சின்ன வெற்றி... பெரிய வெற்றி!
"இந்தக் காலத்துப் பசங்களுக்கு எல்லாம் பொறுப்பே இல்லை. அப்பா வாங்கிக் கொடுத்த பைக்கில கண்மண் தெரியாமப் போறது... ஊர் சுத்துறது... போற வர்ற
"இந்தக் காலத்துப் பசங்களுக்கு எல்லாம் பொறுப்பே இல்லை. அப்பா வாங்கிக் கொடுத்த பைக்கில கண்மண் தெரியாமப் போறது... ஊர் சுத்துறது... போற வர்ற பொண்ணுகளைக் கிண்டல் பண்றது.. இவுங்க எல்லாம் எங்கே உருப்படப் போறாங்க' என்று வெறுப்புடன் பேசுபவர்கள் இனிúழ்மல் அப்படிப் பேசமாட்டார்கள், திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் வாழும் கெüதம்ராஜைப் பற்றிக் கேள்விப்பட்டால்.
அப்பா பட்ட கடனை அடைக்க, சொந்தத் தொழிலில் இறங்கி, இளைய வயது ஏற்றுமதியாளராக இருந்து வரும் கெüதம் ராஜுக்கு வயது 22. துபாய், மலேசியா, சிங்கப்பூர், குவைத், மாலத்தீவு, இங்கிலாந்து, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு அவர் காய்கறிகளை ஏற்றுமதி செய்கிறார்.
இந்த இளம் வயதில் எப்படி இந்தத் தொழிலைக் கற்றுக் கொண்டார்? என்ற கேள்வியோடு அவரை அணுகினோம்:
""என்னுடைய அப்பா திருச்சியில் உரக்கடை வைத்திருந்தார். உரக்கடையில் நஷ்டம். கடையை தொடர்ந்து நடத்த கடன் வாங்கினார். 70 லட்சம் ரூபாய். கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கு வந்து சத்தம் போட்டார்கள். அப்போது நான் பிசிஏ முதலாமாண்டு படித்துக் கொண்டு இருந்தேன். அப்பாவுக்கு உதவாமல் தொடர்ந்து படிக்க வேண்டுமா? என்று தோன்றியது. படிப்பை விட்டுவிட்டேன். என்ன செய்வது? என்று தெரியவில்லை.
ஓர் இடத்தில் வேலை செய்து 70 லட்சம் ரூபாய் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது. எனவே ஏதாவது சொந்தத் தொழில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அப்போது ஏற்றுமதி தொழில் தொடர்பாக வெளி வந்த புத்தகங்களைப் படித்தேன். அது தொடர்பான வகுப்புகளுக்கும் போனேன். திருச்சியில் ஏற்றுமதி செய்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் பழகினேன். எங்கே பொருட்களை வாங்குவது? எப்படி அவற்றை அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்வது? எப்படி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது? என்பதையெல்லாம் தெரிந்து கொண்டேன்.
வெளிநாட்டு ஆர்டர் எடுத்துப் பொருள்களை அனுப்பினால், அவர்கள் பணம் அனுப்பாவிட்டால் என்ன செய்வது? என்ற பயம். இன்னும் கொஞ்சம் ஆழமாக நெட்டில் புகுந்து தேடினேன். பயம் தெளிந்தது.
வெளிநாட்டிலிருந்து நமது பொருட்களை வாங்குபவர்களில் சிலர், மொத்த பணத்தையும் முழுவதுமாகவோ, பாதிப் பணத்தையோ பொருளை அனுப்புவதற்கு முன்பே நமக்கு அட்வான்ஸôகக் கொடுத்துவிடுவார்கள் என்பது தெரிந்தது. இன்னும் சிலர் பொருள் கிடைத்ததும் நமது வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திவிடுவார்கள் என்பதும் தெரிந்தது. சில நாடுகள் "இவரை நம்பி பொருளை அனுப்பலாம்' என்று தங்கள் நாட்டு வாங்குபவர்களுக்கு உத்தரவாதம் கொடுக்கின்றன.
இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டவுடன், வெளிநாட்டில் உள்ள வாங்குபவர்கள் 12 பேருக்கு, எனது விருப்பத்தைத் தெரிவித்து மெயில் அனுப்பினேன். அதற்கு, 5 பேர் பதில் அனுப்பினார்கள். அதில் ஒருவர் 500 கிலோ காய்கறிகளை அனுப்புமாறு ஆர்டர் கொடுத்தார். எனக்குக் கிடைத்த முதல் ஆர்டர்! எனக்குத் தலைகால் புரியவில்லை. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதே சமயம் பயமாகவும் இருந்தது.
ஆனால் அந்த ஆர்டருக்கு காய்கறிகளை வாங்கி அனுப்ப என்னிடம் பணம் இல்லை. யாரிடம் கேட்பது? ஏற்கெனவே ஏகப்பட்ட கடனில் மூழ்கிப் போயிருக்கும் எங்களை யார் நம்புவார்கள்? எனக்குக் கிடைத்த அந்த ஆர்டருக்கான காய்கறிகளை வேறு ஒருவரை அனுப்பச் சொன்னேன். அதில் கொஞ்சம் பணம் கிடைத்தது. இப்படி எனக்கு வந்த ஆர்டர்களைப் பிறருக்கு மாற்றி மாற்றி ரூ.25 ஆயிரம் சேர்த்துவிட்டேன். இதுதான் எனக்கு மூலதனம். அப்போது எனக்கு வயது 19.
அதற்குப் பின்பு நானே காய்கறிகளை வாங்கி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தேன். ஏற்றுமதி செய்பவர்களை பழகி வைத்திருந்ததால், காய்கறிகளைப் பேக் செய்து அனுப்புவது சிரமமாக இல்லை.
ஆர்டர் எடுக்கும்போது வெளிநாட்டில் உள்ளவர்களுடன் ஆங்கிலத்தில் பேச வேண்டியிருந்தது. எனக்கோ அவ்வளவாக ஆங்கிலம் பேச வராது. ""எனது மார்க்கெட்டிங் மேனேஜர் உங்களிடம் பேசுவார்; பர்சேஸ் மேனேஜர் உங்களிடம் பேசுவார் '' என்று வெளிநாட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, என்னுடைய நண்பர்களைப் பேசச் சொல்வேன். இதனால் நான் பெரிய ஏற்றுமதி நிறுவனம் நடத்துவதாக அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். அதற்குப் பின்பு நானே ஆங்கிலத்தில் பேச கற்றுக் கொண்டேன்.
காய்கறிகளை திருச்சியில் வாங்கினால் அதிக விலையாக இருந்தது. எனவே ஒட்டன்சத்திரத்துக்குச் சென்று அங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் காய்கறிகளைக் கொள்முதல் செய்தேன். வாடகை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்து இங்கு நல்ல காய்களை எல்லாம் தனியாகப் பிரித்து, சுத்தம் செய்து அனுப்ப ஆரம்பித்தேன்.
அடுத்து ஒரு பிரச்னை வந்தது. காய்கறிகளின் விலை திடீரென ஏறிவிடும். ஆர்டர் எடுக்கும்போது இருக்கும் விலை திடீரென ஏறிவிட்டால் நஷ்டமாகிவிடுமே? இதற்கு என்ன செய்வது? ஒரு வாரத்தில் காய்கறிகளின் விலை எப்படியிருக்கிறது? என்று கணக்கெடுத்து, ஒவ்வொரு காயின் சராசரி விலையையும் வெளிநாட்டில் உள்ளவர்களுக்குச் சொல்லிவிடுவேன். அதற்கு அவர்கள் ஒத்துக் கொண்டால், காய்கறிகளை வாங்கி அனுப்புவேன். இதனால் எனக்கு நஷ்டமில்லாமல் போனது.
மலேசியாவில் வெங்காயம், உருளைக் கிழங்கு, கொத்துமல்லியை அதிகமாக வாங்குவார்கள். சிங்கப்பூரிலோ முருங்கைக்காய்க்கும், பச்சை மிளகாய்க்கும் ஏகப்பட்ட டிமாண்ட். இங்கிலாந்தில் கறிவேப்பிலையையும், நாட்டுத் தக்காளியையும் விரும்பி வாங்குவார்கள்.
முதலில் துபாய்க்கு மட்டும் வாரத்துக்கு 500 கிலோ காய்கறிகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். இப்போது ஏழு நாடுகளுக்கு வாரத்துக்கு 7 ஆயிரம் கிலோ வரை காய்கறிகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன்.
இந்த 4 ஆண்டுகளில் அப்பா வாங்கிய ரூ.70 லட்சம் கடனையும் அடைத்தேன். எப்படியும் முன்னேற வேண்டும் என்ற சின்ன வெறி எனக்குள் எப்போதும் இருந்தது. அதனால்தான் இரவு, பகல் பார்க்காமல், கஷ்டம் என்று நினைக்காமல் உழைக்க முடிகிறது.
இப்போது அப்பா, அம்மாவைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதுதான் என் ஒரே லட்சியம்'' என்றார் மகிழ்ச்சியாக.