இரு கிளைகள் உள்ள தனி மரம்!
நான்கு வயதிலேயே சிறுவனாக திரைப்படத்தில் நடிக்கத் துவங்கி, திருமணத்திற்கு பின்பு திரைப்படத் துறையிலிருந்து விலகி, மீண்டும் நடித்த திரைப்படத்தின் மூலம் சிறந்த
நான்கு வயதிலேயே சிறுவனாக திரைப்படத்தில் நடிக்கத் துவங்கி, திருமணத்திற்கு பின்பு திரைப்படத் துறையிலிருந்து விலகி, மீண்டும் நடித்த திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற சரிகா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் "கிளப் 60' மூலம் திரைக்கு வந்திருக்கிறார். அவர், தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த ஏற்ற இறக்கங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டதிலிருந்து...
சரிகாவின் தந்தை ஒரு புகைப்படக் கலைஞர். இவருக்கும் ரஜ்புத் இனத்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த ஒரே மகள் சரிகா. "ஃபிலிம்பேர்' பத்திரிகை நடத்திய போட்டியொன்றுக்கு சரிகாவின் புகைப்படத்தை அனுப்பினார் அவரது தந்தை.
தேர்வு செய்யப்படாத அந்தப் புகைப்படத்தை பார்த்த பத்திரிகையாளர் ஒருவர், பிரபல தயாரிப்பாளர் பி.ஆர்.சோப்ரா அவரது படத்தில் நடிப்பதற்காக குழந்தை நட்சத்திரமொன்றை தேடிக் கொண்டிருப்பதை அறிந்து புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைத்தார். அப்போது சரிகாவின் வயது நான்கு.
அந்தப் படத்தில் சிறுவனாக நடித்தார் சரிகா. அந்தப் படம் முடிவடைவதற்குள் சரிகாவின் பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிட்டனர். கணவர் பிரிந்ததால் வருமானமின்றி சிரமப்பட்ட சரிகாவின் தாய், சரிகாவைத் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வைப்பதன் மூலமாகவே வாழ்க்கையை நடத்த முடியுமெனக் கருதினார்.
குழந்தை நட்சத்திரமாக எத்தனை படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்? அதுவும் குழந்தை நட்சத்திரங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்? வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் பஸ்ஸிலும் ரயிலிலும் சென்று நடித்து வந்தார். சிறுவயதிலேயே சரிகா நடிக்கத் தொடங்கியதால், பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. 11 வயதுவரை எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை. தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டதால் இவரது தாய், ஒரு பார்சி பெண்மணியை டியூஷனுக்கு அமர்த்தி எழுதவும் படிக்கவும் கற்றுத் தர ஏற்பாடு செய்தார். உடன் நடித்தவர்கள் கொடுத்த ஒத்துழைப்பு காரணமாக வலுக்கட்டாயமாக புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி தன்னம்பிக்கையுடன் சில மாதங்களிலேயே சரளமாகப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டார். பதின்மூன்று வயதுவரை சிறுவன் வேடத்திலேயே நடித்து வந்த இவர், உடலில் ஏற்பட்ட பருவ மாற்றங்களால் தொடர்ந்து நடிக்க முடியவில்லை.
பருவமடைந்த பிறகு அதிர்ஷ்டகரமாக இவரது இரண்டு படங்கள் பெரும் வெற்றி பெறவே திரையுலக வாழ்க்கை தொடர்ந்தது. ""கீத் காத்தா சல்''(1975) படத்தின் மூலம் கதாநாயகி அந்தஸ்துக்கு உயர்ந்த இவர், அப்படத்தில் நடித்த சச்சினுடன் தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்தார். இதனால் இவரது புகழும் வருமானமும் அதிகரித்தது.
தன்னுடைய பெற்றோர் பிரிந்ததற்கான காரணத்தை சரிகா எப்போதுமே கேட்டதில்லை. கடந்த காலத்தை மறக்க விரும்பியவர், திரையுலகம்தான் தனது வாழ்க்கை என நினைத்தார். சிறுவயதிலிருந்தே தான் தனிமையில் இருப்பதாகவோ தனித்து விடப்பட்டதாகவோ கருதியதில்லை.
குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது இவரது தாயும் தன்னுடைய மகள் சினிமாவில் நடிக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொண்டதும் இல்லை. அவரது தேவை பணம் மட்டுமே. தனிப்பட்ட முறையில் சரிகா எதையும் சொல்லவோ, செய்யவோ அவரது தாய் அனுமதித்ததில்லை.
ஹீரோயினாக வளர்ந்த பின்னரும் ஏதாவது தவறு என்று கருதினால், கண்டபடி திட்டுவதும் அடிப்பதும் உண்டு. படப்பிடிப்பின் போதும் அடிப்பதுண்டு. வீட்டிலும் அடிப்பதுண்டு. பொது இடங்களில், தெருக்களில் கூட கண்டபடி கத்தி திட்டுவதுண்டு.
மறக்கமுடியாத சம்பவமொன்றைக் குறிப்பிட வேண்டுமெனில், ஒருமுறை சண்முகாநந்தா ஹாலில் சரிகாவின் தாயார் பொறுப்பேற்று நடத்திய விழாவொன்றில், பிரபல நடிகை என்பதால் சரிகாவை முன்னிலைப்படுத்தியிருந்தனர். விழாவுக்கு தாமதமாக வந்த சரிகாவைச் சுற்றி ரசிகர்கள் ஆட்டோகிராப் கேட்க, இவரும் கையெழுத்திட்டு அளித்து வந்தார். அப்போது கோபத்துடன் வந்த சரிகாவின் தாய், ரசிகர்கள் எதிரிலேயே கண்டபடி திட்டியதோடு ஓங்கி கன்னத்தில் அறைந்ததைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட சரிகா உள்ளே சென்று முகத்தை கழுவிக் கொண்டு எதுவுமே நடக்காதது போல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர்களது முரண்பட்ட தாய்-மகள் உறவு அன்றைய காலகட்டத்தில் இந்தி திரையுலகில் பெரிதாகப் பேசப்பட்டதுண்டு. ஒரு முறை பிரபல இயக்குநர் பாசு பட்டாச்சார்யா தன்னுடைய படத்தில் சரிகாவை நடிக்க வைப்பதற்காக கதை சொல்ல அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். கதையைத் தன்னிடம்தான் சொல்ல வேண்டுமென்றும் தான் ஒப்புதல் கொடுத்தால்தான் சரிகா நடிக்க வருவார் என்றும் அவரது தாய் அடம் பிடித்துள்ளார்.
"என்னுடைய படத்தில் நடிக்கப் போவது நீங்கள் அல்ல. சரிகாதான். நான் அவரிடம்தான் கதை சொல்வேன்' என்று பாசு சொல்ல அதற்கு மறுப்பு தெரிவித்த சரிகாவின் தாய் அவரை வெளியே அனுப்பியுள்ளார்.
பண விஷயத்திலும் இதே கறார் நிலைதான். தான் நடிக்கும் படத்திற்கு என்ன சம்பளம் என்பதே சரிகாவுக்கு தெரியாது. அதுபற்றி அம்மாவிடம் கேட்பதும் இல்லை. தன்னுடைய சம்பாத்தியம் எவ்வளவு? ஃபிலிம்சிட்டி அருகில் வாங்கிய நிலத்தின் மதிப்பு என்ன? என்பது பற்றியெல்லாம் சரிகா கேட்டதே இல்லை. இவரது நடிப்பின் மூலம் கிடைத்த ஊதியத்தில் வாங்கிய சொத்துக்கள் எதுவுமே சரிகா பெயரில் பதிவு செய்யப்பட்டதில்லை.
ஒரு முறை தயாரிப்பாளர் ஒருவர் இவருக்குத் தர வேண்டிய சம்பளத்தை ஒரு கவரில் போட்டுக் கொடுத்தார். அந்தப் பணத்திலிருந்து ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து தாயிடம் சொன்ன போது கிடைத்தது வசவும், அடி உதையும்தான். இனி எக்காரணத்தைக் கொண்டும் யார் பணத்தை கொடுத்தாலும் கொண்டு வந்து நேரே தன்னிடம் தரவேண்டும் என்று உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் பணத்தை தொட்டதே இல்லை.
தன்னுடைய 21வது வயதில் ஒருநாள் தாயிடம் பேசிக் கொண்டிருந்த போது ஆத்திரமடைந்த அவர், சரிகாவை கண்டபடி அடிக்க, இனிப் பொறுத்தது போதுமென்று இவரும் வீட்டைவிட்டு வெளியேறத் துணிந்தார். வீட்டிலிருந்து எதையும் எடுத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் துறந்து தன்னுடைய காரில் ஏறிக் கிளம்பினார். எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றியலைந்த சரிகா அன்றிரவு காரிலேயே தூங்கினார்.
மறுநாள் காலை தன்னுடைய தோழி வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு அவரிடமே மாற்று உடை வாங்கி அணிந்து கொண்டு சாப்பிட்டுவிட்டு மீண்டும் காரில் கிளம்பினார். இதே போல் ஆறு நாட்கள் தொடர்ந்து தோழிகள் வீட்டிற்கு செல்வது, குளிப்பது, உடை மாற்றிக் கொள்வது, சாப்பிடுவது, கிளம்புவது, காரிலேயே தூங்குவது என்று சுற்றிக் கொண்டிருந்த சரிகா, யாரிடமும் தான் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறவே இல்லை.
கடைசியில் அவரது தோழிகள் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று ஊகித்து அவரிடம் விசாரித்த போதுதான், தாயின் அடக்குமுறையில் தான் அனுபவித்து வந்த கொடுமைகளை மனம் திறந்து கூறினார். நல்லவேளையாக அவர் கைவசம் படங்கள் இருந்ததால் உடனடியாக ஒரு வீட்டை அமர்த்திக் கொள்ளும்படி யோசனை கூறினர்.
அவர்கள் யோசனையை ஏற்றுக் கொண்ட சரிகா, நான்கு வயதில் நடிக்கத் தொடங்கி பிரபல நடிகையான பின்னர், தன்னுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்ற வைராக்கியத்துடன் புதிய வாழ்க்கையைத் தொடங்க நினைத்தார். உடனடியாக ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுக்க நினைத்து, எஸ்டேட் ஏஜென்ட்டை தொடர்பு கொண்டபோது அந்த பகுதியிலேயே அவரது அம்மா ஆறு பிளாட்கள் வாங்கியிருப்பது தெரியவந்தது.
தன்னுடைய அம்மாவுக்கு ஃபோன் செய்தபோது, பத்துநாட்களாக எங்கே போனாய்? எங்கே இருந்தாய்? என்று எதுவுமே கேட்கவில்லை. ""வீட்டைவிட்டுப் போக வேண்டுமென்று நினைத்தால் தாராளமாகப் போ. அதற்குமுன் சில பேப்பர்களில் கையெழுத்திட்டுவிட்டு போ'' என்று கூறினார்.
சரிகாவின் சம்பாத்தியத்தில் சேர்த்த பணத்தைப் பற்றியோ, வாங்கிய சொத்துக்கள் பற்றியோ எதுவும் சொல்லவில்லை. மகள் என்ற பாசத்தையும் காட்டவில்லை. அவர் கேட்டபடியே அனைத்துப் பேப்பர்களிலும் கையெழுத்திட்ட சரிகா, சுதந்திரப் பறவையானார்.
""அதுவரை பொறுமையாக இருந்ததற்கு என்ன காரணமென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை இதுவரை என்னை அவர் ஒரே பெற்றோராக இருந்து வளர்த்ததோ அல்லது குடும்பமென்று ஒன்று இல்லாமலிருந்ததோ காரணமாக இருந்திருக்கலாம். தனக்கென்று ஒருவரைக் கண்டுபிடிப்பது அவசியம் என்பதை வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகே உணர்ந்தேன்'' என்று கூறிய அவருக்கு கையிலிருந்த படங்கள் மூலம் தேவையான பணம் கிடைத்தது. தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தன.
தனக்கென்று ஒரு பங்களாவை சொந்தமாக வாங்கியவர், பின்னர் ஏழு பங்களாக்களின் உரிமையாளர் ஆனார். ரிஷிகேஷ் முகர்ஜி, பாசு சட்டர்ஜி, ஜலால் ஆகா போன்ற பிரபல இயக்குநர் படங்களில் நடித்தார். எதையுமே சரிகாவால் தனித்துச் செய்ய முடியாது என்று கருதிய அவரது தாயின் எண்ணத்தை தகர்த்து தனியாக தன்னாலும் சாதிக்க முடியுமென்பதை நிரூபித்தார். அப்போதுதான் அவருடைய மனதில் காதல் அரும்பியது.
சரிகாவின் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் அது ஒரு திறந்த புத்தகம். "கீத் காத்தா சல்' படத்தைத் தொடர்ந்து அதில் கதாநாயகனாக நடித்த சச்சினுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்ததால் இருவருக்கும் காதல் மலர்ந்ததாகப் பத்திரிகைகள் எழுதின. "பச்சை நிற கண்கள்' மீது தனக்கும் காதல் ஏற்பட்டது உண்மை என்று பத்திரிகை பேட்டியொன்றில் சச்சின் கூறினாலும், அப்போதைய சூழ்நிலையில் சரிகா அதை மறுத்தார்.
பின்னர் கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமாக இருந்த கபில்தேவ், சரிகாவுக்குப் பொருத்தமானவர் என்று நடிகர் மனோஜ்குமார் தம்பதிகள் கருதியதால் இவர்கள் இருவரையும் சந்திக்க ஏற்பாடு செய்தனர். சரிகா சண்டிகருக்கு அழைத்துச் செல்லப்பட்டு கபில்தேவ் குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசி முடிவெடுத்த நிலையில் கபில்தேவ், தான் ரோமியை காதலிப்பதாகக் கூறி பின் வாங்கினார்.
ரோமியுடன் அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே சரிகாவைச் சந்திக்க ஒப்புக் கொண்டதாகவும் தற்போது எங்களுக்குள் சமரசம் ஏற்பட்டுவிட்டதால் ரோமியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் கபில்தேவ் கூற, சரிகா இடிந்து போனார்.
அடுத்து என்ன?
சினிமா பத்திரிகைகள் காத்திருக்க விரும்பவில்லை. கரண்கபூருடன் இவர் நடித்த "நிர்வாணா' பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நேரம். இருவரையும் இணைத்து வதந்திகளைக் கிளப்பின. இதைத் தவிர்ப்பதற்காக லண்டன் சென்ற சரிகா, இஸ்மாயில் மெர்ச்சண்ட்டின் "ஏ ரூம் வித் ஏ வியூ' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது, ரத்தானது. இதன் பின்னர்தான் கமல்ஹாசன் சந்திப்பு ஏற்பட்டது. இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட திருமண உறவு குறித்தோ, பிரிவு குறித்தோ இவர் வெளிப்படையாக எந்தப் பத்திரிகைக்கும் பேட்டி அளித்ததில்லை. ஏற்கெனவே தமிழ்த் திரையுலகில் புகழ் உச்சியில் இருந்த கமல்ஹாசன் இந்தி திரையுலகிலும் "சாகர்' படத்திற்கு பின்னர் கால் பதிக்க முயற்சித்துள்ளார். அவரது முதல் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, கமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்த நேரத்தில் அந்தப் பெண் தான் தானென்றும் அந்த தகவல் உண்மையென்றும் சரிகா வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
இந்த உறவின் விளைவாக சரிகா கர்ப்பமடைந்தபோது இருவருமே திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தையைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக இருந்த சரிகா, குழந்தைப் பேறுக்காக லண்டன் செல்ல விரும்பினார். ஆனால் கமல் அவரை சென்னை வரக் கூறினார். இந்த விவகாரத்தை பத்திரிகைகள் பெரிதாக வெளியிட, திருமணம் ஆகாமலேயே தான் ஒரு தாயாகி இருப்பதைப் பெருமையாக கருதுவதாக கமலுக்கு ஆதரவாக சரிகா கூறினாலும், திருமணம் செய்து கொள்வதாக கூறிய கமலின் கோரிக்கையை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
மீண்டும் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ள விரும்பிய சரிகா, இரண்டாவது பிரசவத்திற்கு பிறகே கமலைத் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் நடிப்பதை விட்டுவிட்டு, தமிழ் கற்றுக் கொண்டு கமல் படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராக சென்னையில் புதிய வாழ்க்கையைத் தொடங்கினார். இவர்களது வாழ்க்கை ஓர் அருமையான காதல் கதை என்று "சிமி கேரவல்' நடத்திய டாக் ஷோவில் ஒளிபரப்பப்பட்டது. அது உண்மையானதாகவும் சிறப்பாகவும் அமைந்திருந்தது.
பின்னர் எப்படி இவர்கள் திருமண உறவு முறிந்தது?
கமலுக்கு வேறொரு நடிகையுடன் தொடர்புள்ளதாகப் பத்திரிகைகள் எழுதின. முதல் திருமண முறிவுக்குப் பின்னர், மீண்டும் தனக்கொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பிய நடிகை கவுதமிக்கு உதவ கமல் நினைத்ததால் சரிகாவின் உறவு அவருக்குத் தேவைப்படவில்லை. சரிகா வெளியேறினார். அப்படி வெளியேறுவதற்கு பெரும் தொகையை சரிகா கேட்டதாகப் பத்திரிகைகள் எழுதின. சென்னையிலிருந்து மும்பை திரும்பிய சரிகா, பந்த்ராவில் ஒரு ஃபிளாட்டை வாடகைக்குப் பிடித்து குடியேறினார்.
43வது வயதில் மீண்டுமொரு புது வாழ்க்கையைத் தொடங்க நினைத்த அவர், பட வாய்ப்புகளைத் தேடிய போது "பர்ஸôனியா'வில் நடிக்க ஒப்பந்தமானார். அகமதாபாத் கலவரத்தின்போது காணாமற் போகும் ஒரு பார்ஸி சிறுவனின் தாயாக ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் நஸ்ருதின் ஷாவுடன் நடித்த போது அவருக்குச் சிறிய தொகையே சம்பளமாக கிடைத்தது. மேலும் அப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருந்ததால் இந்தியாவில் இந்தப் படம் திரையிடப்படவில்லை.
