"திருமணத்தால் நடிப்புக்குப் பாதிப்பில்லை"
ஒருகாலத்தில் ராசியில்லாத நடிகை என்று கருதப்பட்டவர், புகழுச்சியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு மீண்டும் நடிக்க வந்ததைப்
ஒருகாலத்தில் ராசியில்லாத நடிகை என்று கருதப்பட்டவர், புகழுச்சியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு மீண்டும் நடிக்க வந்ததைப் பற்றி வித்யாபாலன் என்ன சொல்கிறார்?
பதினாறாவது வயதில் "ஹம் பாஞ்ச்' என்ற டி.வி. தொடரின் மூலம் அறிமுகமான வித்யாபாலன், திரையுலகில் நுழைய வேண்டுமென்ற ஆவலில் தென்னிந்தியாவுக்கு வந்தபோது எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. வாய்ப்பு கிடைத்த படங்களும் தொடங்கிய வேகத்திலேயே முடங்கிவிட்டதால் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டது.
கேரளாவில் பிறந்து மும்பையில் வளர்ந்த வித்யாபாலனுக்கு கௌதம் ஹல்தாரின் பெங்காலி திரைப்படமான "பலோ தெகோ' (2003)வில் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் அவரது அயராத முயற்சியால் "பர்னீதா' (2005)வில் கிடைத்த வாய்ப்பினால் தொடர்ந்து ""லகே ரஹோ முன்னாபாய், ஹே பேபி, பூல் புலாயா'' போன்ற படங்களில் நடித்ததால் வெற்றி கிடைத்ததே தவிர, ரசிகர்களின் ரசிப்புத்தன்மைக்கேற்ப வித்தியாசமாக நடித்ததற்கான பாராட்டைப் பெற முடியவில்லை.
2009-ஆம் ஆண்டின் இறுதியில் அமிதாப் பச்சனுடன் நடித்த ""பா'', 2010-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நஸ்ருதீன் ஷாவுடன் நடித்த "இஷ்க்யா' போன்ற படங்கள் மூலமாகத்தான் இவரது நடிப்பாற்றலை ரசிகர்களாலும் பத்திரிகைகளாலும் உணர முடிந்தது. பெரிய நடிகர்களுக்குச் சமமாக இவர் நடித்தது நட்சத்திர அந்தஸ்த்தை தேடித் தந்தது. ஓராண்டிற்குப் பின்னர் வெளிவந்த இவரது "நோ ஒன் கில்ட் ஜெஸிகா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டில் வெளியான "தி டர்ட்டி பிக்சர்' சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுத் தந்தது. கதாநாயகனே இல்லாத "கஹாணி'யில் இன்னொரு பெண் நடிகையுடன் நடித்தது தொடர்ந்து இவருக்கு விருதுகளை வாரி வழங்கியது.
2012-ஆம் ஆண்டு திரையுலகில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் இவருக்குத் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது. ""யூடிவி மோஷன் பிக்சர்ûஸச் சேர்ந்த சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துகொண்டது என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்'' என்று வித்யாபாலன் கூறினாலும் தொடர்ந்து இவர் சினிமாவில் நடிக்க வந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகை என்று கருதப்பட்டவர், புகழுச்சியில் இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு மீண்டும் நடிக்க வந்ததைப் பற்றி வித்யாபாலன் என்ன சொல்கிறார்? என்னுடைய கனவுப்படி இப்போது நான் நடிகையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இதை அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். இறக்கத்தில் இருந்தபோதுகூட நான் மனம் தளர்ந்ததில்லை. "நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்ற அழிவற்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலான சக்தியை நான் நம்புகிறேன். என்னுடைய குடும்பத்தினர் எனக்களித்த ஆதரவு மறக்க முடியாததாகும். நான் நடித்த படங்கள் எனக்கு மட்டுமே வெற்றியைத் தேடித் தந்ததாக நான் கருதவில்லை. அனைத்து நடிகைகளுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன்'' என்கிறார்.
