முகப்பு
தினமணி கதிர்

ஷகிரா... ஓ... ஷகிரா..!

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை விட விறுவிறுப்பாக இருந்தது நிறைவு விழாவில் நடந்த பாப் பாடகி ஷகிராவின் நடனமும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளை விட விறுவிறுப்பாக இருந்தது நிறைவு விழாவில் நடந்த பாப் பாடகி ஷகிராவின் நடனமும் பாடலும். ஏறத்தாழ 50 மில்லியன் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சிக்கே கொண்டு சென்ற இந்த நிகழ்ச்சியைப் பாராட்டாதவர்களே இல்லையென்று சொல்லலாம். அவ்வளவு துள்ளல், விறுவிறுப்பு, உற்சாகம்..!

இத்தனைக்கும் காரணமான இந்த ஷகிரா யார்?

முழுப் பெயர் ஷகிரா இஸபெல் மெபாரக் ரிபோல். 1977-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி கொலம்பியாவின் பாரன்க்வில்லா நகரில் பிறந்தவர். இப்போதைய வயதைக் கணக்கிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!

இவரது தந்தை லெபனான் நாட்டுக்காரர். தாய், கொலம்பியாக்காரர். அரேபியா மற்றும் கொலம்பியாவின் பாரம்பரிய இசைகளின் கலவைதான் இவரது பாடல்கள். தனது எட்டாவது வயதில் தனது முதல் பாடலை எழுதினார். பதின்மூன்று வயதில் ஆல்பம் வெளியிட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்.

இவரது முதல் இரண்டு ஆல்பங்களும் "அட்டர் ஃப்ளாப்' என்பார்களே அந்த ரகம்! மூன்றாவது ஆல்பத்தின் ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் இவரே முழுக்கவனம் செலுத்தி, கடுமையாக உழைத்தார். 1996-ஆம் ஆண்டு "வெற்றுக் கால்கள்' என்ற பெயரில் வெளியான அந்த ஆல்பம் 3 மில்லியன் எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்தன. அந்த ஆல்பத்தில் அவரது அரேபிய, கொலம்பிய முத்திரை பளிச்சென்று வெளிப்பட்டது. அதன்பிறகு ஏறுமுகம்தான்.

முதலில் ஸ்பானிஷ் மொழியுலகில் மட்டுமே பிரபலமாக இருந்த இவர், வெகு சீக்கிரம் இசை ரசிகர்களைத் தனது கவர்ச்சி நடனத்தாலும் எல்லாவற்றுக்கும் மேலாக இனிமையான குரலாலும் தன்வயப்படுத்தினார். உலகம் முழுவதும் தனது பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன், தனது 20-வது வயதில் அமெரிக்காவின் மியாமி நகருக்குக் குடும்பத்தோடு குடியேறினார்.

2000-ஆம் ஆண்டில் தனது முதல் கிராமி விருதைப் பெற்றார். 2001-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் தனது முதல் இசை ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம் பிரபலமான பாப் இசைப் பாடல்கள் வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

அதன்பிறகு பாப் இசை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரானார். இவரது இசை விடியோக்கள் தனித்துவமான இசைமைப்புக்கும் விறுவிறுப்பான இடுப்பசைவு நடனங்களுக்கும் புகழ் பெற்றவை.

2010-இல் வெளியான இவரது ஆல்பத்தின் ஒரு பாடல்தான் "வாகா... வாகா....' இந்தப் பாடல் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளின் தீம் பாடலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, தொடக்க நாள் நிகழ்ச்சியில் பாடி, ஆடி கவர்ந்தார். அப்பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.

2012-ஆம் ஆண்டுக்குள் எல்லாக் காலங்களிலும் உலகிலேயே மிக அதிக ரசிகர்களைப் பெற்ற ஒரே கொலம்பியப் பாடகி என்ற இடத்தைப் பிடித்தார்.

இப்போதைய உலகக் கோப்பைப் போட்டியின் ஆரம்ப விழாவில் பாடி ரசிகர்களை மகிழ்வித்த ஜெனிஃபர் லோபûஸ விட, நிறைவு விழாவில் இடம்பெற்ற ஷகிராவின் பாடலுக்கு மவுசு அதிகமாகிப் போனது.

இவ்வளவு புகழ் பெற்றும், தனிப்பட்ட வாழ்வில் இப்படியே எத்தனை காலம்தான் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருப்பது? இதற்கெல்லாம் ஒரு முடிவு வந்தே தீரும் என்பது இவரது தீர்மானமான முடிவு.

அதனால், குழந்தைகளுக்காக ஓர் அமைப்பை நிறுவி கொலம்பியா நாட்டுக் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பதில் தான் சம்பாதிக்கின்ற பணத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகிறார். ஐ.நா.சபையின் அமைப்பான யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றுகிறார்.

ஸ்பெயின் நாட்டுக் கால்பந்து வீரர் ஜெரார்ட் என்பவருடன் தற்போது வாழ்ந்து வருகிறார். இவருக்கு மிலன் என்ற பெயரில் ஓர் ஆண் குழந்தையும் இருக்கிறது.

இந்த மிலனுடன்தான் உலகக் கோப்பை இறுதி விழாவில் தோன்றினார். இன்னொரு பாப் பாடகர் உதயம்..?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.