குழந்தைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்!
பேருந்துநிலையங்களில், கோவில்களில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதிகளில் உங்கள் முன் நீளும் பிஞ்சுக் கரங்களைப் பார்த்ததும்
பேருந்துநிலையங்களில், கோவில்களில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதிகளில் உங்கள் முன் நீளும் பிஞ்சுக் கரங்களைப் பார்த்ததும் மனம் இளகி, காசு போட்டுச் செல்பவரா நீங்கள்? ""உங்கள் இரக்க குணம் பாராட்டுக்குரியது. அதே சமயம் அதைப் பயன்படுத்தி பலர் பிழைக்கிறார்கள்'' என்கிறார் ஷீலா சார்லஸ்.
""சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தங்களுடைய 5 குழந்தைகளையும் பிச்சையெடுக்க விடுகிறார்கள் ஒரு பெற்றோர். ஒரு குழந்தை பிச்சையெடுப்பதின் மூலம் ஒரு நாளைக்கு அவர்களுக்கு குறைந்தது ரூ.600 கிடைக்கிறது. பண்டிகை நாட்களில் ரூ.700 - 800 கூட அவர்களுக்குக் கிடைக்கும். நீங்கள் இரக்கப்பட்டது சரியா? என்று யோசித்துப் பாருங்கள்'' என்கிறார் அவர். சென்னையில் உள்ள குழந்தைகள் நலக் குழுவின் (CHILD WELFARE COMMITTEE) உறுப்பினர் அவர்.
""சில பெற்றோர் பணத்துக்காக குழந்தைகளை விற்றுவிடுகிறார்கள். அம்மா, அப்பா, அக்கா, பாட்டி என ஒரு குடும்பமே குழந்தைகளை விற்றது சமீபத்தில் எங்களுக்குத் தெரிய வந்தது. அப்படியே விற்றாலும் அந்தக் குடும்பத்தினர் வறுமையில்தான் வாடுகிறார்கள். குழந்தைகளை விற்பதற்கு உதவும் இடைத்தரகர்கள் இதில் இலாபமடைகிறார்கள்'' என்கிறார் குழந்தைகள் நலக்குழுவின் இன்னொரு உறுப்பினரான ஆஸ்பி ஜாய்சன்.
""எங்களுடைய குழந்தைகள் நலக் குழு அரசால் நியமிக்கப்படுவது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழு இருக்கும். ஒரு தலைவரும் நான்கு உறுப்பினர்களும் இருப்பார்கள். பெற்றோர் இல்லாத குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், திருமணமாகாத பெண்ணுக்குப் பிறந்து குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்ட குழந்தைகள், பணத்துக்காக விற்கப்படும் குழந்தைகள், குறைந்த கூலி கொடுக்கப்பட்டு - அல்லது அதுவும் கொடுக்கப்படாமல் கடுமையாக வேலை வாங்கப்படும் குழந்தைகள், பிச்சையெடுக்க அனுப்பி வைக்கப்படும் குழந்தைகள், வீட்டை விட்டு ஓடி வந்து ஆதரவற்று நிற்கும் குழந்தைகள் என்று பாதிப்புக்குள்ளான எல்லாக் குழந்தைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் குழந்தைகள் நலக் குழுவின் நோக்கம். இப்படிப்பட்ட குழந்தைகளை நாங்கள் நேரடியாகப் பார்த்தாலோ, பிறர் பார்த்து எங்களுக்குத் தகவல் சொன்னாலோ, அந்தக் குழந்தைகளுக்கு அடைக்கலம் தந்து, தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்'' என்கிறார் பாலாஜி. அவரும் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்தான்.
சென்னையில் மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் இந்த குழந்தைகள் நலக் குழுக்கள் உள்ளன. குழந்தைக் குற்றவாளிகள் நீங்கலாக பாதிக்கப்பட்ட பிற குழந்தைகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறது இந்த அமைப்பு.
""அறியாப் பருவத்தில் உள்ள சில பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கான காரணத்தைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். தொலைக்காட்சி இப்போது எல்லா வீடுகளுக்கும் வந்துவிட்டது. இளம் உள்ளங்களில் தேவையற்ற எண்ணங்களை அது ஏற்படுத்துகிறது. இளம் பருவத்தில் ஏற்படும் வெறும் ஈர்ப்பை காதல் என்று நினைத்துக் கொள்கிறார்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு இளம் பெண் குழந்தையின் காதல் தெரிய வந்ததும், அதை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள். கண்டிக்கிறார்கள். தண்டனை கொடுக்கிறார்கள். அதனால் பெண் குழந்தைகள் வீட்டை விட்டு அவசரப்பட்டு ஓடி வந்து, பின்னர் நிலை தடுமாறி நிற்கிறார்கள். ஆதரவற்றுப் போகிறார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளை நாங்கள் மீட்பதுடன், அவர்களுடைய பெற்றோரிடம் பேசி எவ்வாறு குழந்தைகளிடம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கிறோம். அந்தக் குழந்தைகளுக்கும் புரிய வைக்கிறோம்'' என்கிறார் ஷீலா சார்லஸ்.
""ஒரு குழந்தை குப்பைத் தொட்டியில் வீசப்பட்டுக் கிடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குழந்தையை மீட்டு, உரிய மருத்துவம் செய்து, குழந்தைகளைக் காக்கும் இல்லங்களில் அதைச் சேர்த்துக் காப்பாற்றுவோம். ஒரு குழந்தை பிச்சையெடுக்கிறது என்றால் அந்தக் குழந்தை வறுமையின் காரணமாக தானாகவே பிச்சையெடுக்கிறதா? வேறு யாராவது குழந்தைகளைப் பிச்சையெடுக்க வைத்துப் பணம் சம்பாதிக்கிறார்களா? என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்'' என்கிறார் ஆஸ்பி ஜாய்சன்.
""சில குழந்தைகள் பெற்றோர் திட்டுவதால் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வந்துவிடுவார்கள். சிலர் பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் ஓடி வந்துவிடுவார்கள். அவர்களைப் பார்த்த யாராவது சைல்டு ஹெல்ப் லைனான 1098 - க்கு போன் செய்வார்கள். இந்த சைல்டு ஹெல்ப் லைனுடன் தொடர்பில் உள்ள தன்னார்வ அமைப்புகள் குழந்தைகளை மீட்டு எங்களிடம் ஒப்படைப்பார்கள். அதற்குப் பிறகு அந்தக் குழந்தையை நாங்கள் விசாரிப்போம். பெற்றோரிடம் திரும்பவும் அவர்களைச் சேர்த்து வைக்க முடிந்தால் சேர்த்து வைத்துவிடுவோம். பெற்றோருக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குவோம். ஒருவேளை பெற்றோரிடம் சேர்க்க முடியவில்லை என்றால் அந்தக் குழந்தைக்குத் தேவையான கல்வி, கைத் தொழில் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்வோம்'' என்றார் ஷீலா சார்லஸ்.
""குழந்தைகளைக் கடத்துவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. பணக்காரர்களின் குழந்தைகள் பணத்துக்காகக் கடத்தப்படுகின்றன. ஆனால் ஏழைக் குழந்தைகளும் கடத்தப்படுகிறார்கள். உடல் உறுப்புகளைத் திருடும் கும்பல் குழந்தைகளைக் கடத்துகிறது. பெண் குழந்தைகளைக் கடத்தி விபசாரத்தில் தள்ளும் கும்பல்களும் இருக்கின்றன.
ஹரியானாவில் பெண்களின் எண்ணிக்கை குறைவு. அங்குள்ள ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்காக வெளி மாநில பெண் குழந்தைகள் கடத்தப்பட்டு விற்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்ல, பீகார், அசாம் போன்ற வட மாநிலங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் பிற மாநிலங்களுக்கு வறுமையின் காரணமாக வேலை செய்யக் கிளம்பிவிடுகிறார்கள். அல்லது அவர்களுடைய பெற்றோராலேயே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இங்கே கிடைக்கும் உணவு கூட அங்கே கிடைக்காததுதான் காரணம்.
இப்படி குழந்தைகளுக்குப் பல விதங்களில் நீதி மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நமது சென்னையில் ரயில் நிலையங்களைக் கண்காணித்தாலே போதும், நிறைய பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாம் மீட்க முடியும்; காப்பாற்ற முடியும்'' என்கிற பாலாஜிக்கு இது குறித்து நிறையப் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியவில்லையே என்கிற ஆதங்கம் நிறையவே இருக்கிறது.