தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: டைபாய்டு காய்ச்சல் தீர...!

எனது மூத்த சகோதரிக்கு வயது 50. புற்றுநோய் உட்பட பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு வீட்டுக்கும், மருத்துவமனைக்குமாக அலைந்து வருகிறார். இப்போது அவருக்கு டைபாய்டு

எஸ். சுவாமிநாதன்

எனது மூத்த சகோதரிக்கு வயது 50. புற்றுநோய் உட்பட பலவித நோய்களால் பாதிக்கப்பட்டு வீட்டுக்கும், மருத்துவமனைக்குமாக அலைந்து வருகிறார். இப்போது அவருக்கு டைபாய்டு காய்ச்சல் வந்திருக்கிறது. ஆங்கில மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகிறது. ஆனால் குடல், இரைப்பையில் அல்சர் புண் ஏற்படுகிறது. இதற்கு ஆயுர்வேத சிகிச்சை முறை என்ன?

பாகீரதி,  தபோவனம், 

தாம்பரம் சானடோரியம், சென்னை.

டைபாய்டு காய்ச்சலுக்கு ஆந்த்ரிக ஸன்னிபாத ஜ்வரம் என்று பெயர். ஜ்வர சந்தாபம் அதாவது உஷ்ணம் துவக்கத்தில் குறைவாயும், பிறகு நாளுக்கு நாள் அதிகரிக்கவும் செய்யும். பிறகு ஜ்வரம் விடும்பொழுது நாளுக்கு நாள் குறைய ஆரம்பிக்கும். இதில் வாயு, பித்தம், கபம் மூன்று தோஷங்களில் எதில் கெடுதி ஏற்படுகின்றதோ அதற்கு தகுந்தாற்போல் உடலில் அறிகுறிகள் தென்படும். காய்ச்சல் வரப்போவதை முன்னதாகவே உடலில் காட்டும் அறிகுறிகள் பொதுவாக கடுமையாக இருக்கும். தூக்கமின்மை, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல், சோம்பல், நாவில் ருசியின்மை, தண்ணீர் தாகம், எரிச்சல், மயக்கம், கை,கால் நீட்ட மடக்க முடியாமல் வலி, மார்பில் கட்டைபோட்டது போல ஒரு வலி, உள்குளிர், பற்களில் கூச்சம், பல் ஈறுகளில் கொஞ்சம் கறுப்பு நிறம், நாக்கில் மாவு படிதல், கண்களில் நீர் வடிதல், காதுகளில் ஒரு விதச் சத்தம், குடல் இரைச்சல், பேச்சில் தடுமாற்றம், முக்கல் முனகல், மனதில் தெளிவின்மை, நினைவு குறைதல், எலும்பு பூட்டுகளிலும் தலையிலும் கடுமையான வலி, பசியின்மை, வியர்வை, மலம், சிறுநீர் வெளியாவதில் மிகத் தாமதம், மலக்குறைவு போன்றவை காணும். இக்குறிகள் எல்லாம் அதிகமாக ஆரம்பத்தில் ஏற்படாதிருந்தாலும் பட்டினியிருத்தல்  அல்லது கஞ்சி திரவ ஆகாரம் மட்டும் அருந்திக் கொண்டு பூரண ஓய்வில் இருந்தாலும் கூட வேகம் குறையாமல் நாளுக்கு நாள் காய்ச்சல் கூடும்.

உடல், உள்ளம், வாக்கு மூன்றுக்கும் ஆயாசம் சிறிதுமின்றி பூரண ஓய்வில் இருக்கவேண்டும். மனதைச் சாந்தப்படுத்திக் கொண்டு கடைப்பிடிக்க வேண்டிய பத்தியங்கள் எல்லாவற்றையும் வெறுப்பின்றி, சினமின்றி கடைப்பிடிக்க வேண்டும். இதனால் சீக்கிரம் இந்த உபாதையிலிருந்து விடுதலை பெறலாம். கட்டிலில் பஞ்சுமெத்தை படுக்கையை போட்டு படுப்பது நல்லது. மத்தியில் தொய்வு கொடுக்கும் கயிற்றுக் கட்டில் நல்லதல்ல. அதில் படுத்தால் குடலில் வாயு தங்கும், இடுப்பு வலி ஏற்படும். இரத்த ஓட்டமும் கொஞ்சம் பாதிக்கப்படும். அவர் படுத்திருக்கும் அறையில் சூடான வெயில் அடிக்கும்படி இருக்கக்கூடாது. உள்ளே வீசும் காற்று நேரில்படும்படியாக ஜன்னல், வாசற்படிக்கு எதிரில் படுக்கையிடக் கூடாது. மின்சார விசிறிக் காற்று உடலில் நேரடியாகப்படக் கூடாது. பனி, வெயிலுக்கு ஏற்றவாறு கம்பளி, பருத்தி விரிப்புகள் உபயோகிக்கலாம். பருத்தித் துணியால் உடலைப் போர்த்தி அதன்மேல் கம்பளியைப் போர்த்தினால் வியர்வையை நன்றாகப் பருத்தித் துணி உறிஞ்சிவிடும். கொசு வராதிருக்க அகில், சந்தனம், குக்கில், கடுகு, சாம்பராணி, வசம்பு, மஞ்சள், வேப்பம்பருப்பு, ஜடாமாஞ்சி, வெட்டிவேர், விளாமிச்சம் வேர் முதலிய சுகந்த, கிருமிநாசினி மருந்து சரக்குகளைப் பொடித்து படுக்கையறையின் உள்ளும், புறமும் காலை, மாலை, சந்தி நேரங்களில் தூபமிடுதல் நோயாளிக்கு நோய் தணிவதற்கும்  மற்றவர்களுக்கு ஒட்டாமலிருப்பதற்கும் உதவும். கொசுவர்த்திச் சுருளை அவருடைய அறையில் உபயோகிக்கக் கூடாது.

சிறுநீர் கழிக்க படுக்கையறையிலிருந்து அதிக தூரம் நடந்து போகக் கூடாது. கஞ்சி, திரவம் மருந்துகள் சாப்பிடுவதற்கு உட்கார வைக்க வேண்டிய அவசியம் இல்லை. உட்கார சக்தி நன்றாக ஏற்படும் வரையில் படுத்துக் கொண்டுதான் சாப்பிடவேண்டும். மலம் மிகக் குறைவாக இருக்கும் நாட்களில் பல் துலக்கல், வாய் கொப்பளித்தல் எல்லாம் படுக்கையில் ஒருக்களித்து படுக்க வைத்து செய்விப்பது செüகரியம். காய்ச்சலின் கடுமை குறைய ஆரம்பித்த பிறகு உடல் பூராவும் வெந்நீரால் துடைத்துவிடுவது மிகவும் நல்லது.

புழுங்கலரிசிக் கஞ்சியை வடிகட்டி கஞ்சித் தண்ணீரை மட்டும் சிறிது  உப்பு சேர்த்து காலையில் மற்றும் மதிய வேளையில் சாப்பிடுவது நல்லது. எளிதில் செரிக்காத உணவுகளைச் சாப்பிடக் கூடாது. நிலவேம்பு, நன்னாரி, சீந்தில், திராட்சை, நெல்லி வற்றல், அதிமதுரம், விளாமிச்சம்வேர் கஷாயம் நல்ல குணம் தரும். இது பித்த ஆதிக்கத்தினால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சலுக்கு நல்லது. கண்டங்கத்திரி வேர், சீந்தில்கொடி, சுக்கு, வெண்கோஷ்டம் இவற்றின் கஷாயம் வாத கப ஆதிக்கத்தினால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சலுக்கு நல்லது. தினம் மூன்று நான்கு முறை சாப்பிடலாம். தேவதாரு, பர்பாடகம், சிறுதேக்கு, கோரைக்கிழங்கு, வசம்பு, கொத்தமல்லி விதை, கடுக்காய், சுக்கு, ஓமம், திப்பிலி ஆகியவற்றின் கஷாயமும் சாப்பிட மிகவும் நல்லது. ஸூதர்ஸனம் சூரணம் அரை, ஒரு ஸ்பூன் சிறிது தேன் குழைத்து காலை, இரவு உணவிற்கு பின் சாப்பிட வயிற்றில் புண் ஏற்படாதவாறு பாதுகாப்பதோடு டைபாய்டு காய்ச்சலையும் விரைவில் தணிக்கும் ஆற்றல் உடையது. பார்ங்யாதி கஷாயம் எனும் பெயரில் தயாரித்து விற்கப்படும் கஷாயம் ஆந்த்ரிக ஜ்வரம் எனப்படும் டைபாய்டு காய்ச்சலுக்குச் சாப்பிடவேண்டிய நல்ல கஷாயமாகும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி

1,000 அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான பதிவு இன்று தொடக்கம்: டிடிஏ தகவல்

பெற்றோரிடம் சொல்லாமல் வெளியேறிய இரு சிறுமிகள்- மீட்டு ஒப்படைத்தது தில்லி காவல்துறை

கிரேட்டா் நோய்டாவில் தனியாா் விடுதியில் துப்பாக்கிச்சூடு: எம்பிஏ மாணவா் உயிரிழப்பு; மற்றொருவா் கவலைக்கிடம்

தில்லி கண்டோன்மென்ட் திட்டத்தில் வெட்டுவதிலிருந்து தப்பிய 1,473 மரங்கள்

SCROLL FOR NEXT