நலம் தரும்...
வேப்பிலை, மாவிலை இரண்டையும் சம அளவெடுத்து காய வைத்துப் பொடிக்கவும். இந்தப் பொடியை பல் தேய்க்கும்
வேப்பிலை, மாவிலை இரண்டையும் சம அளவெடுத்து காய வைத்துப் பொடிக்கவும். இந்தப் பொடியை பல் தேய்க்கும் பொடியாகப் பயன்படுத்தலாம். ஈறில் ரத்தம் வருதல், பல் வலி, துர்நாற்றம் ஆகியவற்றைக் குணமாக்கும்.
பார்லி தண்ணீரில் பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டைப் போட்டு ஒரு துளி நல்லெண்ணெய் சேர்த்துக் குடித்து வர நீண்ட நாள் காய்ச்சல், உடல் நடுக்கம், தலைபாரம் இவையனைத்தும் ஓடி விடும்.
வெந்த நெல்லிக்காயை வெல்லப்பாகில் ஊற வைத்து எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு வாரம் வைக்கவும். ஊறிய காயை தினமும் ஒன்றுவீதம் ஒரு மாதம் சாப்பிட்டால் எலும்புகள் நன்கு வலுவடையும்.
கற்றாழைச் சாறுடன் வெண்ணெய் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலச்சூடு, அதனால் போகும் ரத்தம் போன்ற பிரச்னைகள் வரவே வராது.
பச்சைப் பயறு, பயத்தம் பருப்பு இரண்டும் சேர்த்த மாவுக்கஞ்சியை மோரில் அல்லது பாலுடன் சேர்த்துக் குடித்தால் மேனி எழில் தரும். சருமமும் பளபளப்பாக இருக்கும்.
ஓமம், கிராம்பு சம அளவு பொடி செய்து, சாப்பிடுவதற்கு முன் சாப்பிட, வயிறு உப்புசம், கடமுடா உருட்டல் இவை அனைத்தும் அடங்கி, வயிற்றுக் கோளாறுகள் இல்லாமல் இருக்கும்.
சாதம் கொதிக்கும்போது வரும் தெளிவான முதல் கஞ்சியில் பெருங்காயம், கிராம்புப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள், இனம் புரியாத வலிகள், ஒதுங்கியுள்ள ரத்தக்கட்டு ஆகியவை வெளியேறி உடம்பு கலகலப்பாய் இருக்கும்.
தூதுவளைப் பழங்கள் பத்து எடுத்து நூறு கிராம் தேனில் ஊற வைத்து 48 நாட்கள் வெயிலில் வைத்து எடுத்துக் கொள்ளவும். இதை தினமும் தொடர்ந்து 11 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் ஈரங்கோர்த்து அதனால் வரும் மார்ச்சளியைக் கட்டுப்படுத்தி சுவாசக் கோளாறுகளைத் தடுக்கலாம்.
ஒல்லி உடல்வாகு கொண்டவர்கள் சம்பா கோதுமையை ஊற வைத்து அரைத்துப் பாலெடுத்து அதில் வெல்லம் சேர்த்துப் பருகினால் மளமளவென உடலில் சதை போடும்.