முகப்பு
தினமணி கதிர்

காட்டின் மனிதர்!

மும்பை அருகே  உள்ளது முலண்ட்.  மகாராஷ்டிர மாநிலத்தின் மலையேறும் வீரர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

Updated On : 24 ஆகஸ்ட், 2014 at 10:14 AM
பகிர்:

மும்பை அருகே  உள்ளது முலண்ட்.  மகாராஷ்டிர மாநிலத்தின் மலையேறும் வீரர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. முன் வரிசையில் 50 வயது மதிக்கத்தக்க கிராமத்து ஆள் ஒருவர் உட்கார்ந்திருக்கிறார். "மரங்களின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு' பற்றி பேச வருமாறு மேடையில் அழைக்கிறார்கள். அந்த கிராமத்து ஆள் மேடைக்கு ஏறிச் சென்று  பேச ஆரம்பிக்கிறார். கூட்டம் திகைத்துப் போய் பார்க்கிறது. அவருடைய தோற்றத்துக்கும் பேச்சுக்கும் தொடர்பில்லையே என்று வியந்து போகிறது.

அவர் ஜாதவ் பெயாங்.  வெறும் பத்தாம் வகுப்பு படித்தவர்.

ஜாதவ் பெயாங், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். பிரம்மபுத்திரா நதியில் உள்ள தீவான மஜுலியில் உள்ள சிறிய கிராமத்தில் அவருடைய குடிசை உள்ளது.

Advertisement

35 ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் தீவில் 1200 ஏக்கர் நிலம் வறண்டு கிடந்தது. இப்போது அது அடர்ந்த காடு. காட்டில் வாழும் புலிகள், யானைகள், மான்கள், முயல்கள், குரங்குகள், கழுகுகள் எல்லாம் அங்கே உள்ளன.

வறண்ட நிலம் காடாக மாறியதற்குக் காரணம் ஜாதவ் பெயாங். அவர் மரங்களை நட்டு, வளர்த்து, தினம்தோறும் தன் உயிராக அதைப் பராமரித்து, இன்று காடாக அது மாறிவிட்டது.

மரங்களை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஜாதவுக்கு ஏன் ஏற்பட்டது?

""1979 இன் கோடைக்காலம். அசாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மழையில்லை. கடும் வெப்பம். கிராமத்தில் இருந்த நாய்கள் வெப்பம் தாங்காமல் பிரம்மபுத்திரா நதியில் போய் விழுந்தன. நூற்றுக்கணக்கான பாம்புகள் செத்துக் கிடந்தன. அப்போது எனக்கு வயது 17. இப்படி வெயில் கடுமையாகத் தாக்காமல் இருக்க மரங்களை வளர்க்க வேண்டும் என்று எங்கள் ஊர் பெரியவர்கள் சொன்னார்கள்.

அதேபோல பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் நதிக்கரையோரங்களில் பல பகுதிகள் ஆற்றுக்குள் போய்விடும். அந்த அளவுக்கு மண் அரிப்பு. பல லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து வேறு இடத்துக்குப் பிழைக்கப் போய்விடுவார்கள். இதற்குக் காரணம், நதிக்கரையோரத்தில் மரங்கள் இல்லாதது.

கோடைக் காலத்திலும், மழைக்காலத்திலும் மரம் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த நான், வனத்துறையினரைச் சந்தித்து மரம் வளர்க்க உதவி செய்ய  வேண்டும் என்று கேட்டேன். மூங்கில் நாற்றுகளைக் கொடுத்தார்கள். அதை நட்டு வளர்க்க ஆரம்பித்தேன். அப்புறம் பலவிதமான மரங்களை வளர்க்க ஆரம்பித்தேன். அது இப்படி பெரும் காடாகும் என்று நான் நினைக்கவில்லை'' என்கிறார் ஜாதவ்.

காடுகளை வளர்த்தால் சாப்பாட்டுக்கு?

நிறைய மாடுகளை வளர்க்கிறார். பால் கறந்து பிரம்மபுத்திராவின் மறுகரையில் உள்ள ஊர்களில் விற்கிறார்.

காடுகளை வளர்த்ததால் வன விலங்கள் காட்டுக்குள்  வந்துவிட்டன. 2002 இல் அவர் வீட்டை யானைகள் தாக்கி அழித்துவிட்டன. அப்போதிருந்து அவர் தனது மனைவி, இரு குழந்தைகளுடன் வேறு ஊருக்குச் சென்று குடியிருக்க வேண்டியதாயிற்று. இதற்காக யானைகளின் மீது ஜாதவுக்கு எந்தக் கோபமும் இல்லை.

ஜாதவ் இப்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் போராளி. மக்களிடம்  சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லி வருகிறார்.

ஜாதவ்வை பற்றி நிறைய ஆவணப்படங்கள் எடுத்து இருக்கிறார்கள். ஆனால் அதிலெல்லாம் பெரிய அளவுக்கு ஆர்வமில்லை அவருக்கு.

""அந்தக் காலத்தில் இருந்து இந்தக் காலம் வரை என்னென்ன மாறுதல்கள் சுற்றுச்சூழலில் நிகழ்ந்து வருகின்றன என்பது மக்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழல் ஓர் கட்டாய அறிவியல் பாடமாக பள்ளி மாணவர்களுக்கு வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வளர்ந்து வரும்போது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பார்கள்'' என்கிறார் தீவிரமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.