எனது மனைவிக்கு வயது 72. எப்பொழுதும் தலையில் பேன் ஊர்வது போலவும் தலையில் நரம்பு இழுப்பது போலவும் உணர்வு உள்ளதாக சொல்கிறாள். ஆனால் அவளது தலையில் ஈரோ பேனோ இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் இடது பக்கக் கண்ணிலிருந்து கண்ணீர் வருகிறது. இரு கண்களிலும் கண் புரை ஆபரேஷன் ஆகி சில வருடங்களாகி விட்டன. இரண்டு தோள்பட்டை, இடுப்பு, காலில் மூட்டு போன்ற பகுதிகளில் வலியும் உள்ளதால் அவஸ்தைப் படுகிறாள். இவை குணமாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
ட.ஏ.உதயமூர்த்தி, கோவை.
தலையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வாயுவின் சீற்றம் நரம்பு இழுப்பிற்குக் காரணமாகலாம். அதனால் தலையில் பேன் ஊறுவது போலத் தோன்றும். கண்ணிலுள்ள நீரின் அழுத்தம் அதிகரிக்கும்பொழுது அது கண்ணீராக வெளியேறும். மூட்டுகளில் உள்ள ஸ்லேஷகம் எனும் கபத்தின் தேய்மானம் வலியை ஏற்படுத்தும். தலையில் நான்கு வகையான சிகிச்சை முறைகளால் அங்குள்ள நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
அப்யங்கம் எனப்படும் தலையில் மூலிகைத் தைலத்தை நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் ஊறிய பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது எனும் வைத்திய முறை நல்லது. அதற்கடுத்ததாக úஸகம் எனப்படும் மூலிகைத் தைலத்தை தலையில் தாரையாக விடுவது எனும் சிகிச்சை முறை அதை விடச் சற்றே சிறந்தது. இந்த இரண்டு வைத்தியமுறையை விட பிசு எனப்படும் மூலிகைத் தைலத்தை தலையில் வெதுவெதுப்பாக ஊறவிடும் முறை மேலும் சிறந்தது. இவை அனைத்தையும் விட சிரோவஸ்தி எனப்படும் ஒரு ரெக்ஸின் துணியைப் பரிவட்டமாகக் கட்டி நடுவில் குழியுடன் வைத்து அதன் உட்புறத்தில் தலைப்பகுதி நன்றாக மூழ்குமளவிற்கு மூலிகைத் தைலத்தை வெதுவெதுப்பாக ஊற்றி சுமார் முக்கால் மணி நேரம் வைத்திருக்கும் முறை மிக மிகச் சிறந்தது. ஆனால் இந்த சிகிச்சை முறையின் பொழுது தலைமுடியை முழுவதுமாக அகற்றவேண்டி வரும். சற்றே கவனத்துடன் இந்த சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் ஓர் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் மருத்துவரின் நேரடி கண்காணிப்பில் செய்து கொள்வது நல்லது.
இதன் மூலம் தலையில் ஏற்பட்டுள்ள வாயுவின் சீற்றத்தை நன்றாகக் கட்டுப்படுத்தலாம். கண்ணீர் வருவதை குறைக்க முடியும். எண்ணெயினுடைய வீர்யம் முதுகுத் தண்டுவடம் வழியாக கீழ் இறங்குவதால் மூட்டுகளுக்குத் தேவையான வழுவழுப்பும் கிடைக்கும். எலும்புகளின் தேய்மானத்தை இந்த சிகிச்சையின் மூலம் குறைக்க இயலும். உடலிலுள்ள சீதோஷ்ண நிலை, வன்மை ஆகியவற்றைப் பொறுத்து மூலிகைத் தைலம் நபருக்கு நபர் மாறுபடலாம்.
மூக்கில் எண்ணெய் விடும் சிகிச்சை முறையாலும் இந்த பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம். க்ஷீரபலா101, கார்பாசாஸ்த்யாதி தைலம் போன்றவற்றில் ஒன்றை நான்கு சொட்டுகள் மூக்கினுள் விட்டு உறிஞ்சும் சிகிச்சையால் நரம்புமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியைப் போக்கமுடியும்.
தசமூலரஸôயனம் எனும் லேகியமருந்தை ஒன்றிரண்டு டீ ஸ்பூன் அதாவது சுமார் 10 கிராம் வரை காலை இரவு உணவிற்குப் பிறகு சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிடுவதால் தலையிலுள்ள நரம்பு மண்டலம் வலுப்படும். அங்கு ஏற்பட்டுள்ள நரம்பு இழுப்பு ஊறுவது போன்ற தன்மை போன்றவையும் குணமாகக் கூடும். சுமார் 48 நாட்கள் வரை இந்த மருந்தைச் சாப்பிடலாம். சர்க்கரை உபாதை இருக்கும் பட்சத்தில் இந்த மருந்தைத் தவிர்த்து வேறு சில ஆயுர்வேத மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.
தலைக்கு குளிர்ந்த நீரை விட்டுக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் இரவில் படுத்து உறங்குவதைத் தவிர்ப்பது நலம். வாயுவை அதிகரிக்கச் செய்யும் காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை, பருப்பு வகைகள் கடலை வகைகள் சூடாறிப்போன உணவுப் பண்டங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும் நல்லதே.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.