முகப்பு
தினமணி கதிர்

எத்தனை முகங்கள் இவருக்கு!

""என்னங்க இன்னும் கொஞ்சம் டீ வேணுமா?'' என்ற குரல் சமையலறையிலிருந்து வந்ததையும் பொருட்படுத்தாமல் எழுதிக்கொண்டிருக்கிறார் அவர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:59 AM
பகிர்:

""என்னங்க இன்னும் கொஞ்சம் டீ வேணுமா?'' என்ற குரல் சமையலறையிலிருந்து வந்ததையும் பொருட்படுத்தாமல் எழுதிக்கொண்டிருக்கிறார் அவர்.
 அவரது மனைவியோ, ""நாள் முழுவதும் வியர்வை சிந்த உழைக்கிறார். அதனால் அவருக்கு இப்படி உபசாரம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கிறது'' என்கிறார்.
 அந்த மனிதரின் பெயர் மனோரஞ்சன் பியாபாரி. மேற்கு வங்காளத்தின் அரசுப் பள்ளி ஒன்றில் மதிய உணவு சமையற்கூடத்தில் வேலை செய்பவர். வங்க மக்களால் கொண்டாடப்படும் தலித் எழுத்தாளர். இதுவரை பத்து நூல்களும் நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். மேற்கு வங்காள அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதான பஸ்ஷிம்பங்க பங்ளா அகாதெமி விருது பெற்றவர்.
 ஏரியா ரவுடியாக வாழ்க்கையைத் துவங்கியவர். ("1970களில் எங்க ஏரியாவுல மிகவும் பிரபலமான ரவுடியாக இருந்தேன்') பல முறை ஜெயிலுக்குப் போனவர். அந்த வாழ்க்கையில் அலுப்பு ஏற்பட்டு ரிக்ஷாக்காரராக மாறியவர். 1997-ஆம் ஆண்டுக்குப் பிறகு சமையற்காரராகவும் மாறிப் போனார்.
 மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். 1967-களில் நக்சல்பாரிகள் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் சிலிகுரி என்ற ஊருக்கு வந்தார். அங்கே பலவிதமான சில்லறை வேலைகளைப் பார்த்து மனம் கசந்து போய் மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். அங்கு தனது பழைய நண்பர்களிடம் நக்ஸல்பாரிகளுடன் சேர்ந்து மறைந்து வாழ்ந்ததாகச் சொல்லிக் கொள்வார். ஆனால் உண்மையில் அப்படி ஏதும் நடக்கவில்லை.
 ஜெயிலில் இருக்கும்போது, சக கைதி ஒருவர்தான் இவருக்கு வங்காள மொழி எழுத்துகளை அறிமுகப்படுத்தினார். அப்படித்தான் எழுதக் கற்றுக் கொண்டார்.
 ரிக்ஷா ஓட்டிய காலத்தில் பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும் அனுபவம் கிட்டியது. "அந்த அனுபவங்கள்தான் எழுதத் தூண்டியது' என்கிறார் மனிதர்.
 வங்காளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான மஹாஸ்வேதா தேவிதான் இவரது மானசீக குரு. அவரது புத்தகங்களை ஆவலுடன் படித்துத்தான் தனது எழுத்துத் திறமையை வளர்த்துக் கொண்டார்.
 ஒருமுறை ஸ்வேதா தேவியின் புத்தகம் ஒன்றிலிருந்த ஒரு சொல்லுக்கு இவருக்கு முழுமையான அர்த்தம் புரியவில்லை. பலரிடம் கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை.
 தற்செயலாக ஸ்வேதா தேவியே ஒருமுறை இவரது ரிக்ஷாவில் பயணம் செய்து அந்தச் சொல்லுக்கு அர்த்தம் கூறியது மறக்க முடியாத அனுபவமாகிப் போனது.
 தனது வாழ்க்கை அனுபவங்களைத் தனது சுய சரிதையாகவும் எழுதியிருக்கிறார்.
 அதற்குக் கிடைத்த வரவேற்புதான் இவரை ஒரு சிறந்த எழுத்தாளர் என்று உலகுக்குக் காட்டியதுடன் "தலித் எழுத்தாளர்' என்ற பெயரையும் இவருக்குப் பெற்றுத் தந்தது.
 ஆனால் உண்மையில் இவருக்கு தலித் எழுத்தாளர் என்ற அடையாளம் கிடைத்ததில் மனவருத்தம்தான். ஒரு நல்ல எழுத்தாளர் என்று பிறர் சொல்வதையே விரும்பும் இவர், நூலகம் ஒன்றில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார். அப்படிக் கிடைத்தால் நிறையப் புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கும் என்று ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.