முகப்பு
தினமணி கதிர்

சைக்கிள் ஒட்டத் தெரியாதவன்

மனசுக்குள் எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு ""ரொம்ப நல்லா இருக்குடா. உனக்குச் சைக்கிள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:55 AM
பகிர்:

பென்ஷன் பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். தெரு வெறிச்சோடிக் கிடந்தது. மழை வரும்போல் இருந்தது. நடையை எட்டிப் போட்டேன்.

சட்டென்று எனக்குப் பின்னால் வெகு அருகில் சைக்கிள் மணிச் சத்தம். என் பின்னால் ஒரு சைக்கிள் வந்து இடித்துவிட்டது. நல்லவேளை விழாமல் சுதாரித்து எழுந்து விட்டேன்.

என் மீது சைக்கிளில் மோதியவன் ஒரு சிறுவன். அவனும் சைக்கிளைப் போட்டுக் கொண்டு கீழே விழுந்து கிடந்தான். நான் அவனைத் தூக்கிவிட்டேன்.

""சாரி அங்கிள். உங்க மேல இடிச்சுட்டேன். வெரி சாரி. நான் இப்பத்தான் சைக்கிள் கத்துக்கறேன்''

""பரவாயில்லை பையா. நல்லா கத்துக்கோ'' சிரித்துக் கொண்டே அவன் முதுகில் தட்டிக் கொடுத்தேன்.

இடுப்பை வளைத்து வளைத்து என் முன்னால் சைக்கிளை ஓட்டிச் சென்ற அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். இவனைப் போல் இருந்தபோதே நான் சைக்கிள் கற்றுக் கொண்டிருந்தால்...

என் வயதை ஒத்த சிறு பையன்கள் "வாடகை சைக்கிள்' எடுத்துக் கொண்டு தெருக்களை வலம் வந்தபோது நான் கதைப் புத்தகங்களே பழியாகக் கிடந்தேன். பள்ளியிலிருந்து திரும்பியதுமே புத்தகப் பையை அப்படியே போட்டுவிட்டு கிளை நூலகத்துக்கு ஓடிய காலம் என் சிறுபிராயமாக இருந்தது.

நாங்கள் குடியிருந்த இடத்தின் பெயர் வேப்பமர காலனி. அங்கே நிறைய வேப்ப மரங்கள் இருக்கும். ஒவ்வொரு வீட்டின் முன்னாலும்  வேப்பமரம் நிழல் கோலம் போட்டிருக்கும். வேப்பம் பழங்களைத் தின்றுவிட்டு காகங்கள் கொட்டைகளை எச்சமிட்டு வைத்திருக்கும். நாங்கள் வேப்பங் கொட்டைகளைப் பொறுக்கி நாடார் கடையில் கொடுத்து தேன் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவோம்.

காலனியின் கடைசி வீட்டில்தான் மஞ்சுவின் குடும்பம் வசித்தது. மஞ்சு நான் படித்த பள்ளிக் கூடத்தில் என்னோடு எட்டாங் கிளாஸ் படித்தாள். ஆனால் அவள் வேறு செக்ஷன். பள்ளிவிட்டதும் ரெண்டு பேரும் ஒன்றாகத்தான் வருவோம்.  நிறைய வேப்பங்கொட்டைகள் பொறுக்கி அவளுக்குத் தேன் மிட்டாய் வாங்கித் தருவேன். நான் என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிப்பாள் மஞ்சு.

அவளைச் சிரிக்க வைக்க புதுசு புதுசாக ஏதாவது கோணங்கித்தனம் செய்து கொண்டிருப்பேன்.

ஒருநாள் எதிர்வீட்டு வேப்ப மரத்தடியில் புத்தம் புதுசாக ஒரு சைக்கிள் நின்று கொண்டு இருந்தது. சைக்கிளின் சக்கரங்களும் கம்பிகளும் பளபளவென்று டாலடித்தன. அந்தச் சைக்கிளுக்குச் சந்தனம், குங்குமம் எல்லாம் வைத்து மாலை போட்டு பூஜை பண்ணி இருந்தார்கள்.

அந்த வீட்டில்தான் வெங்கட் குடியிருந்தான். வீட்டை விட்டு வெளியே வந்தான். என்னைப் பார்த்து,""என் பர்த் டேக்கு அப்பாவோட ப்ரஸண்ட். நல்லா இருக்கா கோபி'' என்று கேட்டான்.