தனிப்பட்ட முறையில் எப்போதுமே இவர் தன்னை மையப்படுத்தி கதைகளை அமைக்கும்படி வற்புறுத்துவதில்லையாம். ""என் நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் இருந்தால் போதும். அதேசமயம் நல்ல கேரக்டர்களைத் தேடுவதில் எனக்கு ஆர்வம் அதிகம். "நடிகை என்ற உனது பயமற்ற தன்மை எனக்குப் பிடித்திருக்கிறது. அது என்னுடைய கற்பனையை விரிவாக்குகிறது' என்று கூறும் ராஜ்குமார் குப்தா போன்ற இயக்குநர்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை இழக்க நான் விரும்பவில்லை'' என்று கூறும் வித்யாபாலன், ""கன்சக்கர்படத்தில் பஞ்சாபி குடும்பப் பெண்ணாக குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள் குடும்பத்தை நடத்தும் பாத்திரத்தில் நடித்தபோது, பழைய ஃபேஷன் பத்திரிகைகளை வாங்கி வந்து மலிவான துணிகளில் காஸ்ட்யூம்களை உருவாக்கி அணிந்து ரொட்டியைக் கத்தி, முள் கரண்டியால் சாப்பிட்டு ராஜ்குமார் குப்தாவின் கதாநாயகியாகவே நடித்தது புதுமையான அனுபவம். கேரக்டர்களை உணர்ந்து நடிக்க அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நடிப்பு என்பது உணர்வுகளைப் பிரதிபலிப்பது என்பதால் ஆழமான நம்பிக்கை வைத்து நடிக்கும்போதுதான் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதை வெளிப்படுத்த முடியும்'' என்கிறார் வித்யாபாலன்.
""டர்ட்டி பிக்சர்'' படத்தில் இம்ரான் ஆஸ்மியுடன் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவே மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டுமென்று ரசிகர்கள் கூறும்போது இருவருக்குமிடையே இருந்த கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவே கருதுகிறாராம் வித்யாபாலன்.
2006-ஆம் ஆண்டில் "மல்லிகா ஷெராவத்' நடித்து வெளியான "பியார்கே சைட் எஃபக்ட்ஸ்' படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறது ஷாகி கே சைட் எஃபக்ட்ஸ், இஸ்க்யா, கஹானி 2 போன்ற படங்கள். இவற்றில் முதலில் நடித்த ஹீரோக்களே தொடர்ந்து நடித்தாலும் இஸ்க்யாவில் மட்டும் வித்யாபாலன் மாற்றப்பட்டு மற்ற இரண்டு படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.
இன்றைய சூழ்நிலைக்கேற்ப ரசிகர்கள் உடனடியாக அடையாளம் காண சில கதைகளில் மாற்றம் செய்வது வரவேற்கத்தக்கது என்று கூறும் வித்யாபாலனின் திருமண வாழ்க்கை எப்படியிருக்கிறது?
""என்னுடைய திருமணம் தொழிலைப் பொறுத்தவரை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. பெற்றோரைப் பிரிந்து சித்தார்த்துடன் வாழ்க்கை நடத்துவது புதிய அனுபவமாக இருக்கிறது. ஏனெனில் எதுவொன்றையும் என் அம்மாவிடம் விட்டுவிடுவேன். இப்போது வீட்டு வேலைகள் அனைத்தையும் நானே ஏற்றுச் செய்கிறேன். வேலைக்காரர்கள் இருந்தாலும் என்னுடைய அறையை மட்டுமன்றி வீடு முழுவதையும் நானே பராமரிக்கிறேன். தினந்தோறும் சமையல் மெனு உள்பட என்ன செய்ய வேண்டுமென்பதை முன்கூட்டியே திட்டமிடுவது எனக்குப் பிடித்திருக்கிறது. ஏதாவது சந்தேகம் வந்தால் அம்மாவுக்கு போன் செய்து கேட்பேன்.
திருமணம் முடிந்து ஹனிமூன் சென்று வந்த கையோடு இரண்டு வாரத்திற்குள் சித்தார்த் வேலைக்குச் சென்றுவிட்டார். அவரவர் நேரத்தை அவரவரே எடுத்துக் கொள்வதால் இருவருக்குமே நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலும் ஒன்றாக இருப்போம்.
திருமணத்திற்கு முன்பே நான் நடித்த சில படங்களின் உலக உரிமையை யூடிவி பெற்றிருந்தது எதிர்பாராத சம்பவமாகும். தற்போது நடிக்கும் படங்களின் உரிமையைக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏதுமில்லை என்றாலும் இருவரும் இணைந்து பணிபுரிய வேண்டிய நிலை ஏற்பட்டால் நிச்சயம் ஏற்றுக் கொள்வோம்.
தனித்தனியாக செய்ய வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. நான் நடித்த படங்களை யூடிவி நிறுவனம் வாங்க வேண்டியிருந்தால் சித்தார்த்தின் பார்ட்னர் ரோனி ஸ்குருவாலா அதன் புரமோஷனைக் கவனித்துக் கொள்வார். இல்லையெனில் அந்தப் பொறுப்பை சித்தார்த் ஏற்க வேண்டிவரும்'' என்கிறார் வித்யாபாலன்.