முகப்பு
தினமணி கதிர்

பருவ மழையை வால் குருவி கூட்டை வைத்து அறியலாம்!

தலித் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக "கூகை' நாவலில் எழுதிய சோ.தருமன், கோவில்பட்டியிலிருந்து சென்னை வந்திருந்தார்,

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:18 AM
பகிர்:

தலித் வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக "கூகை' நாவலில் எழுதிய சோ.தருமன், கோவில்பட்டியிலிருந்து சென்னை வந்திருந்தார், தம் புத்தக விமர்சனக் கூட்டத்தில் கலந்துகொள்ள.

எளிமையான தோற்றம்.  வெள்ளை வேட்டி, வெள்ளை அரைக்கைச் சட்டை.  மேலே ஒரு துண்டு.  பளிச்சென்று தெரியும் நரை மீசை.

""என்னை யாரும் அடையாளம் கண்டு கொள்வது சிரமம்தான்'' என்றார். ஏனென்றால் எந்தப் புத்தகத்திலும் அவருடைய புகைப்படம் வெளியானதில்லை. அவருடைய படைப்புகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தீஸிஸ் எழுதிய மாணவி, அவரை இறந்த காலத்தில் குறிப்பிட்டிருந்தாராம்.  அதை அவரிடம் தெரிவித்த போது, ""நான் செய்தது தப்பு.  உங்களைக் கொன்றுவிட்டேன்.  உங்கள் முகவரியையாவது வெளியிடுங்கள்'' என்று எழுதினாராம்.  எட்டு நூல்களுக்குப் பிறகு, இப்போதுதான் அவருடைய முகவரியைக் கொடுத்திருக்கிறாராம்.

அவரைத் தேடி வருபவர்கள் அக்கம் பக்கத்தில் அவரைப் பற்றிக் கேட்டால், ""தெரியாதுங்க'' என்பார்களாம் சிலர்.  இன்னும் சிலர், ""பழைய சைக்கிள் ஒண்ணு வச்சிருப்பாரே, அவரா?'' என்று கேட்பார்களாம். 

தி. ஜானகிராமனின் படைப்புகளில் நிறையப் பறவைகளின் பெயர்கள் அடிபடும். 

தருமன் இன்னும் ஒரு படி மேலே.  எப்படித்தான் அந்தப் பறவைகளின் பெயர்களை அறிந்து வைத்திருக்கிறாரோ? என்ற வியப்பு ஏற்படுகிறது.  ஆனால் பறவைகளின் பெயர்களை மட்டுமா இந்த மனிதர் அறிந்து வைத்திருக்கிறார்? அவற்றின் குணங்கள், செயல்கள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்திருக்கிறார்.   ஆண் பனை எது, பெண் பனை எது என்று பறவைகளுக்குத் தெரியுமாம்.  பெண் பனைகளில் காய்த்துத் தொங்குவதால், வெறும் ஓலைகள் மட்டுமே உள்ள ஆண் பனைகளில் கூடு கட்டும் என்றார்.

""பருவ மழை இந்த ஆண்டு அதிகமாக இருக்குமா, குறைவாக இருக்குமா என்பதை அவை கூடு கட்டும் உயரத்தை வைத்துக் கண்டு பிடித்து விடலாம்'' என்றார்.  ""நம் ரமணன் செய்வதை அந்தப் பறவைகள் செய்கின்றன'' என்றார் ஒரு சிறு புன்னகை கூடச் செய்யாமல்.  ""தென்மேற்குப் பருவ மழையா, வடகிழக்குப் பருவ மழையா - எந்தப் பருவமழை முதலில் வரும் என்பதை வால் குருவி தன் கூட்டின் வலது அல்லது இடது வாயிலை அமைப்பதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்'' என்றார்.  காட்டை அழித்துவிடுவதால், கூடு கட்ட மரம் தேடி அலையும் கிளி, பின்னர் பக்கத்துக் காட்டில் உள்ள மரத்தைத் தேடி அலையுமாம். 

""பலா மரத்தில் உச்சாணியில் உள்ள பழங்களை மனிதர் எடுக்கக்கூடாது என்று பழங்குடியினர் தடுப்பார்கள்.  அவை பறவைகளுக்கு.  கீழே விழுபவை மட்டுமே மனிதருக்கு'' என்றார் தருமன்.

அதே போல், பழங்குடியினர் ஆண்டுக்கு ஒரு தடவை, காட்டில் ஓரிடத்தில், வெளவால்கள் மாதிரி வேடமிட்டு நடனம் ஆடுவார்களாம்.  வெள்வால்கள்தாம் பழங்களைத் தின்று கொட்டைகளைப் போடுகின்றன.  அவைதாம் பிறகு மரங்களாக வளர்ந்து வனங்களாகின்றன.  அதனால் அந்த வெளவால்களுக்கு நன்றி தெரிவிக்கத்தான் அந்தக் கொண்டாட்டம் என்று அவர்கள் விளக்கினார்களாம்.

நாட்டின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு நான்கு வழிச்சாலைகள் அமைத்த போது வெட்டப்பட்ட மரங்கள் லட்சக்கணக்கில் இருக்கும்.  அரசாங்கமே அந்த மரங்களை வெட்டின.  ஆனால் எத்தனை மரங்களை வைத்தார்கள்? என்று தருமன் கேட்ட போது, அவர் குரலில் ஆதங்கம் வெளிப்பட்டது. 

ஒரு முறை தங்கள் வீட்டிலும் பக்கத்து வீடுகளிலும் இருந்து வெளியே வெயிலில் காய வைத்திருந்த துணிகள் சில களவு போய்விட்டனவாம். எல்லோரும் அந்தப் பக்கத்தில் நடமாடி வந்த நரிக்குறவர்களைக் குற்றம் சொன்னார்கள்.  தருமன், தன் மகனைக் கூட்டிக்கொண்டு அருகே அவர்கள் தங்கியிருந்த இடத்துக்குப் போனார்.  அங்கே உட்கார்ந்திருந்தார் ஒரு நரிக்குறவர்.  அவர் பெயர் போலிஷ்.  சுடப்பட்ட பறவைகள் மீது ஏறும்புகள் ஊர்ந்துகொண்டிருந்தன.  சில மயில் இறகுகள்.  அருகே துப்பாக்கிகள். துணி ஏதும் காணப்படவில்லை. 

""எனக்கு ஒரு மயில் இறகு தருவீங்களா?'' என்று மகன் கேட்டான்.

""எதற்கு?'' என்றார் நரிக்குறவர்.  

""அது குட்டிபோடும் இல்லியா?''

""சரி, தரேன்  ஆனா குட்டி போட்டா அதை எனக்குக் கொடுப்பியா?''

""தரேன்''

""நிச்சியமா?''

""நிச்சியமா''

பையனுக்கு மயில் இறகு கொடுத்ததும், தர்மன் ஐந்து ரூபாயை எடுத்து நரிக்குறவரிடம் நீட்டுகிறார்.  அவர் அதை ஏற்கவில்லை. 

""உன்னிடம் அதைத் தந்திருந்தேன் என்றால் அது வியாபாரம்.  இது எனக்கும் உன் மகனுக்குமான பேச்சு'' என்று ரூபாய் வாங்கிக் கொள்ள மறுத்துவிடுகிறார்.

புறப்படும்போது, ""அந்த மயில் இறகு குட்டி போடாது, பையா'' என்று குரல் கொடுத்தார் நரிக்குறவர் போலிஷ்.

வேட்டையாடப் போகும் நரிக்குறவருடன் தாமும் வருவதாகச் சொன்னார் தருமன்.

""நீங்கள் ஏன் வரவேண்டும்?  எனக்குத்தான் அது தொழில். பிராணிகள் கொல்லப்படும் வதையை நீங்கள் ஏன் பார்க்க வேண்டும்?''