மனசுக்குள் எழுந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு ""ரொம்ப நல்லா இருக்குடா. உனக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியுமா?'' என்று கேட்டேன்.

""பாரேன். தினமும் ஸ்கூலுக்கு இந்த சைக்கிளில்தான் வரப் போறேன்.''

வெங்கட் சைக்கிளை எடுத்து அதன் மீது தாவி ஏறி மணியை அடித்தபடி கம்பீரமாக தெருவின் கும்பல் ஊடாக லாகவமாக சைக்கிளை ஓட்டி கொண்டு போனான்.

ஒரு தடவை அவன் சைக்கிள் கேரியரில் உட்கார வைத்து ஸ்கூலுக்குக் கூட்டிப் போனான். அவன் ஓட்டுவதைப் பார்த்து எனக்கு பயம் வந்துவிட்டது.  குறைந்தது இரண்டு பேர் மீது மோதப் பார்த்தான். திறந்த சாக்கடையில் விழப் பார்த்தான். தெற்குவீதி திருப்பத்தில் திருவையாறு பஸ் மீது மோதாமல் மயிரிழையில் தப்பித்தோம். பள்ளி போவதற்குள் எனக்குப் பாதி உயிர் போய்விட்டிருந்தது.

 மறுபடியும் அவன் என்னை சைக்கிளில் உட்கார அழைத்தபோது, ""வேண்டாம்டா சாமி'' என்று சொல்லிவிட்டேன்.

அதற்கப்புறம் நடந்த சம்பவத்தைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.

ஒருநாள் ஸ்கூல் விட்டு என்னைத் தாண்டிப் போன வெங்கட்டின் சைக்கிள் கேரியரில் மஞ்சுளா உட்கார்ந்து கொண்டு போனாள். பள்ளிக்கூட மைதானத்தில் விளையாடும்போது காலில் அடிபட்டுவிட்டதாம்.

அப்புறமும் அவனோடு அடிக்கடி சைக்கிளில் வருவதற்கு புதுப்புது காரணங்களைச் சொல்ல ஆரம்பித்தாள். நான் கேட்பதைவிட்டுவிட்டேன். மனசுக்குள் ஓர் உறுதி பிறந்தது. இந்தக் கோடை விடுமுறையில் எப்படியாவது சைக்கிள் கற்றுக் கொண்டு விட வேண்டும்.

கோடை விடுமுறை வந்தது. வழக்கம்போல் அப்பா என்னை அடியக்கமங்கலத்தில் இருந்த பெரியப்பா வீட்டில் கொண்டு போய் விட்டார்.

எனக்கு ஞாபகம் வந்தது. பெரியப்பாவிடம் ஒரு சைக்கிள் இருந்தது. அதில் சைக்கிள் கற்றுக் கொள்ளலாமே!

அடியக்கமங்கலம் போனதும்தான் தெரிந்தது பெரியப்பா காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு திருவாரூர் போய்விட்டு சாயங்காலம் இருட்டியதும்தான் வருவார் என்பது.

அதுவும்  சைக்கிளைத் தள்ளிக் கொண்டு தள்ளாடி தள்ளாடி வருவார். சைக்கிளும் தள்ளாடும். எனக்கென்னவோ இரண்டு பேரும் குடித்திருப்பதாகத் தோன்றும். இந்த குடிகார சைக்கிள் வேண்டவே வேண்டாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியப்பா அந்த சைக்கிளை உருத்தெரியாமல் பார்ட் பார்ட்டாக கழற்றிப் போட்டுவிடுவார்.  ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்து பழுது நீக்கி சைக்கிள் அவர் கையில் மீண்டும் உருவம் எடுப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். கடைசியில் டயர்களில் காற்றடிப்பார். வேலை முடிய மத்தியானம் ஆகிவிடும்.

பெரியம்மா எரிச்சலுடன் சொல்வார்:

""சைக்கிள்தான்டா அவரோட பொண்டாட்டி''

""ஏம்மா அப்படிச் சொல்றீங்க?''

