மக்களோடு பழகி ...
மாடியில் நின்று கொண்டு கீழே பார்த்தாலே சிலருக்குத் தலை சுற்றும். ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலத்தில் நின்று
மாடியில் நின்று கொண்டு கீழே பார்த்தாலே சிலருக்குத் தலை சுற்றும். ராமேஸ்வரம் பாம்பன் ரயில்வே பாலத்தில் நின்று கொண்டு, வீசும் காற்றின் வேகத்தில் தடுமாறாமல், புகைப்படங்களை எடுத்திருக்கிறார் ஓர் இளம் பெண் என்றால் நம்ப முடிகிறதா?
அந்த இளம் பெண் சாய் பிரியா. சென்னை அம்பத்தூரைச் சேர்ந்தவர்.
புகைப்படம் எடுப்பதற்காக அலகாபாத், வாரணாசி, மதுரா, ஆக்ரா, டெல்லி, ஜெய்ப்பூர், உதய்ப்பூர், திருச்சூர் என்று எப்போதும் கேமிராவும் கையுமாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். சாய் பிரியா படித்திருப்பதோ எம்.எஸ்ஸி டெக்ஸ்டைல்ஸ். அப்புறம் எப்படி புகைப்படக் கலையில் ஆர்வம் வந்தது? சாய் பிரியாவிடமே கேட்டோம்.
""என்னுடைய அப்பா பெங்களூருவில் வேலை செய்த போது, நானும் அவரும் நீண்டதூரம் நடந்து செல்வோம். அப்போது நான் புகைப்படங்களை எடுத்தேன். அதைப் பார்த்த எல்லாரும் பாராட்டினார்கள். நான் எடுத்த புகைப்படங்களை ஃபேஸ் புக்கில் வெளியிட்டேன். அவற்றைப் பார்த்துவிட்டு, நிறைய பாராட்டுகள். என்னுடைய புகைப்படங்களில் லைட்டிங், கேமிரா கோணம் எல்லாம் மிகச் சிறப்பாக இருப்பதாகச் சொன்னார்கள். பாராட்டுகள் தந்த உற்சாகத்தால், நானே புகைப்படக் கலையைக் கற்றுக் கொண்டேன். இணைய தளங்களின் மூலமாகவும், புத்தகங்களின் மூலமாகவும், பிறர் எடுத்த சிறந்த புகைப்படங்களைப் பார்த்தும் நிறையக் கற்றுக் கொண்டேன்.
சென்னையில் உள்ள போட்டோகிராபி கிளப்புகளில் சேர்ந்து, அவர்களுடன் பல இடங்களுக்குச் சென்று புகைப்படங்களை எடுத்தேன். தொலை தூரங்களுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது.
அலகாபாத் சென்று சாதுக்கள் கங்கையில் நீராடுவதைப் புகைப்படம் எடுக்க விரும்பினேன். அதற்காக அதிகாலை 4.30 மணிக்கே கங்கை நதியின் நீரில் நின்று கொண்டு காத்திருந்தேன். சாதுக்கள் குழு குழுவாக வந்து நீராடுவார்கள். கோபக்காரர்கள். புகைப்படம் எடுப்பதைப் பார்த்தால் அடிக்க வந்துவிடுவார்கள். ஆனாலும் துணிச்சலாகப் புகைப்படங்களை எடுத்து வந்தேன்.
அதேபோன்று, ராஜஸ்தானில் புகைப்படம் எடுக்கும்போதும், நிறைய பிரச்னைகளைச் சந்திக்க நேர்ந்தது. புகைப்படம் எடுப்பதைப் பார்த்ததும் பெண்களே என்னைக் கல்லால் அடித்தார்கள். புகைப்படம் எடுத்தால் ஆயுள் போய்விடும் என்ற
நம்பிக்கையில் இருப்பவர்கள் அவர்கள்.
மதுராவில் ஹோலிப் பண்டிகையை படம் எடுக்கும்போது என்னுடன் வந்த பலரையும் விட்டுவிட்டு, ஒரு பெண்ணாகிய என் மீது சாயத் தண்ணீரையும், பொடியையும் வேண்டுமென்றே வீசினார்கள். இப்படிப்பட்ட பிரச்னைகள் இருந்தாலும் எங்கே நான் புகைப்படம் எடுக்கச் சென்றாலும் சாதாரண மக்களுடன் பழகி, அவர்களுடன் தங்கியிருப்பேன். அப்போதுதான் மக்களுடைய வாழ்க்கையையும், கலாசாரத்தையும் நன்றாகப் புகைப்படம் எடுக்க முடியும்.
பறவைகளை நான் நினைத்தது போல ஒரு புகைப்படம் எடுக்க சில சமயங்களில் பல மணி நேரங்கள் கூட ஆகிவிடும். புகைப்படம் எடுக்கும்போது பறவை அசைந்துவிடும். இல்லையென்றால் பறந்துவிடும்.
பெண் என்றால் அடக்க ஒடுக்கமாக வீட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர் என் தந்தை. ஆனால் தொலைக்காட்சிகளிலும், நாளிதழ்களிலும் என்னைப் பேட்டி எடுக்க வந்ததைப் பார்த்ததும் என்னிடத்திலும் திறமை இருப்பதை அறிந்து இப்போது புகைப்படம் எடுக்கச் செல்வதை அவர் தடுப்பதில்லை.
ஆரம்பம் முதல் என் புகைப்பட ஆர்வத்தைப் பாராட்டியவர், என்னுடைய புகைப்படங்கள் கண்காட்சிகளில் இடம் பெற்றபோது மகிழ்ந்தவர் என் அம்மா. அவர் இப்போது இல்லை என்பதைவிட துயரம் வேறு எதுவும் எனக்கு இல்லை.
கர்நாடகத்தில் எருது ரேûஸப் புகைப்படம் எடுக்கும்போது பாய்ந்து வந்த எருதுவிடம் இருந்த தப்பிக்க ஓடிச் சென்று விழுந்ததில் கால்களில் அடிபட்டுவிட்டது. அறுவைச் சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. இருந்தாலும் புகைப்படம் எடுப்பதில் எனக்குள்ள ஆர்வம் என்றும் குறையப் போவதில்லை'' என்கிறார் சாய் பிரியா மகிழ்ச்சியுடன்.
சாய் பிரியாவுக்கு இருப்பது புகைப்படக் கலையில் ஆர்வமா? வெறியா? என்ற சந்தேகம் தோன்ற விடை பெற்றோம்.