மேக் அப் ஏதுமின்றி சாதாரண பருத்தி ஆடையணிந்து அவர் நடித்த அந்தப் படம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை சரிகாவுக்கு பெற்றுத் தந்தது. நீதிமன்ற வழக்கு காரணமாக அந்த ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், பின்னர் இரண்டாண்டுகளுக்குமாகச் சேர்த்து அறிவிக்கப்பட்ட விருது பட்டியலின்படி சரிகாவுக்கு விருது அளிக்கப்பட்டது.
இதற்கிடையில் தன்னுடைய தந்தையைப் பற்றிய தகவலைத் தேடியபோது அவர் ராஜஸ்தானில் வேறொரு திருமணம் செய்து கொண்டு மனைவி குழந்தைகளுடன் இருப்பது தெரிய வந்தது. தாயைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பவில்லை என்றார். தற்போது 52 வயதாகும் அவர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
""முன்னைப் போல் கதாநாயகி பாத்திரத்தை தேட முடியாது. வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடிப்பதென்று முடிவு செய்த போதுதான் ""கிளப் 60' படத்தின் சோகக் காட்சிகள் பேசக் கூடியவையாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். இன்றைய சினிமாவில் மெச்சூரிட்டி இருப்பதால் எனக்கு தேவையான பாத்திரத்தைத் தேர்வு செய்யவும் நடிக்கவும் முடிகிறது. ஒரு கதாசிரியரின் கற்பனைப் பாத்திரத்துடன் என்னுடைய நடிப்பு முடிந்து விடுவதாக நான் கருதவில்லை. மக்களைக் கவர வேண்டியது எனக்களிக்கப்பட்ட சுதந்திரமாகவே கருதுகிறேன். கற்பனை பாத்திரங்களில் வித்தியாசமாக நடிக்க விரும்புகிறேன். ஆனால் ரியலிஸ்டிக் சினிமாவில் அல்ல. ஒரே மாதிரியான, கற்பனைக்கு ஒவ்வாத பாத்திரங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.
"பர்ஸôனியா' படத்திற்குப் பின்னர் அதே போன்ற பாத்திரங்களே என்னைத் தேடி வந்தன. ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடித்தால் ஒரு நடிகையால் வளர முடியாது. நல்ல பாத்திரங்கள் கிடைக்காவிட்டாலும் நடிகைகளுக்குப் பிரச்னைதான். பெண்களுக்கு தனி பாத்திரங்கள் கிடைப்பது மிகவும் அபூர்வம். பெரும்பாலும் காதலி, மனைவி, சகோதரி, தாய் போன்ற உறவு முறை பாத்திரங்கள்தான் இருக்கும். அதுபோன்ற பாத்திரங்களில் நடிப்பதில் தவறில்லை. கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் வெறுமனே வந்து செல்வதாகவே இருக்கும்.
உண்மை வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உதவக் கூடிய நண்பர்கள் என்னுடைய வாழ்க்கையிலும் கிடைத்துள்ளனர். ஒவ்வொருவர் சந்தோஷத்திலும் பங்கேற்றாலும் அனைத்துமே மகிழ்ச்சியான நாட்கள் என்று சொல்ல முடியாது. என்னுடைய பலமே என்னுடைய நண்பர்கள்தான்.
இன்றைய தினத்தில் அருமையாகத் தோன்றுவது என்னுடைய வேலையும் என்னுடைய பெண்களும்தான். அதற்கு நான் நன்றி சொல்ல வேண்டும். ஒரு நல்ல படத்தில் நடித்து முடித்தபின்தான் அடுத்த படத்தில் நடிப்பது குறித்து திட்டமிடுகிறேன்.
ஸ்ருதியைப் பொறுத்தவரை வர்த்தகரீதியாக அவரது படங்கள் வெற்றி பெறுகின்றன. அக்ஷரா இப்போதுதான் பால்கியின் படத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். நல்லதொரு வாழ்க்கை. என்னைப் பொறுத்தவரை நான் யாருக்கும் யோசனை கூறுவதில்லை. அவரவர்களுக்கு அவரவர் வேலை. ஒருவரது மரணம் வரை எதுவுமே முற்றுப் பெறுவதில்லை என்பதை நம்புகிறேன். அதன் பின்னரும் ஒரு முடிவு இருக்கிறதா? என்பது சந்தேகம் தான்''என்கிறார் சரிகா.