முகப்பு
தினமணி கதிர்

குரைத்தால் இயங்கும் வாஷிங் மெஷின்

நல்ல உடல்நிலை உள்ளவர்களுக்கே இந்த நிலை என்றால், மாற்றுத் திறனாளிகள், காக்கை வலிப்பு நோயாளிகள், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாஷிங் மெஷினைப் பயன்படுத்துவது எப்படி?

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:02 PM
பகிர்:

இப்போது வீட்டுக்கு வீடு வாஷிங் மெஷின் வந்துவிட்டது. வாஷிங் மெஷினை இயக்க படித்தவர்களே நிறையக் குழம்ப வேண்டியிருக்கிறது. நிறைய விதங்களில் துணிகளை ஊற வைக்க, துவைக்க, அலச, உலர்த்த வசதிகள் உள்ளன. எவ்வளவு வசதிகள் இருந்தாலும், ஏதோ ஒரு சில முறைகளில் மட்டுமே இப்போதும் பலர் துவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

   நல்ல உடல்நிலை உள்ளவர்களுக்கே இந்த நிலை என்றால், மாற்றுத் திறனாளிகள், காக்கை வலிப்பு நோயாளிகள், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வாஷிங் மெஷினைப் பயன்படுத்துவது எப்படி?

  என்ன செய்யலாம்? என்று தீவிரமாகச் சிந்தித்தார் ஜான் மிடில்டன். இங்கிலாந்தில் உள்ள   "லாண்டரி ஸ்பெஷலிஸ்ட் ஜேடிஎம்' என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர். அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது.

  இப்போதுள்ள வாஷிங் மெஷின்களில் நிறைய விதங்களில் துவைக்கும்படி புரோகிராம் செய்து வைத்திருப்பதை ஒரே ஒரு முறையில் மட்டும் துவைக்கும்படி மாற்றினால் என்ன?

செயலில் இறங்கினார்.

 சில மாற்றுத் திறனாளிகளுக்கு கைகளைப் பயன்படுத்த முடியாது. சத்தம் போட்டால், வாஷிங் மெஷின் இயங்கும்படி புரோகிராம் செய்தார்.

  ஆனால் அதிலும் ஒரு சிக்கல் வந்தது. சிலருக்கு வாய் பேச முடியாது. குரலில் பிரச்னை இருக்கும். அவர்கள் கத்தினாலும் பிறருக்குக் கேட்காது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த புதிய வாஷிங் மெஷின் பயன்படாதே! என்ன செய்யலாம்? மீண்டும் சிந்தனை.

  அப்போது டிவியில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தார். ஒரு நாய் மாற்றுத் திறனாளிகள் படுத்த படுக்கையை சுருட்டி  வைத்தது. துவைக்கப்பட வேண்டிய துணிகளை வாயால் கவ்வி அழுக்குத் துணிக் கூடையில் கொண்டு போய் போட்டது.

 இப்படிப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்களை வைத்தே புதிய வாஷிங் மெஷினை இயக்கினால் என்ன?

 புதிய வாஷிங் மெஷினில் சில மாற்றங்களைச் செய்தார்.

தனது வளர்ப்பு நாயையும் பழக்கப்படுத்தினார்.  நாய் தனது காலை வைத்து வாஷிங் மெஷினில் அழுத்தியவுடன் மெஷின் "ஆன்' ஆகிவிடும். வாஷிங் மெஷின் கதவில் கட்டப்பட்டுள்ள கயிறை வாயால் பிடித்து இழுத்தவுடன் கதவு திறந்து கொள்ளும். அழுக்குத் துணிகளை வாயால் கவ்வி, மெஷினுக்குள் போட்டு, கதவை மூடி ஒரு குரை குரைத்தால் போதும். வாஷிங் மெஷின் இயங்க ஆரம்பித்துவிடும். துணிகளைத் துவைப்பதற்குத் தேவையான வாஷிங் பவுடர் போன்றவை முதலிலேயே நிரப்பி வைக்கப்பட்டிருப்பதால், அவற்றை மெஷினுக்குள் போட வேண்டிய அவசியமில்லை.

துணிகள் துவைக்கப்பட்டு, உலர்த்தப்பட்டதும் வாஷிங் மெஷின் தானாகவே ஆஃப் ஆகிவிடும். 

இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு நிறைய வரவேற்பு. ஜான் மிடில்டன் இப்போது நடப்பதில்லை. பூமியிலிருந்து அரை அடி உயரத்தில் மிதந்து கொண்டு செல்கிறார்.

நமது நாட்டில் இந்த வாஷிங் மெஷின்களைப் பயன்படுத்துவதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

நமது தெரு நாய்கள் கத்துகிற கத்தில், அந்த ஒலியைக் கேட்டு இந்த வாஷிங் மெஷின்கள், குழம்பி... செயலில்லாமல் போனாலும் போய்விடக் கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →