எழுத்தாளன் முக்கியமல்ல, அவன் படைப்புத்தான் முக்கியம்!
அசோகமித்திரனை வாசித்தல் என்ற நிகழ்ச்சி சென்ற வாரம் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற போது, மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன்,
அசோகமித்திரனை வாசித்தல் என்ற நிகழ்ச்சி சென்ற வாரம் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற போது, மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன், ஆவணப்படத் தயாரிப்பாளர் அம்ஷன் குமார் முதலியவர்கள் அசோகமித்திரன் படைப்புகள் குறித்துப் பேசினார்கள்.
நிகழ்ச்சியின் நிறைவாக, அசோகமித்திரன் தன் ஏற்புரையில் என்ன சொல்வார் என்பதை எல்லாரும் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஏற்புரையை அவருக்கே உரிய முறையில் வெளிப்படுத்தினார் அசோகமித்திரன்:
""எழுத்தாளன் முக்கியமல்ல. அவன் எழுதியிருப்பதுதான் முக்கியம். அதாவது, டெக்ஸ்ட் முக்கியம். எழுதியவர் உங்கள் நினைவிலிருந்து அகன்று போய்விடலாம். ஆனால் அவருடைய எழுத்து உங்களுடன் கூடவே இருக்கப் போகிறது. ""டோன்ட் ட்ரஸ்ட் த டெல்லர். ட்ரஸ்ட் த டேல்'' (சொல்பவனை நம்பாதீர்கள். சொல்லப்பட்ட கதையை நம்புங்கள்) என்று ஆங்கில எழுத்தாளர் டி.ஹெச். லாரன்ஸ் சொல்லியிருப்பதை நான் இங்கே உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.
இலக்கியத்தில் ஆசிரியரின் நோக்கமும், படைப்பின் இறுதி வடிவமும் எல்லா நேரங்களிலும் ஒத்துப் போவதில்லை. இதற்கு மகத்தான எடுத்துக்காட்டு லியோ டால்ஸ்டாயின் அன்னா கரினினா. அவர் விரும்பியது நன்னடத்தையை வலியுறுத்த வேண்டும் என்பதுதான். ஆனால் அதை மீறி, அவை கலைப் படைப்புகளாக உருவாயின. அதனால், இலக்கியப் படைப்புகளை அணுகும்போது, எழுத்தாளர் கூற்றை விட, அப்படைப்பு என்ன அனுபவம் தருகிறது என்பதே முக்கியமானது.
என்னுடைய "இன்று' என்ற சிறுகதையில் வரும் சீதாவுக்கு வயது ஆகியும் திருமணம் ஆகவில்லை. அவளுடைய அலுவலகத்தில் பணிபுரியும் திருமணமான ஒருவனே அவளை ஏற்றுக் கொள்வதாக அவளிடம் வந்து சொல்கிறான். அவனுடைய மனைவி அலுவலகத்துக்கு வந்து அவளிடம் கத்திவிட்டுப் போகிறாள்.
""ஏம்மா, இவ்வளவு நல்லவங்களா இருக்கீங்க. ஆனா இப்படி நடக்க உட்டுட்டீங்களே?'' என்று பியூன் அவளிடம் சொல்வான். அதனால் அவள் தோற்றுப் போனாள் என்பது கிடையாது. நம் டிரடிஷனுக்குள் அல்லது பாரம்பரியத்துக்குள் கிடைக்கும் பாதுகாப்பு அவளுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. சம்பிரதாயங்கள் எப்படியானாலும், சிலதை விட்டுவிட்டோம். அப்போது அது டிராஜடியாகிவிடுகிறது. அதாவது, சோகத்தில் முடிந்துவிடுகிறது. நான் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். டெக்ஸ்ட்டை, படைப்பைப் படியுங்கள். அதிலுள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
நீங்கள் அனைவரும் கட்டுரை எழுதிக் கொண்டு வந்து படித்தீர்கள். அது நீங்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பையும், அக்கறையையும் காட்டுகிறது. உங்கள் எல்லாருக்கும் என் நன்றி''