப்பில், கால்ஷீட் பிரச்னையால் மட்டுமே அப்படத்தில் நடிக்க முடியவில்லை என்றும், தற்போது "லண்டன் ப்ரீட்ஜ்' என்ற மலையாளப் படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

"பனிவிழும் மலர்வனம்' என்பது, திகில் படம் ஒன்றுக்கு தலைப்பாகிறது. அபிலாஷ், சானியா தாரா, வர்ஷா நடித்துள்ளனர். ரஜின் இசையமைப்பில், புதுமுகம் ஜேம்ஸ் டேவிட் இப்படத்தை எழுதி இயக்குகிறார். சென்னை காதலர்களின் காதல் வளர்வது புலிகள் நடமாடும் காட்டில்.  அடர்ந்த வனப்பகுதிகளில் சிக்கி கொண்ட காதல் ஜோடியை வேட்டையாட புலி அலைகிறது. ஏற்கெனவே புலியால் பாதிக்கப்பட்ட வில்லன் கூட்டம் புலியை வேட்டையாட அலைகிறது. இந்த மூன்று தரப்புக்குமான போராட்ட நிமிடங்கள்தான் திரைக்கதை. ""திகில் படமாக இருந்தாலும் அழிந்து வரும் உயிரினமான "புலிகளை காப்போம்' என்ற குரல்தான் திரைக்கதையின் பிரதானமாக இருக்கும். படத்தில் 40 நிமிடங்கள் புலி சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளன. மனிதர்களோடு புலி வரும் காட்சி கிராபிக்ஸôல் உருவாக்கப்பட்டுள்ளது. "ஹேங் ஒவர்', "பர்னிங் பிரைட்' போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த புலியின் ஸ்டாக் புட்டேஜ் காட்சிகளை இப்படத்திற்காக வாங்கி பயன்படுத்திருக்கிறோம்'' என்றார் இயக்குநர் ஜேம்ஸ் டேவிட்.

"மாணிக்கம்', "மாயி', "திவான்' உள்ளிட்ட படங்களை இயக்கிய சூரியப்பிரகாஷ் அடுத்து இயக்கும் படம் "வருச நாடு'. யத்தீஷ் மகாதேவ் இசையமைப்பில் டி.பாஸ்கர் ஒளிப்பதிவு செய்கிறார். ""காதல் கதைதான். குறிப்பாக காதலுக்கு எதிர்ப்பு என்பது மூன்று வகையானதாக இருக்கும். உறவுகளிடமிருந்து வருகிற எதிர்ப்பு, ஏற்றத் தாழ்வுகளால் வருகிற எதிர்ப்பு, முக்கியமானதாக ஜாதிய ரீதியாக வருகிற எதிர்ப்பு, ஆனால் இந்த மூன்றும் இல்லாமல் புதுவகையான எதிர்ப்பு இந்த காதலுக்கு வருகிறது. அது தான் கதையின் சுவராஸ்யம். தான்தோன்றித்தனமாக வாழும் ஒருவனுக்கு, அவனுக்கு நேரெதிர் குணம் கொண்டவளின் மீது காதல். அதுவேதான் அந்த பிரச்னைக்கு ஆரம்பப்புள்ளியும் கூட. திண்டுக்கல் மாவட்டம் எஸ்.வாடிப்பட்டி கிராமத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, அதற்கேற்ற சினிமா கற்பனையை கலந்திருக்கிறேன்'' என்றார் சூரியப்பிரகாஷ்.

நட்பை மையமாக கொண்டு உருவாகும் படம் "மச்சான்'. முக்கிய பாத்திரமேற்று நடிப்பதுடன் இப்படத்தை எழுதி இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம். அறிவுமதியின் பாடல் வரிகளுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். நகைச்சுவையை முக்கிய களமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை பற்றி ஷக்தி சிதம்பரத்திடம் பேசிய போது, ""சில சீரியஸôன விஷயங்களை காமெடியுடன் சேர்த்து சொன்னால் அதன் வீச்சு பலமாக இருக்கும். அப்படியான ஒரு கதை களத்தைத்தான் காமெடி பின்னணியில் திரைக்கதை சொல்லும். நல்லதும் கெட்டதும் நம்மைச்சுற்றி இருக்கும் நட்பை அடிப்படையாக கொண்டுதான் அமைகிறது. சில எதிர்பாராத சம்பவங்கள் நம் பக்கத்தில் இருந்துதான் உருவாகிறது. அப்படியான நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் கதை. காமெடி படங்கள்தான் இப்போது வெற்றிக்கு உத்திரவாதம் என்பதால், காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன். கருணாஸ் - விவேக் சம்பந்தமான காட்சிகள் ரசிக்கும்படியான விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன'' என்றார் ஷக்தி சிதம்பரம்.  

கோலிவுட், டோலிவுட்டை அடுத்து ஹீரோயின்கள் பாலிவுட்டை குறி வைப்பதுதான் வழக்கம். கவர்ச்சி போட்டிக்கு தயாராக இருந்தால்தான் இது சாத்தியமாகும். சிநேகாவை பொருத்தவரை திருமணத்துக்குப் பின் குடும்ப பாங்கான வேடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இவரைத் தேடி இப்போது போஜ்புரி பட வாய்ப்பு வந்துள்ளது. திருமணத்துக்கு பின் திரைக்கு வந்த "ஹரிதாஸ்' படத்தில் பள்ளி ஆசிரியையாக நடித்திருந்தார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் மீது அன்பு செலுத்தும் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். இப்படம்தான் போஜ்புரியில் ரீமேக் ஆகிறது. சிநேகாவைத் தவிர மற்ற நடிகர், நடிகைகள் அனைவரும் போஜ்புரியை சேர்ந்தவர்களாக நடிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!

ஜெஸிக்கா பெகுலா சாம்பியன்!

ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

அசத்தல் அல்கராஸ் சாம்பியன்!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT