சூப்பர் பக்கோடா சமையல் டிப்ஸ்...
பக்கோடா தயாரிக்கும்போது, ஓர் அகலமான பேஷனில் நெய், சமையல் சோடா சேர்த்து விரல்களினால் நன்றாக நுரைக்கத் தேய்த்து
* பக்கோடா தயாரிக்கும்போது, ஓர் அகலமான பேஷனில் நெய், சமையல் சோடா சேர்த்து விரல்களினால் நன்றாக நுரைக்கத் தேய்த்து அதன் பின் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கலந்து எண்ணெய்யில் உதிர்த்துப் போட்டால் பக்கோடா கரகரப்பாக இருக்கும்.
* சிவக்க வறுத்த கோதுமை மாவில் ஒரு அளவுக்கு முக்கால் அளவு வெல்லம், இரண்டு அளவு தண்ணீர் வைக்கவும். வெல்லத்தைக் கரையவிட்டு ஒரு கொதி வந்ததும் அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மாவைக் கிளறி உருண்டை அல்லது தட்டையாகத் தட்டி இட்லித் தட்டில் வேகவைத்து இறக்கவும். சுவையான டிபன் ரெடி.
* பொரியல் செய்ய காய் (எந்தக் காயாக இருந்தாலும்) குறைவாக இருந்தால், பயத்தம்பருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து காயோடு போட்டு வதக்கினால் பொரியல் சூப்பர் சுவையாக இருக்கும். சத்தும் கூடும். காய் அல்லது பொரியல் அளவும் கூடுதலாக இருக்கும்.
* எண்ணெய் குடிக்காத சுகியன் வேண்டுமா? நான் ஸ்டிக் தவாவில் சிறிது எண்ணெய்விட்டு சுகியனைப் போட்டு மூடி "சிம்'மில் வையுங்கள். வெந்ததும் திருப்பிப் போட்டு எடுங்கள். சுவையில் சிறிதும் குறையாத எண்ணெய்யில்லாத சுகியன் ரெடி.
* ஒரு கிலோ பச்சரிசியுடன் 100 கிராம் உளுத்தம் பருப்பு சேர்த்து, சிவக்க வறுத்து அதனுடன் 100 கிராம் பொட்டுக் கடலையையும் சேர்த்து மிஷினில் அரைத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது சீரகம் போட்டு தேன் குழல் செய்வதற்கு வசதியாக இருக்கும். இந்த மாவில் செய்தால் தேன் குழல் கரகரப்பாகவும் இருக்கும்.
* ரவா, மைதா, சர்க்கரை இம்மூன்றையும் தலா ஒரு கப் அளவு எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாகக் கரைத்து குழிக்கரண்டியில் எடுத்து காய்ந்த எண்ணெய்யில் போட்டுச் சுட்டெடுத்தால் சுவையான, வித்தியாசமான ரவைப் பணியாரம் தயார்.
* காராபூந்தி மாவில் காரம் மிகுதியாகி விட்டதா? மாவுடன் உப்பு, சிறிது எலுமிச்சைச் சாறு ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு, அரிசி மாவு சேர்த்தால் காரம் குறையும்.
* பட்சணங்கள் செய்வதற்கு பெரும்பாலும் எல்லோரும் உலர் அரிசி மாவைத்தான் உபயோகப்படுத்துவார்கள். ஆனால், கார பட்சணங்களுக்கு கழுவி உலர்த்திப் பதப்படுத்தப்பட்ட அரிசியைப் பயன்படுத்தினால் பட்சணங்கள் கரகரப்பாக இருப்பதோடு எண்ணெயும் இழுக்காது.
* காரட்டைச் சமைக்கும்போது அதை வேகவைக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை சர்க்கரை போடுவது நல்லது. காரட்டிற்கு தனி மணத்தை இந்தச் சர்க்கரை தரும்.
* உருளைக் கிழங்கை அரை வேக்காடாக வேக வைத்து நன்கு வடித்தெடுத்து பிறகு ரோஸ்ட் கறி செய்தால் எண்ணெய் அதிகம் செலவாகாது. மிகவும் ருசியாகவும் இருக்கும்.