""பின்னே... சைக்கிள் மேல காட்ற கரிசனத்தை ஒருநாளாவது  என் மேல் காட்டுனது உண்டா? காட்டியிருந்தா இப்படி நான் வியாதிக்காரியா ஆகியிருப்பேனா? ''

பெரியப்பா வெளியில் போயிருக்கும்போது அந்த சைக்கிளைப் பார்க்கும்போது பெரியப்பா மாதிரியே இருக்கும். அப்பாவின் பேனாவைப் பார்த்தால் அப்பாவைப் பார்க்கிற மாதிரியே இருக்கும். பாண்ட்ஸ் பவுடர் டப்பாவைப் பார்த்தால் அம்மா மாதிரி இருக்கும்.  சிவப்பு வர்ண பவள மணிமாலை ஒன்று வீட்டில் இருந்தது. அதைப் பார்த்தால் செத்துப் போன பாட்டி மாதிரி இருக்கும். பொருட்களின் மீது அதை உபயோகப்படுத்துபவர்கள் காட்டுகிற பிரியத்தால் அவர்களின் சாயல் அவற்றின் மீது படிந்து விடுகிறது.

கோடை விடுமுறை முடிந்து திரும்பிய போது எதிர்வீட்டுக்கு முன்னால் ஒரு சிறிய லாரி நின்றது. வெங்கட்டின் அப்பாவுக்கு வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகிவிட்டது. வெங்கட்டின் முகம் சோகமாக இருந்தது.

""போயிட்டு வரேன்டா''

""சரிடா''

நான் அவனுடைய சைக்கிள் அந்த லாரியில் ஏற்றப்படுவதை திருப்தியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

பள்ளிப் பருவம் பறந்துவிட்டது. கல்லூரிக் காலம் முடிந்துவிட்து. நான் மட்டும் சைக்கிள் கற்றுக் கொள்ளவே இல்லை.

அப்போது நான் வேலையில்லாத இளைஞன். கருந்தாட்டான்குடியில் குடியிருந்தேன்.என்னைப் பார்க்க புருஷோத்தமன் வருவான். சைக்கிளில்தான் வருவான். பழைய பாடல்களை அதுவும் சந்திரபாபு பாடல்களை அருமையாகப் பாடுவான்.  அவனிடம் சைக்கிள் கற்றுக் கொள்ளப் பிரியமில்லை. பாட்டு கேட்கத்தான் பிரியம்.

அவனுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைத்துவிட்டது. புது சைக்கிளில் நீட்டாக பேண்ட் சட்டையுடன்  அவன் அலுவலகம் செல்வதைப் பார்க்கப் பொறாமையாக இருந்தது.

அந்த வருஷம் சர்வீஸ் கமிஷன் எழுதியும் எனக்கு வேலை கிடைக்கவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக வேலை இல்லாத  விரக்தி என் முகத்தில் தாடி முள்ளாக குத்த ஆ ரம்பித்தது.

ஒருநாள் திண்ணையில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். அப்பா பள்ளிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தவர் நின்று, ""என்ன வேலைக்கு அப்ளிகேஷன் போடறியா?'' என்று கேட்டார்.

கேட்டுவிட்டு என் கையிலிருந்த பேப்பரை வாங்கிப் பார்த்தார். எல்லாம் கவிதைகள்!

""உருப்படற வழியைப் பாரு''

தென்றல் முடித்திருத்தக அன்பரசன் கூட கேட்டுவிட்டார்.

""தம்பி வேலைக்குப் போகலியா?'

""சர்வீஸ் கமிஷன் எழுதியிருக்கேன். இந்த வருஷம் சிடைச்சுடும்''

அன்பரசனுக்கு இவன் மீது அலாதிப் பிரியம். இவனோடு தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார். கத்திரிக்கோலின் "கிரிச்', "கிரிச்' பின்னணி இசையாகக் கேட்கும்.

காங்கிரசுக்கு எதிராக தி.மு.க.அரசியலில் குதித்தது. சினிமா, நாடகம் பற்றியெல்லாம் சுவாரஸ்யமாகச் சொல்வார்.

""தம்பீ... அண்ணாவுக்கு இதோ இந்தக் கையால் முகச் சவரம் செய்திருக்கிறேன். இதோ நீங்கள் உட்கார்ந்திருந்த இந்தச் சுழல் நாற்காலியில் உட்கார்ந்துதான் கலைஞர் முடிவெட்டிக் கொண்டார்'' என்பார் பெருமிதத்துடன்.

