இனிப்போ... இனிப்பு!
முறுக்கு மாவு பிசையும்போது, அத்துடன் ஒரு மேஜைக் கரண்டி நெய் ஊற்றி மாவை நன்கு பிசைந்து முறுக்கு சுட்டு எடுத்தால், நெய் மணத்துடன் கூடுதலான சுவையுடன் முறுக்கு இருக்கும்.
* முறுக்கு மாவு பிசையும்போது, அத்துடன் ஒரு மேஜைக் கரண்டி நெய் ஊற்றி மாவை நன்கு பிசைந்து முறுக்கு சுட்டு எடுத்தால், நெய் மணத்துடன் கூடுதலான சுவையுடன் முறுக்கு இருக்கும்.
* இரண்டு பங்கு பாசிப் பயறு, ஒரு பங்கு கடலைப் பருப்பு என்ற விகிதத்தில் அரைத்த மாவில் மைசூர் பாகு செய்தால் மைசூர் பாகு மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.
* சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப் பால் விட்டுச் செய்தால், மிகவும் சுவையாக இருக்கும்.
* சிறிதளவு சர்க்கரை தூவி வைத்தால் மிக்சர் நமத்துப் போகாமலிருக்கும்.
* போளி செய்யும்போது மேல் மாவுக்கு மைதா மாவு பிசையும் போது சிறிது பால் பவுடரும் சேர்த்துப் பிசைந்தால், போளி மிருதுவாக இருக்கும்.
* லட்டுப் பிடிக்கும்போது ஏதாவது பழ எசென்ûஸ சிறிது விட்டு லட்டு பிடித்தால், லட்டு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
* தேன் குழல், நாடா முறுக்கு, தட்டை போன்றவை நமத்துப் போகாமல் மொறுமொறுவென இருப்பதற்கு மாவைப் பிசையும்போது வெந்நீர் ஊற்றிப் பிசைய வேண்டும்.
* போளிக்கு கடலைப் பருப்பு பூரணம் செய்யும்போது, வெல்லத்துக்குப் பதில் பொடித்த சர்க்கரையைப் பயன்படுத்தினால் போளி, மெல்லியதாக, வெண்மையாக, சுவையாக இருக்கும்.
* கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போலச் செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும்.
* கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றைக் கெட்டியான பிறகு இறக்கக் கூடாது. கொஞ்சம் முன்னதாக இறக்க வேண்டும். ஆறிய பின்பு அவை சரியான பதத்துக்கு வந்துவிடும்.
* சர்க்கரைப் பாகு காய்ச்சும்போது சில துளிகள் எலுமிச்சம் பழச்சாறு விட்டால் பாகு முறுகாமல் இருக்கும்.
* சிப்ஸ், காராபூந்தி ஆகியவற்றைத் தயார் செய்யும்போது காரத்துக்கு மிளகாய்த்தூள் போடுவதற்குப் பதிலாக மிளகுத்தூள் போடலாம். காரமும் குறைவாக இருக்கும். உடலுக்கும் நல்லது.
* பர்பி, மைசூர் பாகு போன்றவற்றைத் துண்டுகள் போடும் போது சிதறி விழும் தூள்களை ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். சோமாஸ் செய்யும்போது இதையும் பூரணமாக வைத்துச் சில சோமாஸ்கள் சின்னதாகத் தயாரித்துவிடுங்கள். தனிச் சுவையுடன் இருக்கும்.
* பலகாரங்கள் செய்ய எண்ணெய் வைக்கும்போது இஞ்சி, வாழைப் பட்டையை அம்மியில் நசுக்கி, மறக்காமல் போட்டு பொரித்து எடுத்த பிறகே உபயோகிக்க வேண்டும். இதனால் பலகாரம் அதிகம் எண்ணெய்யைக் குடிக்காது. எண்ணெய்யும் பொங்கி வழியாது. எண்ணெய்ப் புகையினால் வாந்தி, தலைசுற்றல் வரவும் செய்யாது.
* மிக்சரில் கறிவேப்பிலையை அப்படியே பொரித்துப் போடுவதைவிட, கறிவேப்பிலையை நன்கு பொடியாக நறுக்கி, பின் பொரித்துக் கலந்தால் வாசனை தூக்கும்.
* ரவா கேசரி, சேமியா கேசரி, அவல் கேசரி செய்யும்போது வெள்ளரி விதை சேர்த்தால் வித்தியாசமான சுவையோடு இருக்கும்.