விசிலில் இசைப்பவர்!
ஒருவர் எவ்வளவு நேரம் விசிலடிக்க முடியும்? ஐந்து நிமிடம்? பத்து நிமிடம்? ஒரு மணி நேரம்? 18 மணி நேரங்கள்
ஒருவர் எவ்வளவு நேரம் விசிலடிக்க முடியும்? ஐந்து நிமிடம்? பத்து நிமிடம்? ஒரு மணி நேரம்? 18 மணி நேரங்கள் விசிலடித்து அல்ல; பாடல்களை விசிலில் இசைத்து சாதனை செய்திருக்கிறார் ஸ்வேதா. சென்னை "சாதகப் பறவைகள்' இசைக் குழுவினர் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அவருடைய சாதனை, INDIA BOOK OF RECORDS, ASIA BOOK OF RECORDS, TAMILNADU BOOK OF RECORDS ஆகியவற்றில் இடம் பெற்றிருக்கிறது.
ஸ்வேதா படித்திருப்பது பி.எஸ்ஸி விஷுவல் கம்யூனிகேஷன், டிஎஸ்டி எடிட்டிங் & சவுண்ட் எடிட்டிங். ஒரு திரைப்படத்துக்கு அசிஸ்டெண்ட் எடிட்டராக வேலை செய்திருக்கிறார். ஆனால் படம் வெளிவரவில்லை. அவருக்கு பரத நாட்டியமும் தெரியும். என்றாலும் சாதனை என்னவோ இசையில்தான்.
""எப்படி உங்களால் முடிந்தது?'' என்ற கேள்வியோடு ஸ்வேதாவை அணுகினோம்:
""பள்ளியில் படிக்கும்போது என் பெற்றோர் என்னை பாட்டு கிளாஸ், நடன வகுப்பு ஆகியவற்றில் சேர்த்துவிட்டனர். ஐந்தாவது படிக்கும்போது "இசை மொட்டுகள்' குழந்தைகள் இசைக்குழுவில் சேர்ந்து - 10 வயதிலேயே - மேடையில் பாட ஆரம்பித்துவிட்டேன். அப்போது புல்லாங்குழல் இசை என்னை ஈர்த்துவிட்டது. புல்லாங்குழல் கற்றுக் கொள்ள விரும்பினேன். ஆனால் அது முடியவில்லை. புல்லாங்குழல் இசை போல உள்ள விசில் ஊதிப் பழகினேன். பாடல்களை விசிலில் பாடினேன். கேட்க நன்றாக இருந்தது. எல்லாரும் பாராட்டினார்கள்.
அதற்குப் பிறகு "இந்தியன் விசிலர் அசோசியேஷன்' இல் சேர்ந்தேன். மைக்கை எப்படிப் பயன்படுத்துவது? மேடையில் விசில் கச்சேரி செய்வது எப்படி? என்பனவற்றைக் கற்றுக் கொண்டேன்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு "சாதகப் பறவைகள்' இசைக் குழுவில் சேர்ந்தேன். அப்போது நான் 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். முதன்முதலாக "இளைய நிலா' என்ற பாடலை விசிலின் மூலம் மேடையில் இசைத்தேன். அதைக் கேட்டவர்கள் பயங்கரமாக உற்சாகப்படுத்தினார்கள். சாதகப் பறவைகள் சங்கர் சார் கச்சேரி நடக்கும்போதெல்லாம், குறைந்தது 3 பாடல்களையாவது விசிலின் மூலம் இசைக்க எனக்கு வாய்ப்பளிப்பார்.
ட்ரம்ஸ் குமரன் என்பவர் உலக ரிக்கார்டுக்காக ட்ரம்ஸ் வாசித்தைக் கேட்க நானும் எனது அப்பா, அம்மா, சங்கர் சார் எல்லாரும் போனோம். அப்போதுதான் உலக ரிக்கார்டுக்காக நாமும் ஏன் பாடல்களை விசிலில் இசைக்கக் கூடாது? என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு எல்லாரும் ஊக்கமளித்தார்கள்.
எந்தச் சாதனை செய்ய நினைத்தாலும் அதற்கு முறையான பயிற்சி தேவை. முதன்முதலில் விசிலில் இசைக்க நுரையீரலுக்குப் பயிற்சி தேவை. காற்றைத் "தம்' கட்டி நிறுத்த வேண்டும். அதற்காகத் தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சிகள் செய்தேன்.
அடுத்து தொடர்ந்து பல மணி நேரங்கள் பாடல்களை விசிலில் சோர்வில்லாமல் இசைக்க வேண்டும். அதற்காக 4 மணி நேரங்கள் தொடர்ந்து பாடல்களை விசிலில் இசைக்க ஒரு மாதம் பயிற்சி செய்தேன். அடுத்த மாதம் 8 மணி நேரங்கள், அதற்கு அடுத்த மாதம் 12 மணி நேரங்கள் எனத் தொடர்ந்து பயிற்சி செய்து 18 மணி நேரங்கள் தொடர்ந்து விசிலில் பாடல்களை இசைக்க பயிற்சி செய்தேன். இப்படிப் பயிற்சிகள் செய்ததால்தான் என்னால் தொடர்ந்து 18 மணி நேரங்கள் விசிலில் பாடல்களை இசைத்துச் சாதனை செய்ய முடிந்தது.
ஆனாலும் தொடர்ந்து பல மணி நேரங்கள் விசிலில் பாடல்களை இசைத்ததால், வாய் உலர்ந்து, உதடு உலர்ந்து போகும். உதடு வெடித்துப் போகும். மைக்கை கைகளில் தொடர்ந்து பல மணி நேரங்கள் பிடிப்பதால் கைகள் வலிக்கும். இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் இந்தச் சாதனையை என்னால் செய்ய முடிந்தது.
தொடர்ந்து 18 மணி நேரங்கள் விசிலின் மூலம் பாடல்களை இசைக்க, நிறையப் பாடல்களைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. ஏற்கெனவே பாடிய பாடல்கள் திரும்பவும் இடம் பெறக் கூடாது என்பதற்காக பழைய, புதிய பாடல்களைத் தேடித் தேடி தேர்வு செய்தோம். தமிழ் மட்டுமல்ல, இந்திப் பாடல்களையும் இணைத்துக் கொண்டோம்.
இந்தச் சாதனைக்கு அடுத்து International Whistlers Convention நடத்தும் உலக அளவிலான பெரிய போட்டியில் பங்கேற்று சாதனை செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. இந்தப் போட்டி ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் நடக்கும்.
முழுக்க முழுக்க கர்னாடக சங்கீதத்தை மட்டுமே விசிலால் இசைக்க வேண்டும்; முழுக்க முழுக்க இந்துஸ்தானி இசையை மட்டுமே விசிலால் இசைக்க வேண்டும்; மேற்கத்திய இசையையும் கர்னாடக சங்கீதத்தையும் கலந்து ஒரு விசில் கச்சேரி செய்ய வேண்டும் என நிறைய ஆசைகள் உள்ளன.
என்னுடைய சாதனைகளுக்குப் பின்னால் என் பெற்றோர் இருக்கிறார்கள். சிறுவயது முதற்கொண்டு எனக்கு இசை கற்றுக் கொடுத்து, மேடைகளில் பங்கேற்க வைத்து, எல்லா இடங்களுக்கும் என்னை அழைத்துச் சென்று எனக்குத் தூண்டுதலாக இருப்பவர்கள் பெற்றோரே. நான் பாடும்போது, விசிலால் பாடல்களை இசைக்கும்போது ஏற்படும் பல்வேறு குறைகளைச் சுட்டிக்காட்டி நான் சாதனை செய்யும் அளவுக்கு என்னை வளர்த்திருக்கிறார் எனது மாஸ்டர் ஸ்டாலின். எனது பெற்றோரும், மாஸ்டரும், சாதகப் பறவைகள் சங்கரும் இல்லையென்றால் என்னால் எதையும் சாதித்திருக்க முடியாது'' என்கிறார் ஸ்வேதா.