என்று கேட்கிறார் நரிக்குறவர் போலிஷ்.  கடைசியில் எப்படியோ அவரை அழைத்துப் போக நரிக்குறவர் சம்மதிக்கிறார்.  காட்டில் வெளிச்சத்துக்கு நெற்றியில் விளக்குக் கட்டிக்கொண்டு நரிக்குறவர் முயல்களைத் தேடிப் போக, தருமனும் அவர் கூடவே போகிறார்.  முயல்குட்டிகள் இரண்டு செல்வதைப் பார்த்துவிட்டு, ""அதோ முயல்கள் போகின்றன சுடவில்லையா?'' என்று கேட்கிறார். 

""குட்டிகளைச் சுடுவதில்லை என்பது எங்கள் தர்மம்'' என்கிறார் நரிக்குறவர் போலிஷ்.

காட்டை அவர் வர்ணித்த விதம் அற்புதம்.  ""நீங்கள் புலியைப் பார்க்க நூறு தடவை காட்டுக்குள் போயிருப்பீர்கள். ஒரே ஒரு புலியைப் பார்த்துவிட்டும் வந்திருப்பீர்கள்.  ஆனால் உங்களை நூறு தடவை புலி பார்த்திருக்கும்''

தருமனின் வார்த்தைகளில் எந்த அலங்காரமும் இல்லை.  அவர் எழுதுவது எப்படி இருக்கிறதோ, அப்படியேதான் அவர் பேச்சும் இருக்கிறது.  கிராமப்புறங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் வாழும் அவல வாழ்க்கை, ஜமீன்தாரும் அடியாட்களும் செய்யும் அட்டகாசம், மேல்சாதிக்காரர்களின் சீண்டல்கள், துன்புறுத்தல்கள் என்று தாம் நேரில் பார்த்தவற்றையே நாவலாகப் படைத்திருக்கிறார் தர்மன்.  வதைபடுவதற்கென்றே இருக்கிற ஒரு தனி உலகில் வாழும் அப்பாவி மனிதர்களின் வாழ்க்கை, பட்டணங்களில் வசிக்கும் நம் நெஞ்சை உறைய வைக்கிறது. குறிப்பாகப் பெண்களை அவர்கள் வலுக்கட்டாயமாக அனுபவிக்கும் அநியாயம் ரத்தத்தைக் கொதிக்க வைக்கிறது.  (மலையாள எழுத்தாளர் பால் ஜக்காரியாவின் "பாஸ்கர பட்டேலர்' சிறுகதையில், அவருடைய அடியாட்களே அவரைக் கொம்பு சீவிவிட்டு, அப்பாவிப் பெண்கள் படும் அவதியை ரசிக்கும் வரிகளைப் படித்த போது, இப்படிக்கூட நடக்குமா என்று நினைத்தது உண்டு.)  தருமன் தாம் நேரில் கண்டதைத்தான் எழுதியிருக்கிறார்.  மத மாற்றத்தைக்கூட, ஓரிடத்தில் ஒரு பாத்திரத்தின் வாயிலாக வெறுப்புடன் சாடியிருக்கிறார்.

தருமனின் "கூகை' நாவலைப் படித்துவிட்டு, சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலப் பேராசியர் அழகரசன், ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ் தொகுத்த தமிழ் தலித் படைப்பிலக்கிய நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் அதன் சுருக்கம் ஒன்றைச் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார். அந்தச் சுருக்கத்தைப் படித்த பதிப்பாளர்கள், முழு நாவலையுமே மொழி பெயர்க்க முடிவெடுத்தார்கள்.  வசந்த சூர்யா என்ற பெண்மணி அந்த நாவலை ஆங்கிலத்தில் முழுதும் மொழி பெயர்க்க, ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிடி பிரஸ் அதை வெளியிட இருக்கிறது என்ற தகவலையும் தருமன் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →