தினமணி கதிர்

கேட்காத குரல்

களி மண்ணையும் தண்ணீரையும் அளவான சதவீதத்தில் கலந்து குழைய பிசைந்து கொண்டிருக்கும் சாரதி, ஒரு மண் பொம்மைக் கலைஞன். பரண் மீது கிடந்த பொம்மை

இள.அழகிரி

களி மண்ணையும் தண்ணீரையும் அளவான சதவீதத்தில் கலந்து குழைய பிசைந்து கொண்டிருக்கும் சாரதி, ஒரு மண் பொம்மைக் கலைஞன். பரண் மீது கிடந்த பொம்மை அச்சுகளை அவன் மனைவி மீனாட்சி எடுத்துப் போட்டு தூசு தட்டிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் புது ரிலீஸ் படம் பார்க்கப் போகிற திருப்தி. இந்த வேலைத்தான் அமைந்து எத்தனை நாளாயிற்று.

விவசாயி சேற்றில் கால் வைத்தால் நாட்டுக்கு வளம். சாரதி சேற்றில் கை வைத்தால் தான் அவன் வீட்டுக்கு வளம். பொம்மை செய்யும் பரம்பரைத் தொழில் தற்போது பயனற்றுப் போனாலும், தொழிலை கைவிட மனம் இடம் தரவில்லை.

அப்பாவின் கையில் கண்ணாடி மாதிரி களிமண் குழைவாகி வருவதையும் அம்மா ரகவாரியாக அச்சுக்களை எடுத்துப் போடுவதையும், அந்த கிராமத்தின் வானத்தில் எப்போதாவது வரும் ஹெலிகாப்டரை பிரமிப்பாய் பார்ப்பது போல பார்த்து நின்றான் ஏழு வயது மகன்.

""எலேய்... ஸ்கூலுக்கு போக நேரமாகலையா... கௌம்பு...'' மதிய சாப்பாட்டை ஞாபகம் வைத்து மகனை சாரதி அவசரப்படுத்தினான். இரவு சுடு சாதத்திற்கு கண் முன்னே கேரண்டி கிடைத்து விட்ட சந்தோஷத்தில், புத்தகமும் கையுமாக துள்ளிக் குதித்து கிளம்பிப் போனான் மகன்.

சாரதி நாலு எழுத்து படித்தவனில்லை. அவன் காலத்தில் மதிய உணவு வழக்கத்தில் இல்லை. அவனது தந்தைக்கு உதவியாக இருந்தான். சின்ன வயதிலேயே தொழில் தேர்ச்சி பெற்றிருந்தான். பெண்ணுக்கு எப்படி மூக்கும் முழியும் முக்கியமோ அது போல பொம்மைக்கும் மூக்கும் முழியும் மிக முக்கியம். சாரதி கைப்பட்டால் பொம்மைகள் உயிர் பெற்றது போல இருக்கும். மகனின் திறமை தந்தையை பெருமிதம் கொள்ளச் செய்தது. சுத்துப்பட்டு கோயில் திருவிழாக்களில் இவர்களின் மண் பொம்மைகளுக்கு ஏக கிராக்கி. பொம்மை வாங்குவதற்கென்றே திருவிழாக்களுக்கு பெரும் கூட்டம் திரளும். வருடா வருடம் தினுசு

தினுசான பலரகப் பொம்மைகளைக் கற்பனை வளமேற்றி தயாரித்து மக்களை மகிழ்விப்பார்கள். அண்டை மாநிலம் வரை கூட வியாபாரத்தை சாரதியின் தந்தை விரிவு படுத்தியிருந்தார்.

""காசுக்காக மட்டும் கலை கிடையாது... நாம கஷ்டப்பட்டு உருவாக்குகிற ஒவ்வொரு பொம்மையும் உயிருள்ளது மாதிரி... மத்தவங்க நம்மள மதிக்கிறார்களோ... இல்லையோ... நாம நம்ம தொழிலை மதிக்கணும்...''

அப்பா அந்தத் தொழிலில் மிடுக்குக் குறையாமல் கொடி கட்டிப் பறந்து மறைந்தும் விட்டார். இன்னார் பையன் தான் சாரதி என மற்றவர்கள் பேசும் போது, பெருமையாக இருந்ததை அவ்வப்போது நினைத்துப் பார்த்து சிரித்தும் கொள்வான். சாரதி இந்த பொம்மை தொழிலை ஒரு வரமாக நினைத்து விட முடியாமல் தொங்கிக் கொண்டிருப்பதை, ஏளனம் செய்த சக கலைஞர்கள் வேறு தொழிலுக்கும் போய்விட்டார்கள். இப்போது இதுமாதிரி ஒரு தொழில் இருப்பதே கூட நிறைய பேருக்குத் தெரியவில்லை? இந்த விஞ்ஞான காலத்தில் மண் பொம்மைகளை சீண்ட பிறந்த குழந்தைக் கூட தயாராக இல்லாதது வேதனை. குழந்தைகளுக்கு கீ கொடுத்தால் பொம்மை ஓட வேண்டும்... பேச வேண்டும்... சிரிக்க வேண்டும். இல்லையெனில் குழந்தை அழுகிறது. அந்த மாதிரி பல வண்ணங்களில் மிளிரும் பிளாஸ்டிக் மற்றும் தகர பொம்மைகளை விலை அதிகம் கொடுத்து வாங்கித் தருவதை பெற்றவர்களும் உயர்வாக ஓர் அந்தஸ்தாக நினைக்கிறார்கள்.

நேற்றிரவு புரண்டு புரண்டு படுத்து மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருந்த சாரதி கண்ணில் துளிர்த்த கண்ணீர் நெடுநேரம் வரை உலராமல்... உயிர் வரை துடி துடிக்க வைத்தது. எத்தனை நாளுக்கு தான் பொண்டாட்டி பிள்ளையுடன் பசியோடும் பட்டினியோடும் கிடப்பது. சாரதியின் பரிதாப நிலையைப் பார்த்து உடனடியாக மேஸ்திரி சித்தாளு வேலைக்கு வரச் சொல்லிவிட்டார். சொந்த மண்ணைவிட்டு செல்லும் அகதி நிலைமையில் இருந்த சாரதி காதில் தெய்வாதீனமாய் அந்தக் குரல் கேட்டது.

""யப்பா... இங்க  யாரு பொம்மை செய்யுற சாரதி...'' அரக்க பரக்க கண் விழித்தான். நன்றாக விடிந்து இருந்தது. வாசலில் கடவுள் அனுப்பிய தூதுவராக இருவர் நின்றிருந்தார்கள்.

""தம்பி சாரதி எங்களுக்கு உடனடியா ஒரு நூறு மண் பொம்மை வேணும்... கிடைக்குமா?''

""என்ன சார் விளையாட்டா... மந்திரம் போட்டு செய்யுற காரியமா? கையால் செய்யணும் சார்... டயம் கொடுங்க...''

இருவரும் யோசித்தார்கள். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, யாருக்கோ செல்போன் பேசினார்கள். மீனாட்சிக்குப் பயமாகிவிட்டது. எங்கே தேடி வந்த வேலையில் மண் விழுந்து விடக் கூடாதே?

""சரிப்பா சாரதி... ரெண்டு நாளு டைம் எடுத்துக்க. பொம்மை சுமாரா இருந்தாக் கூட பரவாயில்லை. அவசரம்.''

""சார்... கர்ப்பத்துல இருக்கிற குழந்தையை நம்ம அவசரத்துக்கு எடுத்துட முடியுமா? ஒவ்வொரு பொம்மையும் கர்ப்பத்துல இருந்து வர்ற மாதிரி தான்''

""சரி... பேச்சை குறைச்சு வேலையை ஆரம்பி...'' என முன் பணத் தொகையை நீட்ட...  மீனாட்சி முகத்தில் சந்தோஷ முகமூடி.

கடந்த இரண்டு நாட்களாக களிமண் பொம்மையை தேடி அவர்கள் அலைந்த கதை அவர்களுக்குதான் தெரியும்? இருவரும் விளம்பர கம்பெனி மானேஜர்கள் என்பதால் இந்த விஷயத்தை எளிதில் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. விளம்பர இயக்குநர் திடீரென ஐநூறு பொம்மைகள் வேண்டும் எனச்

சொல்லிவிட்டார். தயாரிப்பாளர் சாமர்த்தியமாகப் பேசி நூறு பொம்மை போதும் என்ற முடிவிற்கு வரவைத்து விட்டார். இந்த பொம்மை மேட்டர் சூப்பர் என உதவி இயக்குநர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்க... குஷியான இயக்குனர் உடனடியாக பொம்மை வேண்டும் என சிறு குழந்தை போல அடம் பிடிக்க...

இந்த இரண்டு மானேஜர்களும் களிமண் பொம்மைகளைத் தேடி, கடை வீதிகளில் அலைந்து திரிந்தும் கிடைக்காமல் சோர்ந்து நின்றபோதுதான், சாரதியை பற்றியும்... அவனது விலாசத்தையும் யாரோ தந்து உதவி இருக்கிறார்கள். அவர்கள் சுலபமாக யோசித்து விடுகிறார்கள். யார் யாரோ சுண்ணாம்பாக வேண்டியிருக்கிறது.

மீனாட்சி அழுக்குப் பாவாடையில் மேலும் அழுக்கு படக் கூடாது என்பதற்காக தூக்கிப் பிடித்து, களிமண் சேற்றை குதிகால் அழுத்த மிதித்துக் கொண்டிருந்தாள். கிடைத்த முன் பணத்தில் மகனுக்கு ஒரு செட் டிரஸôவது வாங்கிவிட நினைத்தாள். அவனுக்கு நல்ல உடை இல்லை. ஸ்கூலில் அவன் தான் போஸ்ட் ஆபீஸôம். வாத்தியார் கூட சேர்ந்து, பசங்களும் கிண்டல் பண்ணுவதை, மகன் போன மாதம் வருத்தத்துடன் சொன்னதை இந்த மாதமாவது நிவர்த்தி பண்ணிவிட தாயவள் நினைக்கிறாள்.

""என்னப் புள்ள... மனசுல பெரிய பட்ஜெட் போட்டு மிதக்கிற மாதிரி தெரியுது... நினைப்பு பொழப்ப கெடுக்காம பாத்துக்க... வாங்கின காசு கலர் சாயம் வாங்கத்தான் சரியா இருந்தது'' என்ற சாரதி, மட்டரக சாயம் வாங்கி மிச்சம் பிடிக்கத் தெரியாதவன்.

சாரதி களிமண்ணை அச்சுகளில் திணித்து பொம்மையாய் எடுக்க... அடடா... பிறந்த பச்சிளம் குழந்தை மாதிரி என்ன கொள்ளை அழகு. மூக்கும் முழியும் மிக முக்கியம் அல்லவா? பொம்மையின் மூக்கு பகுதியில் சாரதி ஒரு சொடக்கு போல பிடித்து இழுக்க... மேலும் அழகானது பொம்மை. காற்றில் சுமாராக காய்ந்ததும் எரியூட்ட வேண்டும். அதற்கான ஆயத்த பணியில் மீனாட்சி  ஈடுபட ஆரம்பித்தாள். ஸ்கூல் விட்டு வந்ததும் மகனும் உதவியாக சேர்ந்துக் கொள்வான்.

இப்படியாக அந்த குடும்பமே ஒருங்கிணைந்து அவர்களுக்காகவும்... அந்த மாபெரும் கலைக்காகவும் பாடுபட்டுக் கொண்டிருந்தது.

வீட்டு முன்பு கார் வந்து நின்று ஹாரன் அடித்தது. பிரகாசமாய் வாசலுக்கு வந்த மீனாட்சி, முதலில் சுற்றும் முற்றும் பார்த்தாள். சற்று தள்ளி எதிரே இருந்த பெட்டிக் கடை கூட்டமும், பக்கத்து வீட்டுக்காரியும் காரையும் மீனாட்சியையும் மாறிமாறி பார்க்க, அவள் மனசுக்குள் நினைத்த விஷயம் அரங்கேறிக் கொண்டிருந்தது. அந்த மானேஜர்கள் சொன்ன மாதிரி காரை அனுப்பிவிட்டார்கள். சாரதியும் சொன்ன மாதிரி இரவு முழுக்க கண்விழித்து ஆர்டரை செய்து முடித்திருந்தான்.

கூடையில் வைக்கோல் பரப்பி பொம்மைகள் உராய்ந்து விடாமல் பாதுகாப்பாக அடுக்கி வைத்திருந்த சாரதி, அந்தக் கூடையைத் தலையில் சுமந்து கொஞ்சமாக வாசலில் குனிந்து வெளியே வந்தான். மீனாட்சி சப்தமாக அந்த தகர கதவின் பூட்டை இழுத்து பூட்ட, எதிர் வீட்டுக்காரி எட்டிப் பார்த்தாள்.

"" அக்கா கொஞ்சம் வீட்டைப் பாத்துக்க... நாங்க கார்ல வேலையா போயிட்டு வர்றோம்...''

அவள் தலையாட்ட... மீனாட்சிக்கு சந்தோஷமாக இருந்தது. திரும்பி வருவதற்குள் இந்த காரில் போகிற விஷயத்தை தெரு முழக்க முரசு தட்டாமல் பரப்பிவிட்டுவிடுவாள்.

ஊர் பணக்காரர்கள் விசேஷத்திற்கு தெருவடைத்து கொட்டகை போடுவது மாதிரி என்ன உயர அகல காங்கிரீட் கொட்டகை. அந்த சினிமா ஸ்டுடியோ அரங்கிற்குள் பிரமிப்புடன் நுழைந்த மீனாட்சியை மேலும் குளிரூட்டி நடுங்க வைத்தது.

""ஏங்க நிஜமாக நம்பளை இங்கே தான் வரச்சொல்லி இருக்காங்களா?''

மீனாட்சி சந்தேகம் சாரதிக்கும் தொற்றிக் கொண்டது. அவனது கண்கள் அந்த மானேஜர்களை அவசரமாய் தேடியது. இருவரில் ஒருவர் அகப்பட்டால் கூட போதும். சுமையை இறக்கி வைத்துவிட்டு கூலியை வாங்கிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம்.

""யப்பா சாரதி... சொன்ன நேரத்துல வில்லு மாதிரி வந்து அசத்திட்டேப்பா...'' என்ற மானேஜரை பார்த்ததும் இருவருக்குமே நிம்மதி வந்தது. யாரோ சிலரை கைதட்டி அழைக்க ஓடிவந்த வேலையாட்கள் கூடையை தூக்கிக் கொண்டு போனார்கள்.

 கூடையைக் கோழி மாதிரி சீண்டிப்பார்த்த இயக்குநர், பொம்மைகள் அழகாய் இருப்பதை பாராட்டாதது சாரதிக்கு வருத்தமாக இருந்தது.

"பொம்மை வந்துடுச்சு ஷாட் ரெடி ஷாட் ரெடி' என்றார் அந்த இயக்குனர். பொம்மை வந்தால் மட்டுமே சூட்டிங் என்ற நிலையில் இருந்த யூனிட் திடீர் உயிர்பெற்று சுறுசுறுப்புடன் சுழல ஆரம்பித்தது.

""யப்பா பொம்மை இதே இடத்துல வெயிட் பண்ணு. மிச்சப் பணம் வாங்கிட்டுப் போயிடலாம்...'' மானேஜர் வேறு வேலை பார்க்க கத்திக் கொண்டே சென்றுவிட்டார். அவர் கத்தலுக்கு சிலர் கட்டுப்படுகிறார்கள். இயக்குனர் கத்தலுக்கு மானேஜர் கட்டுப்படுகிறார். சாரதியும் மீனாட்சியும் சூட்டிங்கை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். பொம்மை தொழில் போன்று இந்த தொழிலிலும் வித்தைகள் இருக்கின்றன. வித்தைகள் தெரிந்தவன் வெற்றி பெறுகிறான்.

"லைட்ஸ் ஆன்' என்றதும் திடீரென ஆளுயர விளக்குகள் கண்களே கூச வைத்து வெளிச்சம் பரவ விட... அழகழகாய் அதிசயமாய் அந்த குழந்தைகளைப் பார்த்தார்கள். குழந்தைகள் என்றால் அழ வேண்டுமே? ஆனால் இந்தக் குழந்தைகள் அழவில்லை.

கேமராவை ஓட வைத்த இயக்குநர், "ஆக்ஷன்...' என்று கத்தினார். அந்த குழந்தைகள் திடீரென்று சத்தமாக அழுது... கையில் இருந்த சாரதி செய்த மண் பொம்மைகளை "டமார் டமார்' என கீழே போட்டு உடைக்க...

"ஐய்யய்யோ குழந்தைகளா... உடைக்காதீங்க உடைக்காதீங்க... அந்த பொம்மைக்கு உயிர் இருக்கு உடைக்காதீங்க...'

விசும்பலாய் கத்த... அதை யாருமே பொருட்படுத்தவில்லை. கணவனை தேற்ற முடியாத மீனாட்சி சேர்ந்துக் கொண்டு அழுதாள்.

திடீரென்று தோன்றிய அழகான அம்மாக்கள் குழந்தையை தேற்றி கையில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகளை கொடுக்க... பழக்கி வைத்திருந்த அந்த குழந்தைகள் இனிமையாய் சிரித்தனர்.

"கட்...' என்ற இயக்குநரின் குரலுக்கு விளக்குகள் அணைக்கப்பட... யூனிட் கோரஸôய் கைதட்டியது.

""வித்தியாசமான ஐடியா சார்... இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் எல்லா குழந்தைகளும் இந்த இம்போர்டட் பொம்மைகள்தான் வேணும்னு அடம் பிடிக்கும் பாருங்களேன்...'' யாரோ யாரையோ பாராட்டிக் கொண்டிருக்க...

பணப்பையும் ரசீதுமாக கூட்டத்துக்குள் சாரதியை தேடிய மானேஜர் ஏமாற்றமாய் தவித்துக் கொண்டிருந்தார்.

""யப்பா இங்க இருந்த பொம்மைக்காரன் எங்கப்பா... யாராச்சும் பாத்தீங்களா?''

""ஓ... அந்த ஆளா... அவனும் அவன் சம்சாரமும் இங்கதான் நின்னுக்கிட்டு இருந்தாங்க. ஷாட்ல பொம்மை உடைக்க உடைக்க... என்ன கண்ராவியோ தெரியல... அழுதுக்கிட்டு இருந்தாங்க... கொஞ்ச நேரத்துக்கு அப்பால அவங்களக் காணோம்...''

அன்று மாலை ஏதோ வேலையாக வெளியே சென்ற மானேஜர், வழியில் சாரதி வீட்டுக்கே தேடிப் போனார். அவனுக்குச் சேர வேண்டிய பணத்தை ஒப்படைத்து விட வேண்டும்? வீடு பூட்டியிருந்தது.

""யாருங்க சாரதியா...'' அரைகுறைப் பார்வையுடன் நெற்றி அருகே கை குவித்து வந்த மூதாட்டி ஒருத்தி, ""சாரதியும் அவன் சம்சாரமும்... சித்தாளு வேலைக்கு போயிட்டாங்க''... என்றாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT