முகப்பு
தினமணி கதிர்

மன உறுதிக்கு மறு பெயர் மகேசுவரி!

""நான் எனக்காகத்தான் வாழறேன்.  சமூகத்துக்காகவோ, இல்ல அது நான் எப்படி வாழணும்னு சொல்லுதோ, அப்படி வாழறதுக்காக இல்லே'' -

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:06 AM
பகிர்:

""நான் எனக்காகத்தான் வாழறேன்.  சமூகத்துக்காகவோ, இல்ல அது நான் எப்படி வாழணும்னு சொல்லுதோ, அப்படி வாழறதுக்காக இல்லே'' -

வார்த்தைகள் ஒவ்வொன்றும் உறுதியாக வெளிப்படுகின்றன, 35 வயது மகேசுவரியிடமிருந்து.  வேலூர் வில்லினியாபுரத்தில் உள்ள ஒரு மாட்ச் பாக்டரியில், அவர் வத்திக் குச்சிகளைப் பெட்டியில் அடைக்கும் வேகத்தைப் படமெடுத்துவிட முடியாது.  அத்தனை வேகம். 

திருமணம் நடக்கும்போது மகேசுவரிக்குப் பதினான்கு வயது.  கணவனின் கிராமம், தனது பெற்றோர் இருந்த கிராமத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தூரம் தள்ளியிருந்தது. 

""ஆரம்பத்துல இருந்தே அவரு மத்த பொண்ணுங்களை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திட்டுத்தான் இருந்தாரு.   முதல்ல எல்லாம் ஆம்பிள்ளைங்களுக்கு இது சகஜம்னுதான் நினைச்சேன்.  அப்போ எனக்கு அறியாத வயசு.  அப்புறம்தான், ஒருத்தியக் கல்யாணம் கட்டிக்கிட்டப்புறம் இன்னொருத்திய வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு கும்மாளம் போடறது சரியில்லே, தப்புன்னு ஒறச்சுது'' என்கிறாள் மகேசுவரி.

தாலி கட்டிய கணவனை அப்படி... நேருக்கு நேர் எதிர்கொள்வது என்பது சாதாரண விஷயமல்ல.  கிராமப்புறம் ஆகட்டும், நகர்ப்புறம் ஆகட்டும், இந்த மாதிரி கணவர்களிடம் சிக்கிக் கொண்டு திண்டாடுவது ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

""அவர் என்னை அடிப்பாரு.  சில சமயம் நாள் கணக்குல வீட்டுக்கு வராமயே, குடிச்சுட்டு எங்கனா வெளியவே இருந்துருவாரு'' என்கிறாள்.

சுமார் பதினெட்டு வருடங்கள் மகேசுவரி இந்த அடி-உதைகளை எல்லாம் வாயைத் திறக்காமல் வாங்கிக் கொண்டுதான் இருந்தார்.  அப்போதெல்லாம் கூலி வேலைதான் செய்து வந்தாள்.   

""இது வசதியா இருந்தது.  என்னோட செலவுக்கு நான் சம்பாதிச்ச பணமே எனக்கு உதவிச்சு. என்னோட அம்மாவும் அப்பாவும் ரொம்ப ஏழைங்க.  அதனால என்னால படிக்க முடியாம, பள்ளிக்கூடத்துல இருந்து நின்னுக்கிட வேண்டியதாயிடுச்சு.  அப்பத்தான் எனக்குக் கல்யாணம் கட்டினாங்க''

""அப்படீன்னா உன்னோட பசங்க இப்போ பள்ளிக்கூடத்துக்குப் போறாங்களா?'' என்ற கேள்விக்கு, ""எனக்குக் கொழந்தைங்களே இல்லே.  என்னோட கருப்பை ரொம்பச் சின்னதாயிருக்காம்.  அதனால் எனக்குக் கொழந்தைங்களே பொறக்காதுன்னுட்டாங்க டாக்டருங்க''

இதை மகேசுவரி சொல்லும்போது எந்த வெறுப்பும், காய்ப்பும் இல்லை.  இத்தனைக்கும் அவளைச் சுற்றி அமர்ந்திருக்கும் அத்தனை பேரும் குழந்தை குட்டி பெற்ற பெண்கள். 

""உங்களுக்குக் குழந்தைங்கன்னா பிடிக்குமா, மகேசுவரி?''

""என்ன இப்பிடிக் கேக்கறீங்க?  எந்தப் பொண்ணு குழந்தைங்க வேண்டாம்னு சொல்லும்?  ஆனா வசதியா வாழறதுக்கு வருமானம் இல்லாம, ஒரு சாதாரண குடும்ப அமைப்பு இல்லாம, குழந்தைங்களைப் பெத்து இந்த உலகத்துல அலய உட்டுடறது பெரிய பாவம்.   நல்ல காலம், என்னால புள்ள பொற முடியலே''

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன் கிராமத்திலிருந்து தன்னை விட்டுக் கணவர் பிரிந்து சென்ற பிறகு, தன் பெற்றோருடன் தன் சொந்த கிராமத்துக்கே வந்துவிட்டாள் மகேசுவரி. 

""வயசாயிடுச்சுன்னா என்ன பண்ணுவே?'' என்ற கேள்வியை எழுப்பிய போது, பதிலடி வருகிறது மகேசுவரியிடமிருந்து:

""இப்ப நான் சம்பாதிக்கலே?  நான் தொடர்ந்து சம்பாதிச்சுக்கிட்டே இருப்பேன். தெனமும் கொஞ்சம் சேமிச்சு வைப்பேன். என் கடேசிக் காலத்துக்கு. என்னைப் பாத்துக்க எனக்குத் தெரியும்''

இந்த பதிலைக் கேட்டு, மகேசுவரியைச் சுற்றியிருந்த அத்தனை பெண்களும் பலமாகக் கைதட்டி ஆரவாரித்தார்கள்.

இந்தியாவிலுள்ள ஏழைகளின் பிரதிநிதியாக இருக்கும் மகேசுவரியின் கதை, பெண்களை அலைக்கழிப்பதை, அவர்களின் இளமை விவாகத்தை, கணவனின் குடியை, வீட்டுக்குள் அவர்கள் அடிபடும் துன்பத்தை, முறையான கல்வி பெற முடியாததை எல்லாம் துடைத்து எறிந்து விடுகிற தைரியத்தை வெளியிடுகிற மாதிரி தோன்றுகிறது.   வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும் என்ற நம்பிக்கையை மகேசுவரி வெளிப்படுத்துகிறாள்.

""யாருக்குத் தெரியுமுங்க?'' என்று தூரத்தில் வெறிச்சிட்ட பார்வை பார்க்கிறாள் மகேசுவரி.  ""ஒரு நாள் யாராச்சும் பொறுப்போட நடந்துக்கற, குடும்பத்த வச்சுக் காப்பாத்தற ஆளைப் பார்ப்பேனோ, என்னவோ?'' 

(தகவல் உதவி: க்ராஸ்ரூட்ஸ், பிப்ரவரி 2014)

முழு கட்டுரையைப் படிக்க →