""அந்தக் காலத்தில் கிருஷ்ணா டாக்கீஸ் பக்கம்தான் அண்ணா, கலைஞர், ராதா அண்ணன் எல்லாரும் தங்கி இருந்தாங்க... அவங்களுக்கெல்லாம் ஊருக்குள்ள தங்க இடம் கொடுக்கமாட்டாங்க... நாடகம் போடறவங்க மேல அந்தக் காலத்துல மதிப்புக் கிடையாது. கூத்தாடிப் பசங்கம்பாங்க''

அவர் பேசும்போதே தூக்கம் வந்துவிடும். காதருகே முடிவெட்டும் மெஷினின் முணுமுணுப்பு கேட்கும். கழுத்துக்குப் பின்புறம் கிச்சு கிச்சு மூட்டுவதுபோல் மெஷின் ஊரும்போது விழித்துக் கொள்வேன்.

தலையைத் தட்டி மசாஜ் செய்துவிடுவார். அவர் தட்டலில் பரிவு, பாசம் எல்லாம் இருக்கும். முகத்தருகே வாசனைப் புகையிலை வாசம் வீசும்.

 முடிவெட்டிக் கொண்டு வந்து முற்றத்தில் அம்மா பெரிய அண்டாவில் விளாவி வைத்திருக்கும் வெந்நீரில் குளித்துவிட்டு மிளகு ரசமும், பருப்புத் துவையலும் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால் ஆனந்தமாகத் தூக்கம் வரும்.

அப்பா ஒருநாள் என்னைக் கூப்பிட்டு என் கையில் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, ""பேரீஸ் கார்னரில் நான் கொடுக்கிற அட்ரசில் போய்ப் பாரு. அந்த ஆபிஸ்ல அக்கவுண்ட்ஸ்ல வேலை காலி இருக்காம்'' என்றார்.

அந்த அலுவலகம் மூன்றாவது மாடியில் இருந்தது, ஏதோ கட்டட நிறுவனம்.

அறைக்குள் இரண்டு பேர் உட்கார்ந்து இருந்தார்கள். சுவரில் பெரிய வெங்கடாஜலபதி படம் தொங்கியது.

""என்.ஆர்.சார் அனுப்பிச்சாரா? அவர் பையன்தானே நீங்கள்?''

""ஆமாம் சார்''

""நான் அவரோட ஸ்டூடன்ட். உக்காருங்க''

எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அங்கே பின்னால் ஒரு நாற்காலியும் மேசையும் காலியாக இருந்தது. அதில் நிறைய லெட்ஜர்களும் புத்தகங்களும் இருந்தன. அவை எனக்காகக் காத்திருப்பதுபோலத் தோன்றியது. நான் உட்காரத் தயங்கி பவ்யமாக நின்று கொண்டிருந்தேன்.

டெலிபோன் மணி அடித்தது. ரிசீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு,""அப்படியா? இதோ வந்துக்கிட்டே இருக்கேன்'' என்றார்.

""சாரி... நான் கொஞ்சம் அவசரமா வெளியே கிளம்பறேன். உங்களப் பத்தின விவரத்தையெல்லாம் இதோ இருக்காரே என் பார்ட்னர்... அவர்ட்ட சொல்லுங்க''

பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவருடைய பார்ட்னர் என்னை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அவர் தோற்றமே எனக்குப் பிடிக்கவில்லை. மேசை மேல் முளைத்த கள்ளிச் செடி மாதிரி இருந்தார்.

""முத்து இவரைப் பத்தின விவரங்களைக் கேட்டுக்கிட்டு அனுப்பிச்சிடுங்க. நாளைக்கே வரச் சொல்லிடுங்க''

முத்து அசுவாரஸ்யமாக தலையை ஆட்டினார். கீழே அப்பாவின் மாணவர் மோட்டார் சைக்கிளில் புறப்படுகிற சத்தம் கேட்டது.

முத்து மெல்ல நிமிர்ந்து என்னைப் பார்த்தார். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார்.

""சொல்லுங்க'' முத்துவின் குரல் அவர் தோற்றத்தைவிட மோசமாக இருந்தது.

""பி.காம் படிச்சிருக்கேன். கேஷ் புக் எழுதத் தெரியும். லெட்ஜர், பாலன்ஸ் ஷீட், அக்கவுண்ட்ஸ் தெரியும்''

முத்து அமைதியாகக் கேட்டார்.

""சைக்கிள் ஓட்டத் தெரியுமா?''

சத்தியமாக நான் இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. தூக்கிவாரிப் போட்டது.

உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது.

சொல்லுங்க. தெரியுமா? தெரியாதா?

""தெரியாது''

""அப்ப போய்ட்டு வாங்க. இங்க அடிக்கடி பாங்குக்குப் போக வேண்டியிருக்கும்.  பக்கத்துல ஒரு ப்ராஜக்ட் போயிகிட்டிருக்கு, சைட்டுக்கும் அடிக்கடி போகணும். சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சாதான் லாயக்குப்படும். சைக்கிள் ஓட்டக் கத்துக்கிட்டு வந்து பாருங்க''

சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் தட்டினார். நான் சாம்பலாய் உதிர்ந்தேன்.

வெளியே வந்தேன்.

கீழே என் வயதே உள்ள ஓர் இளைஞன் அரதப் பழசான சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்திக் கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்து மெலிதாகச் சிரித்தான்.

""சார்... மேலே முத்து சார் இருக்காரா?''

""என்ன விஷயம்?''

""வேலைக்கு வரச் சொல்லி இருந்தார்''

""என்ன படிச்சிருக்கீங்க?''

""எஸ்எஸ்எல்சி'' தலையைக் குனிந்து கொண்டு சொன்னான்.

""போங்க முத்து இருக்கார்'' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அந்தப் பையனுக்கு வேலை கிடைத்துவிடும். அதில் சந்தேகம் இல்லை. வேலைக்கான முக்கியமான தகுதி ஓன்று அவனிடம் இருந்தது. அவனிடம் ஒரு சைக்கிள் இருக்கிறது.

நேராக அய்யங்கடைத் தெரு நோக்கி நடந்தேன். அங்கேதான் யுவர் மெஸ் இருந்தது. தஞ்சை ப்ரகாஷ் தலைமையில் இலக்கிய நண்பர்கள் கூடும் சங்கமத்துறை அது. அங்கே என் கவிதைகளை வாசித்தும் காண்பிப்பேன். எல்லாரும் ரசிப்பார்கள். பெரிய பெரிய இலக்கிய ஜாம்பவான்கள் என் கவிதையைக் கேட்டு "பேஷ்' என்பார்கள். அந்த இலக்கியக் கூட்டத்தில் ஒரு கவிஞனாகக் கம்பீரமாக வீற்றிருப்பேன். அவர்களில் யாருமே என்னை, ""உங்களுக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியுமா?'' என்று கேட்கமாட்டார்கள்.

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. நான் ஜன்னல் ஓரம் ஈஸிசேரைப் போட்டுக் கொண்டு மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டு அப்படியே பழைய நினைவுகளில் மூழ்கிப் போயிருந்தேன்.

சாயங்காலம் மழை விட்டதும் பூங்காவுக்கு வாக்கிங் புறப்பட்டேன். பூங்காவில் பெரிய பெரிய வாதா மரங்கள். அவற்றின் கீழே தாமிர வர்ணத்தில் பழுத்த இலைகள். பறவைகளின் கூச்சல். மனம் உற்சாகமாக இருந்தது.

ஓரிருவரைத் தவிர நண்பர்கள் எல்லாரும் வந்துவிட்டார்கள். ஜகன்னாதன் சைக்கிளில் வந்து இறங்கினார். ஜகன்னாதன் ஒண்டிக்கட்டை. கல்யாணமே பண்ணிக் கொள்ளவில்லை. தினமும் பூங்காவுக்கு வருவதற்கு முன்னால் சைக்கிளிலேயே கோவிலுக்குப் போய்விட்டுத்தான் வருவார்.

அன்றைக்கு நண்பர்களின் பேச்சில் மனம் லயிக்கவில்லை. மனசுக்குள் என்னவோ ஒரு யோசனை. எல்லாரும் கலையத் தொடங்கியபோது நான் ஜகன்னாதனை நெருங்கினேன்.

""என்ன சார்... என்ன விஷயம்?''

""எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?''

""சொல்லுங்க சார் ''

""எனக்கு சைக்கிள் கத்துத் தர முடியுமா?''

ஜகன்னாதன் சிரித்தார்.

""என்ன சார்... இத்தினி வயசுக்கு மேல இப்படி ஒரு ஆசை... பேசாம ஒரு ஸ்கூட்டி வாங்கிடுங்களேன்''

""இல்லே... சைக்கிள்தான் வேணும். உங்க சைக்கிளை வச்சு கத்துக்கிட்டா, அடுத்த மாசம் பென்ஷன்ல புதுசா ஒரு சைக்கிள் வாங்கிடுவேன்''

""நீங்க நல்ல திடகாத்திரமாத்தான் இருக்கீங்க. கத்துத் தர்ரேன். நம்ப ஸ்கூல் கிரவுண்டுக்குப் போயிடலாம். நாளைக்கு ஆரம்பிச்சிருவோம்''

நான் சந்தோஷமாகத் தலையாட்டினேன்.

ஆகா.... புது சைக்கிளில் ஆனந்தமாகச் செல்வேன். வாக்கிங் போகும்போது, "என்ன பெரிசு... வீட்ல சொல்லீட்டு வந்துட்டியா' என்று ஹார்ன் அடித்துச் செல்லும் மோட்டார் பைக் விடலைகள் இனிமேல் அப்படிச் சொல்ல மாட்டார்கள். நான் மணி அடித்துத் தெருவில் போகிறவர்களை விலகச் சொல்வேன்!

 ஞாயிற்றுக்கிழமைகளில் பெரியப்பா மாதிரி சைக்கிளைத் துடைப்பேன். பெரியம்மா சொல்வது மாதிரி அது எனக்கு இன்னொரு பெண்டாட்டியாக இருக்கும். பளபளவென்று ஜொலித்துக் கொண்டு நாணிக் கோணிக் கொண்டு நிற்கும் புதுப் பொண்டாட்டி... ஹா... ஹா... ஹா!

""என்ன தானாச் சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க?'' காபித் தம்ளரை நீட்டியபடி கேட்டாள் என் மனைவி.

 காபி நன்றாக இருந்தது. என் கற்பனை அதைவிட நன்றாக இருந்தது.

மறுநாள். சாப்பிட உட்கார்ந்தேன். ராஜாபாதரின் பையன் ஓடி வந்தான்.

""சார்.. அப்பா உங்கள்ட்ட சொல்லிட்டு வரச் சொன்னார். ஜகன்னாதன் செத்துப் போயிட்டாராம் ''

அப்படியே எழுந்துவிட்டேன். ஜகன்னாதன் வீட்டுக்கு இப்போதுதான் முதல் தடவையாகப் போகிறேன். வரவேற்க ஜகன்னாதன் இருக்க மாட்டார். நெஞ்சு வலித்தது.

ஒரு வீட்டின் பின்னால் அவுட் ஹவுஸ் மாதிரி இருந்தது ஜகன்னாதன் வீடு. ஒரு கூடம். வெளியே பாத்ரூம். அவ்வளவுதான் வீடு. கொடியில் ஒரு வேட்டியும் துண்டும் காய்ந்தன. வீட்டுக்குள் மூலையில் ஒரு தண்ணீர்ப் பானை. சுவற்றில் வள்ளலார் படம். ஒரு டிரங்குப் பெட்டி. ஒரு கட்டில். அவ்வளவுதான் அவர் உடமைகள்.

கட்டிலில் அவரைப் படுக்க வைத்து மாலை போட்டிருந்தது.

"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ்வுலகு' குறள் மனசைக் குடைந்தது.

வெளியே சாமியானா பந்தல். அங்கே போட்டிருந்த நாற்காலி ஒன்றில் உட்கார்ந்தேன்.

""வாடகை ஒழுங்கா தந்துடுவார் சார். காலையில் கூட பேப்பர் வாங்கிட்டு வந்தார். திடீர்னு நெஞ்சு வலிக்குதுன்னார். போயிட்டார்'' வீட்டுக்காரர் சொல்வதில் மனம் செல்லவில்லை.

ஜகன்னாதனின் அந்தச் சிறிய வீட்டுக்கு வெளியே திண்ணை போன்ற பகுதி ஓரம் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய சைக்கிளையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன் நான்.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.